Published:Updated:

"வென்டிலேட்டர் தேவைப்படாத அளவுக்கு கொரோனா சிகிச்சை!" -குமரி நோடல் அதிகாரி தகவல்

நோடல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன்
நோடல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன்

ஆரம்பத்தில் இருந்தே ஊட்டச்சத்துள்ள உணவுகளும், நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளும் கொடுத்துவருகிறோம்.

கேரள மாநிலத்துக்கு மிகவும் நெருக்கமான எல்லை மாவட்டம் என்பதால் கன்னியாகுமரியில் கொரோனா கண்காணிப்பு ஆரம்பத்திலேயே முடுக்கிவிடப்பட்டது. இந்த நிலையில் தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த இரண்டுபேர், நாகர்கோவில், வெள்ளாடிச்சிவிளை மற்றும் மணிக்கட்டிப்பொட்டலைச் சேர்ந்த தலா ஒருவர் என ஐந்துபேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த மார்ச் மாத இறுதியில் உறுதி செய்யப்பட்டது. அதில் நான்குபேர் டெல்லியிலிருந்து வந்தவர்கள். ஒருவர் சென்னை விமான நிலையத்தில் பணி செய்தவர்.

அதன் பின்னர் இவர்களின் உறவினர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து படிப்படியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். சிகிச்சைக்குப் பின்னர் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இனி ஆறுபேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டு
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டு

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்தவர்கள் விரைவில் குணமாகியது குறித்தும், தற்போதுள்ள நிலை குறித்தும் குமரி மாவட்ட கொரோனா நோய்க்கான நோடல் ஆபீசர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த 16 பேருக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஊட்டச்சத்துள்ள உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளும் கொடுத்துவருகிறோம். தூய்மைப் பணியாளார்கள் சிறப்பாகச் செயல்பட்டு கொரோனா வார்டு முழுவதும் எப்போதும் சுத்தமாக வைத்திருந்தார்கள். அரசு அறிவுறுத்தியபடி சிகிச்சை அளித்தோம். அனைத்து மருத்துவர்களும் முழு கவச உடைகளுடன் சீரிய முறையில் பணி செய்தனர். இதனால் கொரோனா நோயாளிகளின் உடல் நிலை மோசமான நிலைக்குச் செல்லவில்லை.

88 வயது மூதாட்டி, 7 வயது மற்றும் 4 வயது சிறுவர்களும் சிகிச்சையில் இருந்தனர். அனைவரையும் தனித்தனியாக கேர் எடுத்து பார்த்துக்கொண்டோம். அதனால்தான் 16 பேரில் யாரும் சீரியஸ் நிலைக்குச் செல்லவில்லை. ஏர்ப்போட்டில் வேலை செய்தவருக்கு இருமல், சளி போன்றவை இன்னும் குறையாமல் உள்ளது. ஆனாலும் அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடாதபடி சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி

உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால்தான் மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். அந்த சமயத்தில்தான் வென்டிலேட்டர் தேவைப்படும். ஆனால், இங்கு சிகிச்சையில் இருந்த ஒருவருக்குக்கூட வென்டிலேட்டருக்கான தேவை ஏற்படாத அளவுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். கொரோனா இல்லாத நிலையை உருவாக்க மருத்துவர்கள், நர்சுகள் என அனைவரும் ஒருமுகமாக கடுமையாகப் பணியாற்றிவருகின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு