Published:Updated:

``இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்!'' - மருத்துவர் விளக்கம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தால் சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாது... கொரோனாவை எதிர்கொள்ளுமா இந்தியா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, இன்றைய தேதிக்கு 1,00,000-த்தை தாண்டிவிட்டது. இறப்புகளின் எண்ணிக்கை 4,000-த்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 43 பேரை பாதித்துள்ளது. எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இந்தியா முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச விமான நிலையங்களில், கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் அனைவருக்கும், கொரோனா ஸ்க்ரீனிங் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்

பயணிகள் கண்காணிப்பு குறித்துப் பேசியிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ``ஜனவரி மாதம், முதன்முதலில் வெளியான கொரோனா இறப்பு அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே சர்வதேச விமானப் பயணிகள் அனைவரும் க்ளோஸ் மானிடரிங்கில் இருக்கின்றனர்" எனக் கூறியிருந்தார். அவர் குறிப்பிடும் அந்த நாள் ஜனவரி 17.

மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராட மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த வார இறுதிக்குள் புதிய ஆய்வுக்கூடங்களைத் திறக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன். இருப்பினும், இந்த முன்னேற்பாடுகள் மட்டுமே இந்தியாவை கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவுமா ?

கொரோனா அச்சம்
கொரோனா அச்சம்
கொரோனா வைரஸ்... தொற்றாமலிருக்க இவற்றையெல்லாம் தொடாதீர்கள்! #VikatanPhotoCards

அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பாசிட்டிவ்வான விஷயம், விமான நிலையங்களில் கண்காணிக்கப்படும் நபர்கள் அனைவரும் அடுத்த 14 நாள்களுக்கும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றனர். காரணம், உலக சுகாதார நிறுவனம் சார்பில் தரப்பட்ட ஓர் அறிக்கையில், `கொரோனா பாதிப்பு, எல்லோருக்கும் முதல் நாளே தனது அறிகுறியை வெளியில் காட்டிவிடாது. இதன் நோயரும்பு காலம் 14 நாள்கள். இடைப்பட்ட நாள்களில், எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தெரியலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இந்திய அரசு இந்த விஷயத்தில் சரியாக இயங்குகிறதென்றே சொல்ல வேண்டியுள்ளது.

இந்த 14 நாள்கள் தொடர் ஃபாலோ அப், முறையாக நடக்கிறதா என்ற பயம் சிலருக்கு ஏற்படலாம்.

கடந்த மாதத்தில் பணி நிமித்தமாக ஜப்பான் சென்று வந்திருந்தார் திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் மயிலன் சின்னப்பன்.

அவர், தன் சொந்த அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொண்டார். ``நான் பயணம் சென்று வந்த பின்னான 14 நாள்களுமே, தினம் காலையில் எனக்குச் சுகாதாரத்துறையிலிருந்து போன் வரும். எனக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளனவா என்று அவர்கள் என்னிடம் கேட்பார்கள். மூன்றாம் நாள் பேசும்போதுதான் நானே மருத்துவர்தான் என்ற விஷயத்தை அவர்களிடம் சொன்னேன்.

மருத்துவர் மயிலன் சின்னப்பன்
மருத்துவர் மயிலன் சின்னப்பன்

`நானே மருத்துவர்தாங்க. ஆகவே, அறிகுறிகளை நிச்சயம் உதாசீனப்படுத்த மாட்டேன். நீங்க தினமும் போன் செய்ய வேண்டிய அவசியமில்லை' என்று அவர்களிடம் சொன்னபோது, `எதுவாக இருந்தாலும், உங்கள் நலனை உறுதிசெய்துகொள்ளும் கடமை எங்களுக்கு இருக்கிறது' என எதிர்தரப்பில் சொன்னார்கள். இதுமட்டுமன்றி, நான் எந்தெந்தப் பகுதிகளுக்கெல்லாம் பயணித்தேன், பயணத்தின்போது நான் சென்று வந்த இடங்கள் என்னென்ன, கூட்டமான பகுதிகளுக்குச் சென்றேனா, மருத்துவமனைகளுக்குச் சென்றேனா என்றெல்லாம் கேட்டார்கள். இது எனக்கு மட்டுமல்ல, என்னோடு பயணித்த அனைவருக்குமே நிகழ்ந்துள்ளது. இந்த அனுபவங்கள் அனைத்தையும் அடிப்படையாக வைத்துச் சொல்கிறேன்... பயணிகள் விஷயத்தில் அரசு நிச்சயமாக மெத்தனம் காட்டவில்லை!" என்றார் மயிலன் சின்னப்பன்.

