``கண்களில் கட்டி வந்தால் சூடு... அரிப்பு வந்தால் அலர்ஜி... கண்ணீர் வந்தால் ஸ்ட்ரெஸ்... இப்படி எல்லாப் பிரச்னைகளுக்கும் தாங்களே காரணங்களைச் சொல்லிக்கொண்டு கண் தொடர்பான பிரச்னைகளைப் பலரும் அலட்சியம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு.
கட்டி, கண்ணீர், அரிப்பு என நீங்கள் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களின் பின்னணி வேறாகவும் இருக்கலாம். அவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. அது குறித்த தகவல்களைப் பகிர்கிறார் அவர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``கண்களில் அடிக்கடி கட்டிகள் வருவது, கண்ணீர் வருவதாகச் சொல்லிக்கொண்டு நிறைய பேர் கண் மருத்துவர்களைச் சந்திக்க வருவதுண்டு. அதற்கு அவர்களே `சூடு' என ஒரு காரணத்தையும் சொல்லிக்கொண்டு வருவார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
குழந்தைகளுக்கு இதுபோன்று அடிக்கடி கண்களில் கட்டிகள் வந்தாலோ, அரிப்பு வந்தாலோ உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். அப்படியிருக்கும் குழந்தைகளுக்கு முதல் வேலையாக கண்களில் பவர் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பார்வையில் ஏதோ பிரச்னை இருந்தாலோ, சரியாகத் தெரியாவிட்டாலோ குழந்தைகளால் அதை உணர்ந்து, வெளியே சொல்லத் தெரியாது. அப்படி இருப்பதுதான் இயல்புபோல என்றே நினைத்துக்கொள்வார்கள். அதுவே பெரியவர்களுக்கு இப்படி ஏற்படும்போது உடனே சுதாரித்துக்கொள்வார்கள். ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்வார்கள்.
குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் வரும்போது கண்ணாடி தேவையா என்பதை உறுதி செய்ய வேண்டும். பெரியவர் களுக்கும் சில நேரம் இப்படி வரலாம். அவர்களுக்கு `ஆஸ்டிக்மேட்டிசம்' ( Astigmatism) எனப்படும் சிலிண்டர் பவர் இருக்கக்கூடும். அது தெரியாமல் அவர்கள் கண்ணாடியும் அணியாமல் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது கட்டிகளும் அரிப்பும் கண்ணீரும் வர வாய்ப்புகள் அதிகம்.
இதைத் தாண்டி சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறைவாக இருக்கலாம். அதன் விளைவாகவும் அடிக்கடி கண்களில் கட்டிகள் வரலாம். அடுத்தது கண் இமைகளின் சுத்தம். இமை முடிகளில் ஏதேனும் அலர்ஜியோ, தொற்றோ ஏற்பட்டாலும் கண்களில் அரிப்பு வரலாம்.

இவை தவிர கண்களில் அரிப்பு ஏற்பட இன்னும் சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம். அவை...
வீட்டுக்குள்ளேயோ, வெளியிலோ ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு உங்கள் கண்கள் ஆட்பட்டிருக்கலாம். உதாரணத்துக்கு செடி, கொடிகளின் மகரந்தம், புல், புதர்களில் இருந்து வரும் தூசு போன்றவை. வீட்டுக்குள் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், பூஞ்சை மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் ரோமங்கள் போன்றவை அலர்ஜியை ஏற்படுத்தி, கண்களில் அரிப்பும் கண்ணீரும் வரக் காரணமாகலாம். இவை தவிர சிலவகையான பெர்ஃபியூம், கெமிக்கல், சிகரெட் புகை போன்றவையும் காரணமாகலாம்.
கன்ஜங்டிவிட்டிஸ் அல்லது பிங்க் ஐ எனப்படும் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்களுக்கும் கண்களில் அரிப்பும் கண்ணீரும் இருப்பது சகஜம்.
கண் இமைகளில் ஏற்படும் வீக்கத்தை ப்ளெபாரிட்டிஸ் (Blepharitis) என்று குறிப்பிடுவோம். இமைகளுக்கு அடியிலுள்ள நுண்ணிய எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டுப் போவதால் கண்கள் சிவந்து அரிப்பெடுக்கலாம். இதற்கு முறையான கண் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

அடுத்து கண்களில் கண்ணீர் சுரக்கத் தேவையான எண்ணெய்ப் பசை, நீர்ச்சத்து, சளி போன்ற படலம் போன்றவை சரியாகச் சுரக்காவிட்டால் கண்கள் வறட்சியடையும். அதன் காரணமாக அரிப்பு அதிகரிக்கும். கண்களை வறட்சியில் இருந்து காக்கும் பயிற்சிகள் பற்றி முந்தைய அத்தியாயங்களில் பேசியிருக்கிறோம். அவற்றைப் பின்பற்றவும்.
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கமுள்ளவர்கள் அதை முறையாகச் சுத்தம் செய்து குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அணிய வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பும் கண்களில் நீர் வடிதலும் இருக்கலாம்.
தடுப்பது எப்படி?
கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவிப் பழகினோம் இல்லையா? கண்களின் ஆரோக்கியம் காக்கவும் அதைச் செய்யுங்கள்.
கண்களைக் கசக்குவது, தேய்ப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். அது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும். அலர்ஜி இருப்பது உறுதியானால் அதற்கான முறையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.

கண்களுக்கு மேக்கப் செய்பவர் என்றால் தரமான மேக்கப் பொருள்களை உபயோகியுங்கள். தூங்கச் செல்வதற்கு முன் கண்களின் மேக்கப்பை அகற்றிவிடுங்கள். உங்களுடைய காஜல், ஐ லைனர், மஸ்கார உள்ளிட்டவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கு முன்பும் பிறகும் கைகளை சுத்தமாகக் கழுவி விடுங்கள்.
- பார்ப்போம்
- ராஜலட்சுமி
பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.