Published:Updated:

முதல் பிரசவம் சிசேரியன்; அடுத்தது சுகப்பிரசவம் ஆகுமா? - விளக்கும் மருத்துவர்!

Pregnancy (Representational Image)
Pregnancy (Representational Image) ( Photo by Ryutaro Tsukata from Pexels )

இரண்டாவது கர்ப்பம் சுகப்பிரசவமாக வேண்டும் என நினைத்தால் சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

`மருத்துவக் காரணங்கள் vs மூடநம்பிக்கை சர்ச்சை' - உண்மையில் சிசேரியன்கள் எதற்காக?' என்ற தலைப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்துவிட்டு விகடன் வாசகி கலையரசி, ``முதல் முறை சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தால், இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் ஆக வாய்ப்பில்லை என்கிறார்களே... அது பற்றித் தகவல் வேண்டும்" எனக் கேட்டிருந்தார்.

கலையரசியின் கேள்விக்கு பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

Pregnancy (Representational Image)
Pregnancy (Representational Image)
Image by Pexels from Pixabay
̀மருத்துவ காரணங்கள் vs மூடநம்பிக்கை சர்ச்சை' - உண்மையில் சிசேரியன்கள் எதற்காக?

``முதலில் உங்களுக்கு முதல் பிரசவம் ஏன் சிசேரியனில் முடிந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். Non recurrent Indications என்று சொல்லக்கூடிய திரும்பத் திரும்ப வராத பிரச்னைகளுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தது என்றால் அடுத்தது உங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வாய்ப்புண்டு.

குழந்தையின் தலை கீழே இல்லாமல், புட்டப்பகுதி கீழே இருப்பது, குழந்தை குறுக்கே இருப்பது போன்ற காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தாலோ, குழந்தை வயிற்றுக்குள் மலம் கழித்துவிட்டாலோ, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, இதயத்துடிப்பில் பிரச்னை இருந்தாலோ, தாய்க்கு பிரசவவலி வராவிட்டாலோ, வலிக்கான மருந்து கொடுத்தும் வராவிட்டாலோ உங்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனாக செய்யப்பட்டிருந்தால், அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் சுகப்பிரசவத்துக்கு முயலலாம்.

இரண்டாவது கர்ப்பம் சுகப்பிரசவமாக வேண்டும் என நினைத்தால் சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கருவில் இருப்பது ஒரே ஒரு குழந்தைதான், தலை கீழே இருக்கிறது, தாய்க்கு வேற எந்தப் பிரச்னைகளும் இல்லை, இதற்கு முன் ஒரே ஒரு முறைதான் சிசேரியன் செய்யப்பட்டிருக்கிறது, அந்த சிசேரியனுக்கான தையலும் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில்தான் போடப்பட்டிருக்கிறது, கர்ப்பப்பையில் வேறு எந்த அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் VBAC, அதாவது Vaginal Birth After Cesarean எனப்படும் முறைக்கு (முதலில் சிசேரியன், அடுத்தது சுகப்பிரசவம்) முயற்சி செய்யலாம்.

முதலில் சிசேரியன் ஆன நிலையில் எல்லோருக்கும் அடுத்து சுகப்பிரசவம் நடக்குமா என்றால் நிச்சயம் வாய்ப்பில்லை. சிசேரியன் ஆனவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு அடுத்து சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதில் நிறைய ரிஸ்க்கும் இருக்கும். எனவே, பிரசவத்துக்கு முன் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்து தாய்க்கும் குழந்தைக்கும் என்ன மாதிரியான பிரச்னைகள் வரக்கூடும் எனத் தெரிந்துகொள்ளவும்.

பிரசவம் (Representational Image)
பிரசவம் (Representational Image)
ஜிகா வைரஸ் அச்சுறுத்தல்: கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் சிசுவுக்கும் பிரச்னை ஏற்படுமா?

VBAC முறையை முறையான மருத்துவமனையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். சீனியர் மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், ரத்த வங்கி என எல்லா வசதிகளும் அந்த மருத்துவமனையில் இருக்க வேண்டும். VBAC முறையை முயற்சி செய்யும்போது முந்தைய சிசேரியனில் போடப்பட்ட தையல் விட்டுப்போகலாம். கர்ப்பப்பை அழற்சி ஏற்பட்டு தாய்க்கும் குழந்தைக்கும் பிரச்னைகள் வரலாம். அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். செப்சிஸ் எனும் ஆபத்தான நிலை ஏற்படலாம். அவசரமாக சிசேரியன் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். தாய், சேய் இருவரின் உயிரிழப்புக்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதால் இந்த முடிவையும் முயற்சியையும் மிகமிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர சில தருணங்களில் சுகப்பிரசவத்துக்கு முயற்சியே செய்யக் கூடாது. நஞ்சு கீழே இருக்கும் நிலை, முன்னரே அழற்சிக்குள்ளான கர்ப்பப்பை, முதல் சிசேரியனில் ஏதோ காரணத்துக்காக மேல் பகுதியில் தையல் போடப்பட்டது போன்ற நிலைகளில் தாய், சேய் இருவருக்கும் ரிஸ்க் அதிகமென்பதால் சுகப்பிரசவ முயற்சியைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

முதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் இடையில் அதிக இடைவெளி விடாதது, தேதியைத் தாண்டியும் பிரசவ வலி வராதது, தாயின் வயது 40-ஐ கடந்துவிட்டது, பருமன், குழந்தை பெரிதாக இருப்பது, ஸ்கேனில் பழைய தையல் மிகவும் சன்னமாக இருப்பதாகத் தெரிவது போன்ற காரணங்கள் இருந்தால் அந்தப் பெண்கள் VBAC முறையைத் தவிர்த்துவிட்டு சிசேரியன் செய்துகொள்வதே பாதுகாப்பானது.

எனவே, இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட கர்ப்பிணி, தன் மருத்துவர் மற்றும் மருத்துவக் குழுவுடன் பேசி, ரிஸ்க் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆலோசித்துவிட்டு, பிறகு VBAC முறையை முயற்சி செய்வது பற்றிய முடிவெடுப்பதுதான் சிறந்தது."

அடுத்த கட்டுரைக்கு