Published:Updated:

Covid Questions: கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி ( Anupam Nath )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions : பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி கொரோனா தொற்று ஏற்படுவதால், தடுப்பூசி போடும்போது கொரோனா உள்ளதா இல்லையா என்பதை அறிய வேண்டுமா ? லேசான சளி அல்லது மூக்கடைப்பு இருந்தால் தடுப்பூசி போடலாமா ? கொரோனா தொற்று இருப்பது தெரியாமலே தடுப்பூசி போட்டால் எதேனும் பாதிப்பு ஏற்படுமா ?

-Krish, விகடன் இணையத்தில்

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோயிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

``நம்மூரில் கிடைக்கும் கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் விரைவில் வரவிருக்கும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளை எந்தவித அறிகுறிகளும் இல்லாத நபர்களுக்கும் தாராளமாகப் போடலாம். அதனால் எந்த பாதிப்பும் வராது. நம்மூரில் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். இப்போது கோடை மழை பெய்கிறது. அதனால் சிலருக்கு சாதாரண சளி, இருமல் வரலாம். இன்னும் சிலருக்கு தூசு, புகையால் அலர்ஜி இருக்கலாம். ஆஸ்துமா நோயாளிகளாக இருப்பார்கள். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இருமல் இருக்கும். இவர்கள் எல்லோரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாதவர்கள் கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டுதான் தடுப்பூசி போட வேண்டும் என்றில்லை.

பிறகு யாருக்கு டெஸ்ட் எடுத்துவிட்டு தடுப்பூசி போட வேண்டும்?

கடந்த ஒரு வாரத்தில் 2-3 நாள்களுக்கு காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருந்தவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் கொரோனா டெஸ்ட் செய்து, நெகட்டிவ் என்ற ரிசல்ட்டுடன் போட்டுக்கொள்வது நல்லது. ஏனென்றால் ஏற்கெனவே ஒரு தொற்று இருக்கும்போது அத்துடன் தடுப்பூசி போட்டால் நம் எதிர்ப்பாற்றலின் விளைவு கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு தடுப்பூசியால் வரும் அறிகுறிகளும் கொஞ்சம் மோசமாக இருக்கலாம். உதாரணத்துக்கு காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி போன்றவை வழக்கத்தைவிட வீரியமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. இதுமட்டும்தான் பிரச்னையே தவிர மற்றபடி 18 வயதுக்கு மேலான எல்லோருமே எந்தக் கவலையும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Covid Questions: முதல் டோஸ் எடுத்தபிறகு பாசிட்டிவ் ஆனால், இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும்?

அரசும் தன்னார்வ அமைப்புகளும் `தடுப்பூசி தூதுவர்கள்' என்ற முயற்சியை முன்னெடுக்கலாம். அதாவது இளம் வயதினர் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வார்கள். அவர்கள் தன்னார்வலர்களாக மாறி `நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்று எடுத்துச்சொல்லி மக்களுக்குப் புரிய வைக்கும் முயற்சி இது. முன்னணி நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் போன்று பிரபலங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம். அதன் மூலம் கடைக்கோடியிலுள்ள மக்களும் தயக்கம் தவிர்த்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருவார்கள் என்பது என் கருத்து".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு