இந்தியாவில் 2021-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவர் தடுப்பூசி செலுத்தியதால் மருத்துவர்களாலேயே நம்ப முடியாத ஆச்சர்யம் நடந்துள்ளது. ஜார்க்கண்டின் பொக்காரோ நகரில் சால்காடி கிராமத்தில் வசிப்பவர் துலார்சந்த் (55).


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர் 4 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விபத்தில் சிக்கி பேச்சுத்திறனை இழந்தார். சிகிச்சைக்காக சுமார் 4 லட்சம் ரூபாய் செலவு செய்தும் அவரால் நடக்கவோ, பேசவோ இயலவில்லை. இந்நிலையில் துலார்சந்த், கோவிட் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். அடுத்த சில நாள்களில் நடக்கவும் பேசவும் செய்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.
இவரை அக்கிராமத்து மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இது எப்படி சாத்தியமானது என்று காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் வேலுமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்புகொண்டோம்.
``அந்த நபர் நடக்க ஆரம்பித்ததற்கும், குரல் பழைய நிலைக்குத் திரும்பியதற்கும் கோவிஷீல்டு தடுப்பூசிதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். முடங்கிப் போன கால்கள் செயல்படுவது, பேச்சுத்திறன் திரும்ப கிடைப்பதற்கெல்லாம் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இது குறித்த அறிவியல்பூர்வமான, மருத்துவபூர்வமான சான்றுகள் ஏதும் இல்லாத நிலையில் தடுப்பூசியால்தான் இது நிகழ்ந்தது என்று உறுதியளிக்க முடியாது என்றார் மருத்துவர் வேலுமணி.
``உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அதில் வெளிவரும் பதிலை வைத்தே நம்மால் இதற்குறிய காரணத்தைக் கண்டறிய முடியும். இது மருத்துவத்துறைக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது" என்றார் மருத்துவர் ராமகிருஷ்ணன்.