Published:Updated:

`சோரியாசிஸை குணப்படுத்த மருந்து இருக்கிறதா?' - சித்த மருத்துவர் விளக்கம் #WorldPsoriasisDay

Psoriasis
Psoriasis

குணப்படுத்த சிரமமான பல நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் சூழலில், சோரியாசிஸ் நோய்க்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என்ற ஏக்கம் மட்டும் இன்றும் அப்படியே தேங்கிக்கிடக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலக சோரியாசிஸ் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 29-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் இந்த சோரியாசிஸ் நோயால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். குணப்படுத்த சிரமமான பல நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் சூழலில், சோரியாசிஸ் நோய்க்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என்ற ஏக்கம் மட்டும் இன்றும் அப்படியே தேங்கிக்கிடக்கிறது.

Psoriasis
Psoriasis
Vikatan

காளாஞ்சகப்படை எனப்படும் சோரியாசிஸ், காலங்காலமாக இருந்துவரும் ஒரு பிரச்னை. தோல் பண்பு நிலைகளில் ஒன்று என விவிலியத்திலும், தடிப்புத் தோல் அழற்சி என்று மருத்துவ அறிஞர்களாலும் இது கூறப்பட்டது. பிறகு தொழுநோய் வகைகளில் ஒன்று என்றார்கள். செதில் செதிலாக உதிர்வதால் இதை `லெப்ரா' என்று அழைத்த கிரேக்கர்கள், சருமத்தில் நமைச்சல் ஏற்படுவதால் `சோரா' என்றார்கள். அதிலிருந்து வந்ததே சோரியாசிஸ் என்ற பெயர். சோரா என்றால் கிரேக்க மொழியில் நமைச்சல் என்று பொருள்.

இன்னும் பல வரலாறுகளைக் கொண்ட சோரியாசிஸ் நோய்க்கு, பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சித்த மருத்துவர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் மருந்து கண்டுபிடித்தார். இதற்காக அவருக்கு 2010-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. ஜலகண்டபுரம் ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி எனப்படும் அவர், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சிகிச்சை அளித்து வருகிறார். அனுபவம் வாய்ந்த இவர் சித்த மருத்துவமும் அலோபதி மருத்துவமும் ஒருங்கிணைந்த G.C.I.M என்ற பட்டப்படிப்பை படித்தவர். சோரியாசிஸ், உயர் ரத்த அழுத்தம். விட்டிலிகோ உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்துகள் கண்டுபிடித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற இவரிடம் சோரியாசிஸ் பாதிப்பு குறித்து கேட்டோம். விரிவாகப் பேசினார்.

Dr.J.R.Krishnamurthy
Dr.J.R.Krishnamurthy

``சோரியாசிஸ் என்பது ஒரு நோயல்ல, தொற்றுநோயும் அல்ல; அது ஒரு பிரச்னை என்பதை முதலில் உணர வேண்டும். இது ஒரு ஆட்டோ இம்யூன் டிஸார்டர் என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் உடலின் எந்தப் பாகத்திலும் சோரியாசிஸ் வரலாம். மேலும், சோரியாசிஸ் பாதிப்புக்குள்ளானவருக்கு வேறு பல நோய்களும் வரலாம். இந்தப் பிரச்னைக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. தொற்றுநோய் இல்லை என்றாலும் குடும்பத்தில் யாருக்காவது பாதிப்பு இருந்தால் பிற்காலத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. தந்தை வழியிலோ, தாய் வழியிலோ, தாத்தா, பாட்டி என யாருக்காவது இந்தப் பாதிப்பு இருந்தால் அவர்களது சந்ததிக்கு சோரியாசிஸ் வர அதிக வாய்ப்பு உள்ளது. ஆண், பெண், குழந்தை என யாருக்கும் இந்தப் பாதிப்பு வரலாம். உச்சந்தலையில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் `ஸ்கால்ப் சோரியாசிஸ் (scalp psoriasis)' என்றும் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் `சோரியாடிக் ஆர்த்ரைட்டிஸ் (psoriatic arthritis)' என்றும் சொல்வார்கள்.

Psoriasis
Psoriasis

சோரியாசிஸ் சிலருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், சிலருக்கு நோய்த் தாக்குதல் முடிந்த பிறகு சகஜநிலையில் இருக்கும். ஆனாலும் எப்போது மீண்டும் வரும் என்று சொல்லமுடியாது. பாதிப்புகள் மாறி மாறி வர வாய்ப்பு உள்ளது. மற்றபடி சோரியாசிஸ் வந்தவருக்கு மனச்சோர்வு, மனஅழுத்தம் ஏற்படும். சமூகரீதியாக பாதிப்புக்குள்ளாகும் அவர், தனிமைப்படுத்தப்பட்டு அவதிக்குள்ளாவார். எனவே, மருத்துவருக்கும் நோயாளிக்கும் சோரியாசிஸ் பற்றிய புரிந்துணர்வு வேண்டும். எக்காரணம் கொண்டும் நோயாளியைவிட்டு மருத்துவர் விலகியிருக்கக் கூடாது. சருமம் செதில் செதிலாக உதிர்ந்துவிழுகிறது என்பதற்காக அவரைப் புறக்கணிக்கக் கூடாது. ஒரு மருத்துவரே நம்மைவிட்டு ஒதுங்கியிருக்கிறார் என்றால், இது தீர்க்கமுடியாத நோயாக இருக்குமோ என்ற பயம், மனச்சோர்வு அதிகரிக்கும். இதனால் சோரியாசிஸ் வீரியமடையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாதம், பித்தம், கபம் உடலில் எப்படிக் கூடுகிறதோ, குறைகிறதோ அதைப் பொறுத்தும், நாடி அமைப்பைப் பொறுத்தும் சோரியாசிஸின் தன்மை மாறுபடும். மருந்து சாப்பிடும்போது நோய் நீங்கியதுபோல் இருந்தாலும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அது வெளிப்படலாம் என்பதால் எத்தகைய பாதிப்புகள் வெளிப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து அதைக் கட்டுப்படுத்த வேண்டும். வெளிமருந்துகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும் கொடுக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் சோரியாசிஸின் உண்மை நிலையையும் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவருக்கு ஒருதடவை சோரியாசிஸ் வந்தால், அது மீண்டும் வராது என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

Psoriasis
Psoriasis

நான் பல்வேறு நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்திருந்தாலும், சுமார் 30 ஆண்டுகளாக மேற்கொண்ட பல்வேறுகட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் சோரியாசிஸ் பிரச்னைக்கு வெப்பாலை என்ற மூலிகை சிறந்த தீர்வு தருகிறது என்பதை உணர்ந்து பாதிப்பு உள்ள இடத்தில் பூசுவதற்கான வெளிப்புற மருந்தாக ஓர் எண்ணெயைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினேன். வெப்பாலை என்ற மூலிகையில் உருவாக்கப்பட்ட அந்த எண்ணெயும், உள்ளே சாப்பிடுவதற்கும் நான் சில மருந்துகளைக் கொடுக்கிறேன். மருந்து சாப்பிட்டால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடாது. தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவரின் தொடர் கண்காணிப்பு தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். சித்த மருத்துவத்துடன் தேவைப்பட்டால் அலோபதி மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு