Published:Updated:

கொரோனாவுக்கு நீராவி வைத்தியம்... ஃபார்வேர்டு வீடியோவும் மருத்துவர் பதிலும்! #VikatanFactCheck

கொரோனா
கொரோனா

கொரோனா தீர்வுக்கு, டிரெண்டாகும் 'நீராவி பிடித்தல்' வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

கொரோனாவுக்கான தீர்வுகள் என்ற பெயரில் தவறான செய்திகளும் தகவல்களும்தான் சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவுகின்றன. அவற்றில் ஒன்று,`நீராவி பிடித்தால், உடலுக்குள் இருக்கும் கொரோனா வைரஸை அழித்துவிடலாம்' என்பது.

கொரோனா
கொரோனா

நீராவி, மூச்சுக்குழாய் ஆரோக்கியத்தை உறுதிசெய்கிறது என்ற அடிப்படையில், இந்தக் கருத்தை கூறியிருக்கிறார் ஒருவர். `சீனாவில்கூட நீராவி யுக்திதான் கையாளப்படுகிறது. அதனால்தான், அங்கு தற்போது பிரச்னை கட்டுக்குள் வந்துள்ளது' என கூடுதல் தகவலொன்றையும் அவர் கூறியுள்ளார்.

இந்த நீராவி வைத்தியம் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை அறிய, விகடன் சார்பாக நுரையீரல் மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸை அணுகினோம்.

நுரையீரல் மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸ்
நுரையீரல் மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸ்

`"முதல் விஷயம், கொரோனா வைரஸ் என்பது, சாதாரண சளித்தொந்தரவல்ல. சாதாரண சளியும் கொரோனா வைரஸ் தொற்றும் உடலுக்குள் ஏற்படுத்தும் தாக்கமும், பாதிப்பும் வெவ்வேறாக இருக்கும். சொல்லப்போனால், இரண்டுக்கும் அறிகுறிகளேகூட வேறுபடும். கோவிட் -19 பாதிப்பில் மூக்கொழுதல், வறண்ட இருமல், தலைவலி, வாசனையை அறியும் திறன் குறைவு போன்ற கூட்டு அறிகுறிகள் இருக்கும். சில நேரங்களில், அறிகுறிகளே இல்லாமல்கூட ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்.

கொரோனா வைரஸ், முற்றிலும் புதிதான ஒரு வைரஸ் வகை என்பதால், இதன் செயல்பாடுகளை இன்றளவும் அறிவியலாளர்களால் கணிக்கமுடியவில்லை.

அதனால்தான் தடுப்பு மருந்து - சிகிச்சை மருந்து கண்டறிவதில் இவ்வளவு தாமதம்!

நீராவி பிடித்தல் சிகிச்சை, சாதாரண சளித் தொந்தரவுக்கு சொல்லப்படும் பாட்டிவைத்தியம் மட்டுமே. கொரோனா வைரஸ் அழிப்புக்கான வழிமுறையாக அது நிச்சயம் இருக்காது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நீராவி பரிந்துரை, தவறான பரப்புரை மட்டுமே.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை
ஆவி பிடித்தல், மஞ்சள் நீர், மூலிகை சூப்... இயற்கை மருத்துவம் தரும் நோய்த்தொற்று தடுப்பு டிப்ஸ்!

நீராவி என்றில்லை, வெந்நீர் குடிப்பது / வெந்நீரில் குளிப்பது போன்றவை கொரோனா வைரஸை அழிக்கும் என்றெல்லாம்கூட ஒரு சிலர் சொல்கின்றனர். இந்தத் தகவல்களுக்கெல்லாம் அடிப்படை, `அதிக வெப்பத்தில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும்' என்ற கருத்தாக்கம்தான். அதிக வெப்பமான ஆப்பிரிக்கா போன்ற நாட்டில், கொரோனா வைரஸின் தாக்கம் மிகக்குறைவாகவே இருந்திருக்கிறது என்ற அடிப்படையில் பரப்பப்பட்ட ஒரு தகவல்தான் `வெப்பத்தில் கொரோனா இருக்காது' என்பது. எனவே, இந்தத் தகவல் நிரூபிக்கப்பட்டதில்லை.

உலகளாவிய பெருந்தொற்று நோயொன்றில் உலகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நிரூபிக்கப்படாத தகவல்களை மக்கள் யாரும் தயவுசெய்து நம்ப வேண்டாம்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள நினைப்பவர்கள், இந்தச் சூழலில்...

* நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளை உதாசீனப்படுத்தாமல் இருங்கள்

* தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்

* பிஸிக்கல் டிஸ்டன்சிங்கைக் கடைப்பிடியுங்கள்

* சுய சுத்தத்தில், அலட்சியத்தோடு இருக்காதீர்கள்

* வைரஸ் தாக்கம் குறையும்வரை, உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

வீட்டுக்குள் முடங்குதல்
வீட்டுக்குள் முடங்குதல்

இவை அனைத்தையும்விட முக்கியம், அனைவரும் பகுத்தறிவோடு செயல்படுங்கள். உங்களின் பகுத்தறிவு மட்டுமே கொரோனாவுக்கான சிறந்த தற்காப்பு" என்றார் அவர்.

மேற்குறிப்பிட்ட வீடியோ பதிவில், சீனா நோய் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டது எனச் சொல்லப்படும் கருத்திலும், ஒரு முரண் இருக்கிறது. என்னவெனில், சீனா தனது இரண்டாம் அலை கொரோனா பாதிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்னரே தொடங்கியுள்ளது.

பிஸிக்கல் டிஸ்டன்சிங்
பிஸிக்கல் டிஸ்டன்சிங்
மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19... இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?

மீண்டும் ஒருமுறை கொரோனா தங்களைத் தாக்கிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றனர் சீனர்கள். அதற்காகப் பல கெடுபிடிகளை விதித்துள்ளது சீன அரசு. ஏறத்தாழ எட்டு வாரங்களுக்கும் மேலாக முடங்கியிருந்த சீனாவின் வுஹான் பகுதி, தற்போது தனது ஊரடங்கைத் தளர்த்திக்கொள்ள தயங்கிக் கொண்டிருக்கிறதென்பது, குறிப்பிடத்தக்க விஷயம்.

சீனாவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரே முக்கியமான விஷயம், சமூக விலகல் மட்டும்தான். அதை மட்டும் கற்போமே!
அடுத்த கட்டுரைக்கு