Published:Updated:

`அவசரகால கருத்தடை மாத்திரைகள்... கவனம்!' - மருத்துவ ஆலோசனை

மாத்திரைகள்
மாத்திரைகள்

கருத்தடை முறைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன அவசரகால கருத்தடை சிகிச்சை முறை என்பவர்களுக்கு, கேள்வி பதில்களாக ஒரு சிறு விளக்கம் இங்கு.

கோவிட்-19 நோய்த் தாக்கத்துக்குப் பிறகு, உலகெங்கும் மருந்தகங்களில் காய்ச்சல், சளி மாத்திரைகளுக்கு அடுத்து அதிகம் விற்பனையாகும் மருந்துகள் எவை தெரியுமா..?

கருத்தடை மாத்திரைகள்தானாம்..!

கொரோனா க்வாரன்டீனின் ஆரம்பகாலத்தில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள்தாம் அதிகம் விற்பனையாகின என்பது போன்ற ஜாலி மீம்கள் வலம் வந்ததைப் பார்த்தோமல்லவா... அது ஜாலியான விஷயமல்ல, அதில் நிறைய சங்கடங்களும் இருக்கின்றன என்கின்றன சமீபத்தில் வந்திருக்கும் ஆய்வுத் தகவல்கள்.

க்வாரன்டீன் காலங்களில் கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறைகளின் பயன்பாடு பெருகியிருப்பது முற்றிலும் உண்மை என்று கூறும் இங்கிலாந்தின் ஆய்வு ஒன்று, இனிவரும் காலங்களில், அதாவது 2024-ம் ஆண்டு வரை, அதிக லாபத்தை ஈட்டித் தரவிருக்கும் தொழில் நிறுவனங்கள் என ஆணுறைகள் தயாரிக்கும் நிறுவனங்களான க்யூபிட் லிமிடட், ப்யூஜி லேட்டக்ஸ், கேரக்ஸ் போன்றவற்றையும், பெண்ணுறைகள் தயாரிக்கும் நிறுவனங்களான சர்ச் & டிவைட் கம்பெனி, லைஃப் ஸ்டைல் ஹெல்த் கேர் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது. வருமுன் காப்பவையான இவ்விரண்டின் வியாபாரத்துக்கு இணையாக சர்வதேசப் போட்டியில் தற்போது இருப்பது எமெர்ஜென்சி கருத்தடை மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களான பேயர், பிராமல், மேன்கைண்ட், லூப்பின் ஆகியவைதாம்.

இந்த ஆய்வு வெளியிடப்பட்ட அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தகவல் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டியதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

கோவிட் மற்றும் க்வாரன்டீன் காலத்தில், உலகளவில் கணக்கிடப்பட்ட எதிர்பாராத, திட்டமிடப்படாத கர்ப்பங்களின் எண்ணிக்கை 70 லட்சம் என்றால், அதில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு எண்ணிக்கை... அதாவது 13 லட்சத்துக்கும் மேல் என்று அதிர வைக்கிறது உலக சுகாதார அமைப்பின் இந்தத் தகவல்.

அதிலும் இந்தியாவில் திட்டமிடப்படாத கர்ப்பங்களின் சதவிகிதம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் 40% அதிகரித்துள்ளது என்று கூறுகிறது ஐபாஸ் அமைப்பு (Ipas organization). இனிவரும் நாள்களில் முறையற்ற கருக்கலைப்பு மற்றும் தாய்சேய் நல பாதிப்புகள் அதிகளவில் அதிகரிப்பதுடன், தாய்சேய் மரணங்களும் அதிகரிக்கக் கூடும் என்று FRHS India எனும் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கான இந்திய அமைப்பு கூறியுள்ளதையும் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு முறையான கருத்தடை ஆலோசனைகளை, அதிலும் அவசரகால கருத்தடை ஆலோசனைகளை வழங்கவும் அரசை அறிவுறுத்தியுள்ளது.

Tablets
Tablets

இந்தியாவில் மட்டுமன்றி, உலகெங்கிலும் இந்த கோவிட் ஊரடங்கில் கருத்தடை முறைகள் சரிவரக் கிட்டாததால், இதுவே பெரிய அச்சுறுத்தலாக மாறியிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள உலக சுகாதார அமைப்பு, அனைத்து நாடுகளையும் உடனடியாக கருத்தடை முறைகளை சீர்படுத்தக் கோரியுள்ளது.

``கருத்தடை முறைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன அவசரகால கருத்தடை சிகிச்சைமுறை?" என்பவர்களுக்கு, கேள்வி பதில்களாக சிறு விளக்கம் இங்கு.

இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் சிரோசிஸ் மரணங்கள்... காரணம் என்ன?

எமர்ஜென்சி கருத்தடை முறை என்றால் என்ன..?

- விருப்பமில்லாத, திட்டமிடப்படாத கருவுறுதலைத் தடுக்கும் சிகிச்சை முறைகள் அவசரகால கருத்தடைமுறை அல்லது எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் எனப்படுகிறது.

இந்த அவசரகால கருத்தடை முறை யாருக்கு, எப்போது பரிந்துரைக்கப்படுகிறது..?

- பாதுகாப்பில்லாத உடலுறவுக்குப் பிறகும், ஆணுறைகளில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்கும்போதும், தினசரி உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள மறந்தபோதும் தவிர, குற்ற நிகழ்வுகளான பாலியல் வன்கொடுமைகளுக்குப் பிறகும் இது பரிந்துரைக்கப்படுகிறது.

