Published:Updated:

`அதிகாலை திருமணம்; காய்ச்சல்.. தொடர் கண்காணிப்பில் விமானப் பயணிகள்!’ -திருச்சி ஸ்பாட் ரிப்போர்ட்

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக திருச்சியில் பல்வேறு இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக நேற்று திருச்சியில் நடைபெற இருந்த திருமணங்கள் சில ரத்து செய்யப்பட்டன. மேலும் சிலர் தவிர்க்கமுடியாத நிலையில், அதிகாலையே திருமணத்தை நடத்தினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்ற திருமண விழாவிற்குப் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மிகச் சொற்பமான அளவே உறவினர்கள் வந்திருந்தனர். திருமண விழாவிற்கு வருகை தந்த விருந்தினரைப் பன்னீர் தெளித்து வரவேற்காமல், மாஸ்க் மற்றும் கிருமிநாசினி திரவம் வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது.

அதிகாலையில் நடைபெற்ற திருமணம்!
அதிகாலையில் நடைபெற்ற திருமணம்!

இதேபோல் திருச்சி உறையூர் பகுதியில் நடைபெற்ற லியோபிரபு என்பவரின் திருமணம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் சுபாஷ் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு நடைபெற்ற திருமணங்களில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கைகளைக் கழுவியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆதரவற்றோருக்கு உணவளித்த இளைஞர்கள்!

திருச்சி மாநகரம் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாகவே காட்சியளிக்கும். திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் ஷாப்பிங் செய்ய திருச்சி வருவதால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையம், பெரியகடைவீதி, என்.எஸ்.சி.போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் களைகட்டும். ஆனால், சுய ஊரடங்கு உத்தரவையடுத்து திருச்சியில் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மூடிக்கிடக்கும் கடைகள்
மூடிக்கிடக்கும் கடைகள்

பிரதமரின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து திருச்சியில் சாலைகளில் ஆங்காங்கே வீடற்ற ஆதரவில்லாதவர்கள் படுத்துக் கிடந்தனர். அவர்களுக்கு மனிதம் தன்னார்வு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தேடிச்சென்று உணவு வழங்கினார். மேலும் அந்த இளைஞர்கள் வாயில்லாத ஜீவன்களுக்கும் உணவு வழங்கியது மெய்சிலிர்க்க வைத்தது.

ஒலித்த ஆலயமணி... கைதட்டிய மக்கள்

மாலை 5 மணியளவில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆலயமணி மற்றும் முரசு ஒலிக்கப்பட்டது. மேலும் திருச்சியில் ஆங்காங்கே மக்கள் கூடிநின்று கரவொலி எழுப்பி கொரோனா வைரஸ் தோற்று ஒழிக்கப் பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தர். இதேபோல் திருச்சி விமான நிலையம் பகுதிகளிலும், திரண்டு நின்ற ஊழியர்கள் கைதட்டி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

கண்காணிப்பில் விமானப் பயணிகள்

திருச்சி விமானநிலையத்தில் விமான சேவை முடங்கியுள்ளது. இந்நிலையில் சார்ஜா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நேற்றிரவு திருச்சி வந்த 350 பேரில் 23 பேருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தது தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையில் தெரியவந்தது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

அதையடுத்து அவர்கள் திருச்சி மணிகண்டம் அடுத்த கள்ளிக்குடி சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு