Published:Updated:

கடுக்காயும் கிராம்பும்... வாட்ஸ்அப்பில் உலா வரும் சித்த மருத்துவக் குறிப்பு உண்மையா?

கிராம்பு
கிராம்பு

அந்த வாட்ஸ்அப்பில் உலா வரும் சித்த மருத்துவக் குறிப்பு உண்மைதானா..? கிராம்பு மற்றும் கடுக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்குமா..?

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான முக்கிய அறிகுறி என்றான பிறகு நம் உடலின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை சரிபார்க்கும் `ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' (Finger Pulse Oximeter) வழக்கத்துக்கு வந்தது. பொதுவாக ஒருவரின் உடலில் உள்ள மொத்த ஆக்சிஜனின் அளவு 95 -100 என்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். இதற்குக் கீழே சென்றால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொருமுறையும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு ஆக்சிஜன் அளவைச் சோதிக்கும்போதெல்லாம் 95-க்கு கீழே சென்றுவிடுமோ என்ற பதற்றத்தில் நம் பல்ஸ் எகிறிக்கொண்டிருக்கும் வேளையில், `உங்கள் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைந்தால் அந்தப் பிரச்னைக்கு தீர்வு சித்த மருத்துவத்தில் இருக்கிறது' என்று ஒருவர் சித்த மருத்துவக் குறிப்பு தரும் ஆடியோ ஒன்று சில நாள்களாக வாட்ஸ்அப்பில் உலா வந்துகொண்டிருக்கிறது.

அந்த ஆடியோவில் மருத்துவக் குறிப்பு கூறுபவர், ``கொரோனா பரவி வரும் இந்நேரத்தில் உங்கள் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் பயப்படத் தேவையில்லை. இதற்கான சிகிச்சை முறை சித்த மருத்துவத்தில் இருக்கிறது. அந்தத் தீர்வு கடுக்காயும் கிராம்பும்தான். இவற்றுக்கு நம் உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் திறன் உள்ளது. அரை டம்ளர் தேங்காய்ப்பாலில் அரை டீஸ்பூன் கடுக்காய் தூளையோ, அரை டீஸ்பூன் கிராம்புத் தூளையோ கலந்து குடித்தால் உடலில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும்" என்று கூறுகிறார்.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்
சித்த மருத்துவர் விக்ரம் குமார்

இந்த சித்த மருத்துவக் குறிப்பு உண்மைதானா..? கிராம்பு மற்றும் கடுக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்குமா..? சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் பேசினோம்.

பரவும் கோவிட்-19 நோய்த்தொற்று... ஜிம்முக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

``சித்த மருத்துவத்தில் கிராம்பும் கடுக்காயும் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்குத் தீர்வுகளாகப் பரிந்துரை செய்யப்படுகின்றன. கிராம்பு சூரணம் மற்றும் கிராம்பு சேர்க்கப்பட்ட மருந்துகள் காய்ச்சல், சளி, நுரையீரலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன. கிராம்பு சிறந்த வலி நிவாரணியாகவும் இருப்பதால் நுரையீரலில் ஏற்படும் வலி, உடல்வலி மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்னைகளுக்கான மருந்தாகவும் பரிந்துரைக்கப்படுகிறது. கிராம்பு சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

Lungs
Lungs

இதேபோல் கடுக்காயும் நம் உடலில் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது. நம் உடலில் அபானன் மற்றும் உதானன் என்று இரண்டு வகையான வாயுக்கள் உள்ளன. அபானன் என்பது உடலில் கீழ்நோக்கிச் செல்லும் வாயு. நமக்கு மலச்சிக்கல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால் நம் உடலில் அபானன் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். உடலில் அபானன் சரியாக இருந்தால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாது.

மருத்துவர் பரிந்துரையில்லாமல் வாங்கக்கூடிய OTC மருந்துகள்... கவனிக்க வேண்டியவை!

உதானன் என்பது உடலில் மேல் நோக்கிச் செல்லும் வாயு. இது சுவாசம் சம்பந்தப்பட்டது. உதானன் சிக்கலில்லாமல் இருந்தால் மூச்சுப்பிரச்னைகள் ஏற்படாது. இந்த அபானன், உதானன் பிரச்னைகளைச் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் கடுக்காயை மருந்தாகத் தருகிறோம். மேலும் கடுக்காயில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் உடல் வலிமைக்கும் உதவுகிறது.

கடுக்காய்
கடுக்காய்

நமக்கு ஏற்படும் சுவாசம் மற்றும் உடல்நல பிரச்னைகளுக்கு இவை சிறந்த மருந்தாக இருப்பதால் கடுக்காய் மற்றும் கிராம்பைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கொரோனா பிரச்னையால் ஏற்படும் சுவாசப் பிரச்னைக்கு கிராம்பு மற்றும் கடுக்காயை மற்ற மருந்துகளுடன் சேர்த்து ஒரு மருத்துவரின் ஆலோசனையுடன் முயன்று பார்க்கலாம். ஆனால், இதுமட்டுமே தீர்வு அல்ல." என்றார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

அடுத்த கட்டுரைக்கு