மாத்திரை
மாத்திரை

இவற்றில் பயன்படுத்தப்படும் முறைகள் யாவை..?

- ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் கர்ப்பப்பையில் பொருத்தப்படும் காப்பர்-டி ஆகியவை அவசர கால கருத்தடை சிகிச்சைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெருமளவு பயன்படுத்தப்படுபவை ஹார்மோன் மருந்துகளே...

எப்போது இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்..?

- உடலுறவுக்குப் பிறகு, குறைந்தது 12 மணி நேரத்துக்குள், அதிகபட்சம் 72 மணி நேரத்துக்குள் உட்கொள்ள வேண்டும்.

சில மருந்துகள் ஐந்து நாள்கள் வரையிலும்கூட அறிவுறுத்தப்படுகின்றன. ஆனால், இதில் உடனடியாக உட்கொள்ளும்போது, கர்ப்பமடையும் வாய்ப்புகள் குறைகின்றன என்பதால் தாமதத்தைத் தவிர்ப்பது நல்லது.

இந்த மருந்துகள் செயல்திறன் மிக்கவைதானா..?

- நிச்சயமாக.

முறையாக உட்கொள்ளும்போது 90-95% வரை செயல்திறனுடன் இவை விளங்குகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் ஹார்மோன்கள் சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியே வருவதை தடுத்தோ, சினைக்குழாய்களின் அசைவைத் தடுத்தோ விந்தணுக்கள் கருமுட்டையுடன் சேர்வதைத் தடுக்கின்றன. அல்லது கருப்பையில் கரு பதிவதைத் தடுக்கின்றன.

கருத்தடை
கருத்தடை


இவை பாதுகாப்பானவை தானா?

- பொதுவாக எந்த ஒரு மாத்திரையை உட்கொள்ளும்போதும் ஏற்படும் தலைச்சுற்றல், சோர்வு, வாந்தி, வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன இதிலும் ஏற்படலாம். ஒருசிலருக்கு மார்பகங்களில் வலியும் வயிற்றுவலியும் ஏற்படலாம். ஆனால், இதன் பக்கவிளைவுகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதால்தான் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அவசரகால கருத்தடை சிகிச்சை முறை வழங்கப்படுகிறது.

அவசரகால கருத்தடை முறையின் தேவை என்ன..?

- ஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் மட்டும் 67 லட்சம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. பாதுகாப்பற்ற, முறைகேடான கருச்சிதைவின் காரணமாக ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 20,000 பெண்கள் வரை இறக்கிறார்கள். அதாவது, 13 பெண்களில் ஒரு பெண் மரணிக்கின்றாள்.

இதற்கானதொரு தடுப்புமுறைதான், அனைவருக்குமான கருத்தடை சிகிச்சை முறைகள் மற்றும் இந்த அவசரகால கருத்தடை சிகிச்சை முறையும்.

கொரோனா: `இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்!' - தடுப்பூசி விவகாரத்தில் ரஷ்யா

இந்த மருந்துகளை அடிக்கடி உட்கொள்ளலாமா?

- ஹார்மோன்கள் என்பதால், தொடர்ந்து உட்கொள்ளும்போது இவற்றின் பக்கவிளைவுகள் அதிகமாவதுடன், செயல்திறனும் குறைகிறது. மேலும், உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சமநிலையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளையும் இவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவசரகால கருத்தடை சிகிச்சையைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. ஒரு பெண் தனது வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் உபயோகிக்காமல் இருப்பது நல்லது.


இந்த மருந்துகளால் கருச்சிதைவு ஏற்படுமா?

- இந்த ஹார்மோன் மருந்துகளால் கருச்சிதைவு ஏற்படாது.

இவற்றை கருக்கலைப்பு மாத்திரைகளாகவும் உட்கொள்ளக் கூடாது.


OTC எனப்படும் ஓவர் த கவுன்ட்டர் முறையில் இந்த மருந்துகளைப் பெறலாமா..?

- மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

அவசரகால கருத்தடை சிகிச்சை என்பது அவசரத்துக்கு மட்டுமே... தினமும் பயன்படுத்துவதற்கல்ல!

கருத்தடை
கருத்தடை

இந்த மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளனவா..?

- அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில், அளவுக்கதிகமான விற்பனையின் காரணமாக, பக்கவிளைவுகள் கருதி தமிழக சுகாதாரத்துறை இந்த மருந்துகளைத் தடை செய்திருந்தது. தற்போது தேவை கருதி இந்தத் தடை நீக்கப்பட்டிருந்தாலும், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இதை வாங்க முடியும்.


கோவிட் கால அறிவுரை..?

- உயிருக்கே ஆபத்தான முறைகேடான கருச்சிதைவையும் அவற்றின் மூலமாக ஏற்படும் மரணங்களையும் தவிர்க்க, பாதுகாப்பில்லாத உடலுறவுக்குப் பிறகு, அவசர காலக் கருத்தடை சிகிச்சைமுறை என்ற ஒன்று உள்ளது என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் வேண்டும்.

என்றாலும் இது அவசர காலத்துக்கு மட்டுமே எப்போதைக்குமானதல்ல என்பதையும் அனைவரும் உணரவேண்டும்..!

ஏனெனில், ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே, எல்லோரும் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதே நிதர்சனம்.

அடுத்த கட்டுரைக்கு