கொரோனா சந்தேகங்களும் உலக சுகாதார நிறுவனத்தின் விளக்கங்களும்! #VikatanPhotoCards

உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள 14 நாள்கள் நோயரும்பு காலமென்பது, ஒரு சில நேரம் நபருக்கேற்ப மாறுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அந்தவகையில், ஆய்வொன்றில் 24 நாள்கள்வரை இந்த நோயரும்பு காலம் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாட்டில், அரசு சார்பில் விசாரிக்கப்பட்டால் மட்டுமே அறிகுறிகள் குறித்து வாய்திறப்போம் எனச் சொல்வது சரியான நிலைப்பாடாக இருக்காது என்பதால், மக்களான நம் மத்தியில் முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா
கொரோனா
நம் மக்கள் மத்தியில் இந்த நோய்த்தொற்று குறித்த பயம், தேவையான அளவு இல்லை. மிகவும் அலட்சியமாகவே இதை அனைவரும் அணுகுகின்றனர்.
மருத்துவர் மயிலன் சின்னப்பன்

இதற்கான காரணமாக, பிற தொற்றுநோய்களுக்கு இந்தியா எப்படிச் செயல்பட்டது என்பது குறித்துப் பேசினார் மருத்துவர் மயிலன் சின்னப்பன். `` ரத்தத்தின் மூலம் பரவும் மருந்தில்லாத தொற்றுகளுக்கு இருந்த பயம்கூட காற்றில் பரவும் தொற்றுக்கு இருக்கவில்லை. உண்மையில், பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தால் சிறு துரும்பைக்கூட இங்கே அசைக்க முடியாது. இத்தனை மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், அரசு, தனிநபரை அணுகி விழிப்புணர்வைத் தருவது சாத்தியமில்லாத விஷயம். மக்கள்தான் ஒருவருக்கொருவர் முன்னின்று வழிநடத்தி, கூட்டங்களைத் தவிர்ப்பது - தேவையான சூழல்களில் மாஸ்க் அணிந்து கொள்வது - பயணத்தைத் தவிர்ப்பது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்" என்றார் அவர்.

மக்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே, கொரோனா எனும் விஷக்கிருமியை நம்மால் வெல்ல முடியும்!
மருத்துவர் மயிலன் சின்னப்பன்

போலியோ - பன்றிக்காய்ச்சல் - நிபா - டெங்கு போன்ற தொற்றுப்பிரச்னைகள் வேகமாகப் பரவிய சூழலில் இந்திய சுகாதாரத்துறை தன்னாலானவரை அவற்றைச் சிறப்பாகவே எதிர்கொண்டது. குறிப்பிட்ட நோய்களின் வைரஸ்கள் பரவிய போது, அவற்றைத் தடுக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள், கட்டுப்படுத்த அரசு காட்டிய தீவிரம் போன்றவையும் கவனிக்கத்தக்கவை.

கொரோனா
கொரோனா
கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனவா மத்திய மாநில அரசுகள்? #CoronaVirus

``ஆனால், அரசை எல்லா சூழலிலும் பாராட்ட மட்டுமேவும் முடியாது. காரணம், மற்ற உலக நாடுகளின் மருத்துவ வசதிகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் சுகாதாரத்துறை செயல்பாடுகள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன" என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
விகடன்

``துறையின் செயல்பாடுகளில் சிக்கலிருப்பது, மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை என ஏராளமான பிரச்னைகள் இந்தியாவில் இருக்கின்றன. ஒருவேளை கொரோனா இங்கு தன்னை வீரியப்படுத்திக்கொண்டால், அதை எதிர்கொள்ளும் சக்தியோ, அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் சக்தியோ நம் நாட்டில் நிச்சயம் இல்லை. மருத்துவத்துறையில் அத்தனை பின்னடைவுகள்! இங்கு கொரோனா பரவுவது குறைவாக இருக்குமென சிலர் சொல்லக் கேட்கமுடிகிறது.

காற்றில் பரவும் ஒரு தொற்றை அவ்வளவு லேசான விஷயமாக நாம் கடந்துவிடுவது நல்லதல்ல.
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
கொரோனா
கொரோனா
இந்தியாவைப் பொறுத்தமட்டில் இருமல், தும்மல், எச்சில் போன்றவற்றின் வழியே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் காசநோய்க்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் தோராயமாக 3.5 லட்சம் உயிர்களைப் பலிகொடுக்கிறது இந்த அரசு. குணப்படுத்த முடிந்த ஒரு தொற்றுக்கே, ஒவ்வொரு வருடமும் இத்தனை உயிர்களை நாம் இழக்கிறோம் என்பதைப் பார்த்தபிறகு, கொரோனாவை இவர்கள் தடுப்பார்கள் என எதை வைத்து நம்புவது?
மக்கள் களத்தில் இறங்க வேண்டும்!
கொரோனாவை கடக்க, அரசை நம்புவதோடு மக்களும் களத்தில் இறங்கி விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
கொரோனா
கொரோனா

அதேநேரம் அரசைக் குறைசொல்லிவிட்டு, மக்கள் மட்டுமே பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர முயல வேண்டுமென்றும் கூற இயலாது. அரசு தன்னுடைய மிகச்சிறந்த பங்களிப்பை, இந்த முறையாவது (கொரோனா கட்டுப்படுத்தலில்) காட்ட வேண்டும். அந்த முயற்சிகளில், தங்களின் சிறப்பான பங்களிப்பை மக்கள் தர வேண்டும். முக்கியமாக அறிகுறிகள் தெரியவந்தவுடன், முதல் நிலையிலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது, தன்சுத்தம் பேணுவது போன்றவற்றைச் செய்ய வேண்டும்!" என்கிறார் அவர்.

சில தினங்களுக்கு முன், உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையொன்றில் `உங்கள் நாட்டில் பாதிப்பு இருக்கிறதோ இல்லையோ... அனைவரும் அனைத்துக்கும் தயாராகவே இருங்கள். மருத்துவ இருப்புகளை எப்போதும் உறுதிசெய்து கொண்டே இருங்கள்' என வலியுறுத்தியிருந்தது. இந்தியா தயார் நிலையில் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கும் இதுதான் விடை. இந்தியா தயாராக இருக்கிறதோ இல்லையோ, நாம் அனைவரும் தயாராக இருப்போம். நம் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்வோம்.

இணைவோம், கொரோனாவை வெல்வோம்!
கொரோனா
கொரோனா

இந்தியாவின் மிகப்பெரிய மற்றொரு பிரச்னை, சமூக வலைதளங்களில் உலாவரும் நம்பிக்கையில்லா செய்திகளை எளிதில் நம்பி ஏமாந்துவிடுவது. அந்த வகையில், கொரோனா தடுப்பு குறித்து கொரோனாவுக்கான சிகிச்சை குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை, வீட்டு மருத்துவமாகவும் சித்த மருத்துவத்தின் அடிப்படையாகவுமே இருக்கின்றன என்பதால்,

சித்த மருத்துவர் கு.சிவராமனிடம், கொரோனா சந்தேகங்களைக் கேள்விகளாக வைத்தோம். அவரின் விரிவான விளக்கத்தைக் கீழ்க்காணும் வீடியோ லிங்க்கில் காணவும்.

அடுத்த கட்டுரைக்கு