Published:Updated:

ஒற்றை சிறுநீரகத்துடன் சாதித்த அஞ்சு பாபி ஜார்ஜ்... மருத்துவம் சொல்வது என்ன?

Anju george
Anju george ( Photo: Vikatan / Kumaresan.S )

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு சிறுநீரகமே போதும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பிறகுதான் உயிரோடு இருப்பவர்களிடமிருந்து சிறுநீரகம் தானம் பெற்று மற்றொருவருக்குப் பொருத்தும் சிகிச்சை முறை வளர்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாதனைக்குப் பெயர்போன தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் சமீபத்தில், ``ஒரு சிறுநீரகத்துடன்தான் உலகப் போட்டியில் வெற்றி பெற்றேன்" என்ற அதிர்ச்சித் தகவலை ட்விட்டரில் வெளியிட்டார். உலக சாம்பியன்ஷிப், உலக தடகளப் போட்டி, காமென்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பின்ஷிப் போட்டி என அவர் பெற்ற வெற்றிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Anju george
Anju george

இத்தனை சாதனைகளையும் ஒரே சிறுநீரத்துடன்தான் பெற்றிருக்கிறார் என்பதே ஆச்சர்யமளிக்கிறது. ``என் ரத்தத்தில் யூரியாவின் அளவு எப்போதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கும். அடிக்கடி மூட்டுவலி ஏற்படும். அதைச் சமாளிக்க வலி நிவாரணிகளைச் சாப்பிடுவேன். அதனால் சில நேரத்தில் சுயநினைவை இழந்தநிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குடும்பத்தினருக்கு இருந்ததால் எனக்கும் வலி நிவாரண மாத்திரைகளுக்கான ஒவ்வாமை இருந்தது பிறகுதான் கண்டறியப்பட்டது. அதனால் வலி இருந்தால்கூட என்னால் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள முடியாது.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பரிசோதனை செய்தபோதுதான் எனக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து என்னால் விளையாட்டில் ஈடுபட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டபோது, மருத்துவர்கள்தாம் ஊக்கம் கொடுத்தனர். பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாததால் பயிற்சியைத் தொடரும்படியும் ஆலோசனை கொடுத்தனர்" என்று அஞ்சு தெரிவித்திருந்தார்.

kidney
kidney

2003-ம் ஆண்டு பாரிஸில் நடைபெறவிருந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சில வாரங்களே இருந்தபோது உடலில் வீக்கமும் அதீத சோர்வும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சிறுநீரகத்துடன் அதிக பயிற்சி எடுத்ததாலும் அதிக போட்டிகளில் பங்கேற்றதாலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

கூடுதல் உழைப்பின் காரணமாக இந்தச் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. பிரச்னை சரியாவதற்கும் தாமதாகிறது. எனவே, தடகளப் பயிற்சி போட்டிகளிலிருந்து 6 மாதங்கள் பிரேக் எடுக்க வேண்டும் என்று ஜெர்மன் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். அத்தனை தடைகளையும் சாதனையாக்கினார் அஞ்சு ஜார்ஜ்.

பிறவியிலேயே ஒரு சிறுநீரகம் இருப்பவர்கள் அல்லது சிறுநீரகம் தானம் பெற்றவர்கள், தானம் கொடுத்தவர்கள் இவர்கள் அனைவருமே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்கள் என்ற வரையறைக்குள் வருபவர்கள்தாம். ஆனால், இந்த மூன்று வகையினரின் ஆரோக்கியத்தையும் பேணுவதில் சில அம்சங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மருத்துவர் கோமதி நரசிம்மனிடம் கேட்டோம்:

``2000 பேரில் ஒருவர் ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒரு சிறுநீரகத்துடன் பிறக்கும் பலருக்கு தனக்கு அவ்வாறு இருப்பதே தெரியாது. சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும்கூட அதை அறிந்துகொள்வதில்லை. வேறு சில பிரச்னைகளுக்காகப் பரிசோதிக்கும்போதுதான் பலருக்கும் ஒரு சிறுநீரகத்துடன் பிறந்திருப்பதே தெரியும். அஞ்சு ஜார்ஜும் அப்படித்தான். அவருக்கு வேறு பிரச்னைகள் இருந்திருக்கின்றன. அதன் பரிசோதனையில்தான் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பது நெகட்டிவ்வான விஷயம் அல்ல. சிலருக்கு விஷயம் தெரியவந்த பிறகு, மிகவும் நெகட்டிவ்வாக நினைக்கிறார்கள். ஒரு சிறுநீரகத்துடன் பிறந்தவர்களுக்கு செயல்பாடுகளில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது.

பிற மனிதர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு சிறுநீரகமே போதும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பிறகுதான் உயிரோடு இருப்பவர்களிடமிருந்து சிறுநீரகம் தானம் பெற்று மற்றொருவருக்குப் பொருத்தும் சிகிச்சை முறை வளர்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 1,500 சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை உயிரோடிருக்கும் நபரிடம் பெறப்பட்டு நடைபெறும் அறுவைசிகிச்சைகள்தான்.

தானம் செய்வதர்கள் என்ன செய்ய வேண்டும்?

தானம் அளிக்கும்போது அந்த நபருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்கள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்யப்படும். சில காலம் கழித்து வந்தால், சிறுநீரகம் தானம் செய்ததால்தான் அந்த நோய்கள் வந்ததாகத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. எல்லோரையும் போல அவர்களுக்கும் நோய்கள் வரலாம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரத்தத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரில் உப்புச்சத்து போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டால் எந்தவிதப் பிரச்னை ஏற்படாமலும் இருக்கலாம்.

Liver and renal transplant surgeon Dr. Gomathy Narasimhan
Liver and renal transplant surgeon Dr. Gomathy Narasimhan

தானம் பெற்றவர்கள்

தானம் பெற்றவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்ததன் காரணமாகவே அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுகிறது. பொதுவாக, எந்தவோர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தாலும், அதை உடல் ஏற்றுக்கொள்வதற்கான மருந்து, மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ ஃபாலோ அப்களையும் சரியாக மேற்கொள்ள வேண்டும்.

அவர்களும்கூட எல்லாரையும்போல சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களுக்கென்று சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றில் பங்கேற்று சாதனை புரிபவர்கள் ஏராளம். சாதாரண விளையாட்டுகளில்கூட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் பங்கேற்கிறார்கள். பிரபல பாப் பாடகி செலீனா கோம்ஸ் சிறுநீரக அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகும் தனது துறையில் சிறந்து விளங்கி வருகிறார்.

Health (Representational Image)
Health (Representational Image)
Photo by Hush Naidoo on Unsplash
``ஒற்றை கிட்னியுடன்தான் அனைத்தையும் சாதித்தேன்!"- 17 வருட ரகசியம் உடைத்த அஞ்சு பாபி ஜார்ஜ்

ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சரியாக நிர்வகிப்பது, உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, உணவில் உப்பு அதிகம் சேர்க்காமல் இருப்பது, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது என ஆரோக்கியமான வாழ்க்கையைப் பின்பற்றினால் சிறுநீரகம் மட்டுமன்றி இதயம், கல்லீரல் என அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு