Published:Updated:

தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்னை: தவறாக ஊசிபோடும் முறை காரணமா? - மருத்துவர் விளக்கம்

Corona Vaccination
Corona Vaccination

ஆய்வுகளின் ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, தடுப்பூசி செலுத்தப்படும் முறை தவறாக இருப்பதால்கூட இத்தகைய பக்கவிளைவு ஏற்படக்கூடும் என்பது தெரிய வந்திருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகள் வெற்றிகரமாகக் களம் கண்டு சிறப்பான முறையில் தீவிர கோவிட் நோயையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தடுத்து வருகின்றன. ஆயினும் தடுப்பூசிகளால் அரிதினும் அரிதாக ஆங்காங்கே தீவிர பக்க விளைவு ஏற்படும் நிலையையும் நாம் அறிந்து வருகிறோம்.

தடுப்பூசிகளால் கிடைக்கும் நன்மை மிகப்பெரிய அளவிலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிக அரிதாக இருப்பதாலும் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதில், குறிப்பாக அடினோ வைரஸ் வெக்ட்டார் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்துள்ள `வேக்செவ்ரியா' (VAXZEVRIA) தடுப்பூசி, மற்றும் `கோவிஷீல்டு' (COVISHIELD) தடுப்பூசி, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள ஜான்சென் தடுப்பூசி ஆகியவற்றில் அரிதினும் அரிதாகத் தடுப்பூசி சார்ந்த தீவிர பக்கவிளைவான `ரத்தம் உறைதல் தன்மை' ஏற்படுகிறது.

 vaccine
vaccine
AP Photo / Manish Swarup
Covid Questions: கொரோனா குணமான பின் மாஸ்டர் ஹெல்த் செக்கப்; எத்தனை நாள்கள் கழித்து செய்துகொள்ளலாம்?

இந்தியாவைப் பொறுத்தவரை, செலுத்தப்படும் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களில் ஒருவருக்கும் குறைவான அளவிலேயே இந்தப் பக்கவிளைவு அரிதாகத் தோன்றுகிறது. இதைத் தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைதல் நிலை என்று கொள்ளலாம். தடுப்பூசி பெற்றவர்களிடைய, பெற்ற 4 - 20 நாள்களுக்குள் பின்வரும் அறிகுறிகளான...

1. அதீத தலைவலி.

2. நெஞ்சுப் பகுதியில் வலி.

3. மூச்சு விடுவதில் சிரமம்.

4. கெண்டைக்கால் தசைப்பகுதியில் அதீத வலி.

5. கண் பார்வை மங்கும் தன்மை.

6. அதீத வயிற்று வலி.

போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடிட வேண்டும்.

ஒருவேளை இது தடுப்பூசியால் ஏற்படும் அரிதான பக்கவிளைவாக இருப்பின் அதற்கு மருத்துவர் உரிய சிகிச்சையை உடனே வழங்கிடுவார்.

மருத்துவர் ரத்த அணுக்கள் பரிசோதனை செய்வார். அதில் முக்கியமாக ரத்த தட்டணுக்கள் (Platelets) 1.5 லட்சம் என்ற அளவுக்குக் கீழ் குறைவது, இந்த நிலையில் காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், தற்போது வைரஸ் வெக்ட்டார் தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த வகை தடுப்பூசிகளில் மட்டும் ஏன் இந்த அரிதான பக்கவிளைவு நேர்கிறது என்பது குறித்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வுகளின் ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, தடுப்பூசி செலுத்தப்படும் முறை தவறாக இருப்பதால்கூட இத்தகைய பக்கவிளைவு ஏற்படக்கூடும் என்பது தெரிய வந்திருக்கிறது.

தடுப்பூசி
தடுப்பூசி
Covid Questions: ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை; தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

அதாவது, தற்போது கோவிட்டுக்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் தசைகளில் செலுத்துவதற்கு உகந்தபடியே தயார் செய்யப்பட்டுள்ளன. இதை Intra Mascular Injections என்று கூறுவோம்.

ஆனால், தடுப்பூசியைச் செலுத்துபவர்கள் தவறுதலாகத் தசைகளில் செலுத்துவதற்குப் பதில், மெல்லிய ரத்த நாளங்களில், குறிப்பாக கை புஜங்களின் மேற்புறம் உள்ள சிரைகளில் தடுப்பூசியை செலுத்திவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

அவ்வாறு ரத்த நாளங்களில் நேரடியாக இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும்போது, தேவைக்கு மீறி மிக அதிகமான அளவில் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, ரத்த உறைதல் நிலையை ஏற்படுத்தக் கூடும் என்று தெரியவருகிறது. பரிசோதனை எலிகளிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முதற்கட்ட முடிவுகளும், தவறான தடுப்பூசி வழங்கும் முறை - பக்கவிளைவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது.

இத்தகைய நிலையைத் தடுக்க சில வழிகள்!

1. தடுப்பூசி வழங்கும் செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஆழ்தசை ஊசி வழங்கும் சிறு பயிற்சியை வழங்கிட வேண்டும்.

2. தடுப்பூசி வழங்கும்போது தோல் பகுதியைப் பிடித்து அழுத்தி அதில் ஊசி போடக் கூடாது. அவ்வாறு போடும்போது ரத்த நாளங்களுக்குள் ஊசி செலுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

3. செலுத்தும் தடுப்பூசியானது புஜப்பகுதியுடன் 90 டிகிரி பக்கவாட்டில் (perpendicular) இருக்குமாறு செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் கோணத்தை குறைக்கவோ மாற்றவோ கூடாது.

4. ஊசி தசைக்குள் செலுத்தப்பட்ட பின் சிரிஞ்சின் ப்ளங்கரை வெளியே ஒருமுறை இழுத்துப் பார்க்க வேண்டும். இழுக்கும்போது ரத்தம் சிரிஞ்சில் வரவில்லை எனில், ஊசி தசைப்பகுதியில் இருக்கிறது என்று பொருள். தற்போது பாதுகாப்பாக ஊசியைச் செலுத்தலாம்.

டாக்டர் 
ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

அவ்வாறு இழுக்கும்போது ரத்தம் வந்தால், ஊசி ரத்த நாளங்களுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். உடனே ஊசியை வெளியே எடுத்து விட்டு, மற்றொரு முறை சிறிது தள்ளி ஊசியை செலுத்தி, மீண்டும் இழுத்துப் பார்க்க வேண்டும். அப்போது ரத்தம் வராவிடில், ஊசி தசைக்குள் இருக்கிறது என்பதை அறிந்து தடுப்பூசியைச் செலுத்தலாம்.

மேற்சொன்ன எளிய முறைகளைத் தடுப்பூசி செலுத்தும்போது கடைப்பிடிப்பதின் மூலம், தவறுதலாக ரத்த நாளங்களுக்குள் தடுப்பூசியைச் செலுத்துவதைத் தவிர்க்க இயலும். இதன் மூலம், பக்கவிளைவு ஏற்படும் அரிய வாய்ப்பையும் குறைக்க இயலும் என்பது அறிவியலாளர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு