Published:Updated:

கொரோனா: இட்டோலிஸுமாப் மருந்து! - மூன்றாம்கட்ட ஆராய்ச்சிக்கு விலக்கு ஏன்?

இட்டோலிஸுமாப்
இட்டோலிஸுமாப்

இட்டோலிஸுமாப் மருந்தானது, கொரோனா தொற்றால் எதிர்ப்பு சக்தி அதிகம் தூண்டப்படுவதையும், சைட்டோக்கைன் சுழலால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கிறது.

கொரோனா தொற்றுக்கு எனப் பிரத்யேக மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் ஆரம்பம் முதலே மருத்துவ உலகில் பல காலமாக மற்ற நோய்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் மருந்துகளே கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் இப்போது இட்டோலிஸுமாப் (Itolizumab) என்ற மருந்தை கோவிட்-19 நோயாளிகளுக்குப் பயன்படுத்த இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டுக்கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Corona
Corona
Unsplash

இட்டோலிஸுமாப் மருந்தைக் கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் குறுகிய காலமே நடத்தப்பட்டதும், குறிப்பாக மூன்றாம்கட்ட ஆய்வுக்கு அதற்கு விலக்கு அளிக்கப்பட்டதும், இம்மருந்துக்கான ஒப்புதல் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இம்மருந்தை அவசர சிகிச்சைக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த 'பயோகான்' நிறுவனம் கண்டுபிடித்த பயலாஜிக்ஸ் வகையைச் சேர்ந்த மருந்து, இட்டோலிஸுமாப். இது 'சோரியாசிஸ்' சரும நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள மருந்து.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் தூண்டப்படும்போது, அளவுக்கு அதிகமாக சைட்டோக்கைன்கள் சுரக்கின்றன. இதை சைட்டோக்கைன் சுழல் (Cytokine Storm) என்று கூறுவர். இந்த சைட்டோக்கைன்கள், நுரையீரல் மட்டுமல்லாது மற்ற உறுப்புகளையும் செயல் இழக்கச் செய்து இறப்பை ஏற்படுத்தக்கூடியவை.

கொரோனா: `Double-blind' முறையில் மனிதப் பரிசோதனை! - முக்கிய கட்டத்தில் கோவாக்ஸின்

இட்டோலிஸுமாப் மருந்தானது, கொரோனா தொற்றால் எதிர்ப்பு சக்தி அதிகம் தூண்டப்படுவதையும், சைட்டோக்கைன் சுழலால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கின்றது. இதுகுறித்து மும்பை மற்றும் புதுடெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் நடைபெற்ற சார்பற்ற பகுப்புமுறை ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில், இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டுக் கழகம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

'மூச்சு விடுவதில் சிரமம், சி.டி பரிசோதனையில் நுரையீரலில் நோயின் தாக்கம் காணப்படுவது ஆகிய அறிகுறிகள் ஏற்பட்ட நோயாளிகளுக்கு, இட்டோலிஸுமாப் மூலம் சிகிச்சை அளிக்கையில், அம்மருந்து சைட்டோகைன் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாவதைத் தவிர்த்து, சைட்டோகைன் சுழலைத் தடுப்பதன் மூலம் உறுப்புகள் செயலிழத்தல், ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது' என்கிறார், 'பயோகான்' நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவர் சந்தீப் அதாலே.

இட்டோலிஸுமாப்
இட்டோலிஸுமாப்

ஆனால், இந்த மருந்து குறித்த ஆய்வு சிறிய அளவிலேயே மேற்கொள்ளப்பட்டதும், 30 பேர் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து 'பயோகான்' நிறுவனம், '2013-ம் ஆண்டிலேயே ஒப்புதல் பெறப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் இட்டோஸிசுமாப், புதிய மருந்தல்ல. எனவே, அது செயல்படும் விதம் ஏற்கெனவே அறியப்பட்டதுதான்.

கொரோனா மருத்துவ அவசரநிலை காரணமாக 30 நோயாளிகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, ஆராய்ச்சி முடிவுகள் மேல்மட்டத்தில் வலுவாக ஆராயப்பட்ட பிறகே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளது. நான்காம் கட்ட ஆய்வு விரைவில் தொடங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவக் கழகம் இட்டோலிஸுமாபை கொரோனாவுக்குப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் மூன்றாம் கட்ட ஆராய்ச்சிக்கு விலக்கு அளித்து, நான்காம் கட்ட ஆராய்ச்சிக்கு, அதாவது, சந்தையில் அறிமுகப்படுத்திய பின் நோய் நிகழ்வை கண்காணித்தலுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

corona test
corona test

மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இட்டோலிஸுமாப் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளை, சிகிச்சை மேற்கொள்ளப்படாத நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், இட்டோலிஸுமாப் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 30 நாள்களில் வென்டிலேட்டர் தேவைப்படவில்லை. அறிகுறிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், ஆராய்ச்சியில் 20 நோயாளிகளுக்கு இட்டோலிஸுமாபுடன் ஆதரவு சிகிச்சையும், 10 பேருக்கு ஆதரவு சிகிச்சை மட்டுமேவும் அளிக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், இட்டோலிஸுமாப் சிகிச்சை அளிக்கப்பட்ட 20 பேரும் குணமடைந்துள்ளனர். ஆதரவு சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்ட 10 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு