Published:Updated:

ஜூலை 4-ம் தேதியே இந்தியாவில் 3-ம் அலை தொடங்கிவிட்டதா? - நிபுணரின் கணிப்பு சரியா?

Representational Image
Representational Image ( AP Photo )

``சென்னையை எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டு ஜூலை, அக்டோபரைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டது என மொத்தம் மூன்று அலைகள் முடிந்துவிட்டன." - த.வி.வெங்கடேஸ்வரன்.

இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதம் தொடங்கும், அடுத்த ஆண்டு தொடங்கும் என்று ஒவ்வொரு நிபுணரும் ஒவ்வொரு கணிப்பைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மூத்த இயற்பியலாளர் ஒருவர் ஜூலை 4-ம் தேதியே இந்தியாவில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டது என்று கூறியிருக்கிறார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணை துணைவேந்தரும் இயற்பியலாளருமான விபின் ஸ்ரீவத்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

COVID Outbreak
COVID Outbreak

இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு ஆகியவற்றின் முறையை (Pattern) கடந்த 463 நாள்களாக அவர் கண்காணித்து வந்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு மாதிரியை உருவாக்கி இதைக் கணித்துள்ளார். ``முதல் அலையின்போது, இந்த ஆண்டு பிப்ரவரி முதலாம் வாரம் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது. பெருந்தொற்று நீங்கிவிட்டது என்று நாம் குதூகலித்த நேரத்தில்தான் இரண்டாம் அலை தீவிரமானது. கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலை தற்போதும் உருவாகியுள்ளது. அதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் ஜூலை 4-ம் தேதியே மூன்றாம் அலை தொடங்கிவிட்டது.

இரண்டாம் அலையின்போது அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துவிட்டோம். எனவே, பொதுமக்கள், நிர்வாகம் அனைத்தும் அதிக கவனத்துடனும் செயல்பட வேண்டும். புதிய அலை தொடங்கிய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அதிக கவனத்துடன் அதைக் கையாள வேண்டும்" என்று விபின் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்
புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

இயற்பியலாளர் தெரிவித்தது போல இந்தியாவில் 3-ம் அலை தொடங்கிவிட்டதா என்று மத்திய அரசின் புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேசினோம்:

``அகில இந்திய அளவில் மூன்றாவது அலை என்று கூறுவதெல்லாம் ஒருவகையான மாயத்தோற்றம் என்றுதான் கூற வேண்டும். ஏற்கெனவே டெல்லியில் கடந்த ஆண்டு ஜூலையில் முதல் அலை, அக்டோபரில் இரண்டாம் அலை, நவம்பர் - டிசம்பரில் 3-வது அலை, அண்மையில் 4-வது அலை முடிந்துவிட்டது. நோயாளிகளின் எண்ணிக்கையில் நேரும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு அலை என்று கூறப்படுகிறதே தவிர இதில் அறிவியல்பூர்வமாக எந்த வரையறையும் கிடையாது.

சென்னையை எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டு ஜூலை, அக்டோபரைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்டது என மொத்தம் மூன்று அலைகள் முடிந்துவிட்டன. ஆனால், மதுரையில் சமீபத்தில் முடிந்ததுதான் இரண்டாவது அலை. அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாவட்டங்களைக் காட்டிலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு. ஆனால், வரைபடத்தில் (Graph) பார்க்கும்போது அங்கு மூன்று அலைகள் முடிவடைந்துவிட்டன.

A health worker prepares to administer the vaccine
A health worker prepares to administer the vaccine
AP Photo / Manish Swarup

எனவே, நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் வரைபடத்தைக் கொண்டு பார்க்கும்போது மூன்றாம் அலை தொடங்கி விட்டதற்கான சாத்தியம் இல்லை. மேலும், இந்தியா முழுமைக்கு மூன்றாம் அலை என்று சொல்வதும் பொருந்தாது. இரண்டாம் அலைகூட முதலில் மகாராஷ்டிரா, பஞ்சாபில்தான் தொடங்கியது. பின்புதான் பிற மாநிலங்களில் ஏற்பட்டது.

அவ்வாறு அலைகள் ஏற்பட்டால்கூட ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஏற்படாது. குறிப்பிட்ட சில பகுதிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை ஏறி இறங்கும். நான்கைந்து இடங்களில் ஒரே நேரத்தில் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதை இந்தியாவில் இரண்டாம் அலை அல்லது மூன்றாம் அலை ஏற்பட்டது போன்று தெரியும். அதேதான் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அலை என்கின்றனர். ஆனால், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் அலை ஏற்படாது. அலையைப் பொறுத்தவரை உள்ளூர் அளவில்தான் சரியாகக் கணக்கிட முடியும்.

Health Secretary Radhakrishnan
Health Secretary Radhakrishnan

விபின் ஸ்ரீவத்சா கூறியிருப்பதுபோல் எண்ணிக்கை குறைவதை வைத்து பெருந்தொற்று நிறைவுக்கு வந்துவிட்டது என்று நினைத்துவிட முடியாது. ஆனாலும், இரண்டாம் அலையைப் போன்ற முறை (pattern) தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவர் நகரும் நிலையை (Mobility) வைத்து கூகுள் நிறுவனம் கணக்கிட்டுள்ளபடி பார்த்தால், எங்கெல்லாம் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது" என்றார் அவர்.

தமிழகத்தில் 3-ம் அலை எப்போது?

தமிழகத்தில் 3-ம் அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்:

கோவிட் தொற்றின் அலைகள் குறித்தும் அதன் உச்சம் குறித்தும் பல்வேறு கணிப்புகளை பல்வேறு அமைப்பினர் நடத்துகின்றனர். அவை அனைத்தும் நமக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களைப் பற்றித்தான் கூறுகின்றன. நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்தால் அடுத்து குறையும் என்பதும், குறைந்தால் அதிகரிக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

crowd
crowd
AP Photo/Channi Anand
கொரோனா மூன்றாம் அலை... ரஷ்யா, பிரிட்டன் நமக்கு உணர்த்துவது என்ன?

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மக்கள் அதிகளவில் புழங்கும் இடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். அதற்காகத்தான் கோயம்பேட்டிலுள்ள வியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருக்கிறோம். நாள்தோறும் 500 பேரிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது. இப்படித்தான் அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடங்களைக் கண்காணிக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 1.6 கோடி டோஸுக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் குறுகிய நாள்களில் 5 கோடி டோஸ்கள் செலுத்தும் நோக்கில் பணியாற்றி வருகிறோம். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து மற்றொரு புறம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருவாகியிருக்கும் ஆன்டிபாடி ஆகியவற்றின் மூலம் மூன்றாம் அலையையும் அதன் தீவிரத்தையும் முடிந்த அளவு தடுக்க முயல்கிறோம்" என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு