Published:Updated:

வெறிநாயால் கடிபட்டவர்கள் நாயைப் போன்று குரைப்பார்களா?- மருத்துவர்கள் விளக்கம்

ரேபிஸ் வைரஸ் பாதிப்புக்குள்ளான நாய் கடித்தால் நிச்சயம் அந்த வைரஸ் கடிபட்டவர்களையும் பாதிக்கும். ஆனால், நாயின் நகம் உடலில் பட்டு கீறல் ஏற்படுவதால் ரேபிஸ் பரவாது.

rabies virus
rabies virus ( pixabay )

`நாய்களிடம் எச்சரிக்கை தேவை' என்ற தலைப்பில் கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதில் நாய் கடித்தாலோ, அவற்றின் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டாலோ உடனடியாகப் பிள்ளைகள் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் நாய் கடித்ததைப் பெற்றோரிடம் சொல்லாததால் ஒரு சிறுவனுக்கு ரேபிஸ் வைரஸ் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறி ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுவன் நாய் போன்று குரைக்கும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

rabies virus
rabies virus
pixabay

வெறிநாய் கடிபட்டவர்கள் நாயைப் போன்று நடந்துகொள்வார்களா, வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் உண்மைதானா என்பதைக் கால்நடை மருத்துவர் அனந்தபத்மநாபனிடம் கேட்டோம்.

"ரேபிஸ் வைரஸ் பாதிப்புக்குள்ளான நாய் கடித்தால் நிச்சயம் அந்த வைரஸ் கடிபட்டவர்களையும் பாதிக்கும். ஆனால், நாயின் நகம் உடலில் பட்டு கீறல் ஏற்படுவதால் ரேபிஸ் பரவாது. ஒருவேளை ரேபிஸ் பாதித்த நாயின் நகக்கீறல் பட்ட இடத்தில் அதன் எச்சில் பட்டால் நோய் பரவலாம். கடிபட்டவரின் உடலில் காயம், புண் இருக்கும்பட்சத்தில் அந்த இடத்தில் ரேபிஸ் பாதித்த நாயின் எச்சில்பட்டாலும் நோய் பரவும். எனவே, வீடுகளில் நாய் வளர்ப்போர் முன்னெச்சரிக்கையாக ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. நாய்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் கால்நடை மருத்துவர்களும் வருடத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம்' என்றார்.

Vikatan

அந்த வீடியோவில் ரேபிஸ் பாதித்ததாகக் கூறப்படும் சிறுவன் நாய் போன்று குரைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. நாய் கடித்து ரேபிஸ் நோய் பரவியவர்கள் நாய் மாதிரி குரைப்பார்களா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. எனவே, இதுபற்றி பொது மருத்துவர் கருணாநிதியிடம் கேட்டோம். அவர், `ரேபிஸ் வைரஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவகை தொற்றாகும். மூளை மற்றும் நரம்புப் பகுதிகளைப் பாதிப்பதால் அவர்களது நடத்தையில் மாற்றங்கள் ஏற்படலாம். ரேபிஸ் வைரஸ் பாதித்த நாய் கடித்ததால் சம்பந்தப்பட்டவரால் ஓரிடத்தில் உட்காரவோ நிற்கவோ முடியாது. ஓடுவார், கத்துவார்... இன்னும் என்னென்னவெல்லாமோ செய்வார். இது பார்ப்பதற்கு நாயைப்போன்று நடந்துகொள்வது போல இருக்குமே தவிர, நாய் போன்று குரைப்பார்கள் என்பது உண்மையல்ல.

rabies virus
rabies virus
pixabay

ரேபிஸ் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்நோயை நிச்சயம் தடுக்கலாம்' என்றார்.

ரேபிஸ் வைரஸ் கொடியது என்றாலும் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டால் நோயிலிருந்து நிச்சயம் காத்துக்கொள்ள முடியும்.