Published:Updated:

பல் பிரச்னைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லலாமா? மருத்துவரின் வழிகாட்டல்

 பல் சார்ந்த பிரச்னைகள்
பல் சார்ந்த பிரச்னைகள்

நமக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல பிரச்னைகளுள் சாதாரண காய்ச்சல், இருமல், தலைவலிபோல் `பல்' சார்ந்த பிரச்னையும் ஒன்று. தற்போது கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருப்பதால், நமக்கு பொதுவாக ஏற்படும் மற்ற உடல்நல பிரச்னைகளுக்குக்கூட மருத்துவமனைக்குச் செல்லத் தயங்குகிறோம்.

``ஒருவருக்கு பல்லில் வலி, பல் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல்போன்ற பிரச்னைகள் ஏதாவது ஏற்பட்டால் அதனை ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்துவிட வேண்டும். இல்லையென்றால் அது பெரிதாகி மேலும் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைக்கு நேரில் செல்ல வேண்டிய தீவிர பல் பிரச்னைகளுக்கு மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு சென்றால்போதும், மற்ற பிரச்னைகளுக்கு டெலிமெடிசின் மூலமே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

பல் தொடர்பான நமக்கு ஏற்படும் எந்தெந்த பிரச்னைகளுக்கு மருத்துவமனைக்கு நேரில் செல்லலாம், எதற்கெல்லாம் டெலிமெடிசின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பல் மருத்துவர் செந்தில்குமரனிடம் பேசினோம்.

பல் மருத்துவர் செந்தில்குமரன்
பல் மருத்துவர் செந்தில்குமரன்

``ஒருவர் தனக்கு உண்டாகும் பல்வலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ஆனால், இது கொரோனா பரவிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால் பல் பிரச்னைகள் ஏற்படும் அனைவரையும் மருத்துவமனைக்கு வரச்சொல்லி நாங்கள் அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட நோயாளிக்கு ஒருவேளை கொரோனா தொற்று இருந்தால் அவரின் வாயிலிருந்து வெளிப்படும் எச்சில் திவலைகள் மூலம் நோய்த்தொற்று, சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புகள் அதிகம். அதனால் குறிப்பிட்ட சில, தீவிர பல் பிரச்னைகளுக்கு மட்டும் மருத்துவரை நேரில் சென்று பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்வது போதுமானது.

முழு ஓய்வு, குப்புறப்படுத்தல், சத்தான சாப்பாடு... தனிமைப்படுத்திக்கொள்வோர் செய்ய வேண்டியவை

யாரெல்லாம் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறலாம்?

பல் வலி (மாதிரி படம்)
பல் வலி (மாதிரி படம்)

* தாங்கமுடியாத பல்வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், வீக்கம் போன்ற தீவிர பிரச்னைகளுக்கு மட்டும் பல் மருத்துவரை நேரடியாகப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

* பல்லில் லேசான வலி, ஈறுகளில் லேசான வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லாமலே டெலிமெடிசின் முறையில் மருத்துவரை வீடியோ, ஆடியோ கால் மூலம் தொடர்புகொண்டு தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் கூறி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

* ஏற்கெனவே வேர்க்கால் (ரூட் கேனல்) சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் அவசியமிருப்பின் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளலாம்.

* புதிதாக வேர்க்கால் சிகிச்சை செய்துகொள்ள நினைப்பவர்கள் அவசரமில்லை என்றால் அந்தச் சிகிச்சையைத் தள்ளிப்போடலாம். செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம்.

* பல்லை சாதாரணமாகப் பரிசோதிக்கவும், சுத்தம் செய்யவும் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். பல் உடைந்து, நிறுத்த முடியாத ரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் செல்லலாம்.

சிகிச்சை (மாதிரி படம்)
சிகிச்சை (மாதிரி படம்)
Pixabay

* குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண பல்வலியைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால், அவர்களுக்கு ஏதாவது பல் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்லலாம்.

* தினமும் மருத்துவமனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறோம் என்பதால் முன்கூட்டியே மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்றுவிட்டுச் செல்வது நல்லது.

பாதுகாப்பு முக்கியம்!

மருத்துவர் (மாதிரி படம்)
மருத்துவர் (மாதிரி படம்)

* பல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு முதலில் உடல் வெப்பமும், கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என்றும் பரிசோதனை செய்யப்படும். பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்.

* சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் PPE கவச உடை அணிந்துகொள்வோம். ஒருவேளை நோயாளி ஏசிம்ப்டமடிக்காக இருந்தால் அவரிடமிருந்து நோய் பரவாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை உதவும்.

* ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை செய்த பிறகு 20 நிமிட இடைவெளிக்குப் பிறகே அடுத்த நோயாளிக்கு சிகிச்சை செய்வோம். இடைப்பட்ட இந்த நேர இடைவெளியில் முந்தைய நோயாளி அமர்ந்த இருக்கை, இடம் எல்லாம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

இந்த நடவடிக்கைகளால் மருத்துவமனைக்குள் நோயாளிக்கும், மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை" பல் மருத்துவர் செந்தில்குமரன்.

அடுத்த கட்டுரைக்கு