Published:Updated:

Covid Questions: தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா?

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

ரத்த உறைதல் பயத்தால் இதுவரை தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வருகிறேன். தடுப்பூசி போட்டவுடன் ரத்தம் உறைவதைத் தவிர்க்க ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளலாமா?

- திருவள்ளுவன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``நீங்கள் நினைக்கிற அளவுக்கெல்லாம் இல்லை. கோவிட் பாதிப்பில் ரத்தம் உறைதல் பிரச்னை என்பது மிகமிகக் குறைவு. ரத்தக்குழாய் சுவர்களைப் பாதிக்கும் `எண்டோதீலியல் நோய்' என்பதுதான் கோவிட் பாதிப்பின் தீவிரத்தில் ஏற்படுகிற மோசமான பிரச்னை. உதாரணத்துக்கு கொரோனா தொற்றானது நம் மூக்கு அல்லது வாய் வழியே உடலுக்குள் புகுந்தாலும், நுரையீரலைப் பாதித்தாலும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால்தான் அந்த நோயானது வீரியமாகி, உயிரிழப்புவரை போகிறது.

கோவிட் நோய்க்கு எதிராகச் செலுத்தப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் ரத்த உறைதல் பாதிப்பானது, தடுப்பூசி போடாத நிலையில் கோவிட் தொற்று தீவிரமாவதால் ஏற்படும் ரத்த உறைதலோடு ஒப்பிடும்போது மிக மிக சொற்பமே. நீங்கள் பயப்படும் அளவுக்கு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக இந்தியாவில் இதுவரை எந்தச் செய்தியும் வரவில்லை. ரத்தம் உறைதல் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் தடுப்பூசியைத் தவிர்ப்பதோ, பயத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை என நினைத்துக்கொண்டு நீங்களாக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வதோ மிகவும் தவறு.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Altaf Qadri
Covid Questions: கறுப்பு பூஞ்சையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்குமா தடுப்பூசிகள்?

ஏற்கெனவே ரத்தம் உறைதல் பாதிப்புள்ளவர்கள், ஆட்டோஇம்யூன் பாதிப்புகள் உள்ளவர்கள் என சிலருக்கு மருத்துவர்களே தடுப்பூசி போடுவதற்கு முன்பான அறிவுரைகளோடு தேவைப்பட்டால் ரத்தம் உறைதலைத் தவிர்ப்பதற்கான மாத்திரைகளையும் பரிந்துரைப்பார்கள். மற்றவர்களுக்கு அது தேவையில்லை."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு