Published:Updated:

`எச்சரிக்கை, அறிவுரை மட்டுமே.. தண்டனை இல்லை!' -`கொரோனா' போரில் பாடம் கற்பிக்கும் காரைக்கால்

காரைக்கால்
காரைக்கால்

பொதுமக்கள் ஒத்துழைப்பு காரைக்காலைச் சுற்றியுள்ள தமிழக மாவட்ட அரசு எந்திரங்களை ஆச்சர்யமூட்டியது. அபராதம், நடு வீதி தண்டனை என்பதெல்லாம் இங்கு மிகமிகக் குறைவு.

கொரோனா தொற்று பரவலைத் தடுத்து காரைக்கால் மாவட்டம் பசுமை மண்டலமாகத் திகழ்கிறது. இதற்கு சுகாதாரத்துறையோடு, போலீஸ் உயரதிகாரிகள் முதல், கீழ்நிலை அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியே காரணம் என சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.

காரைக்கால்
காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. ஜனத்திரள் அதிகம் என்றபோதும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான போலீஸார்தான் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். தகவல் இடைவெளியின்றி (Communication gape) அனைவருமே புரிதலுடன் பணியாற்றினர். பொதுமக்கள் ஒத்துழைப்பு காரைக்காலைச் சுற்றியுள்ள தமிழக மாவட்ட அரசு எந்திரங்களை ஆச்சர்யமூட்டியது. அபராதம், நடு வீதி தண்டனை என்பதெல்லாம் இங்கு மிகமிகக் குறைவு. மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத்தொகைகூட புதுச்சேரியின் மற்ற பிரதேசங்களைவிட காரைக்காலில் குறைவு. மாஸ்க் அணியாவிடில் தண்டனை, அபராதம் என்பதைவிட மாஸ்க் அணியாமல் வரும் பாதசாரிகளுக்கு மாஸ்க் அணிவதன் அதிமுக்கியத்துவத்தை போலீஸார் அலுக்காமல் கூறுகின்றனர்.

வீதிகளை முடக்கி, வாகனங்களைத் தணிக்கை செய்து, போலீஸார் இரவு பகலாக இயங்கியதன் பலன் நல்விடியலாக மலர்ந்திருக்கிறது. தமிழகப் பகுதிகளைப் போல ``ஏய்.. விடாதே.. பிடி!" குரல்கள் இங்கில்லை. 24 மணி நேரமும் ட்ரோன் கேமராக்கள் பறந்தபடியுள்ளன. கன்ட்ரோல் ரூமிலிருந்து போக்குவரத்து, வாகன நெரிசல், பொது இடங்களில் மக்களை ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

இதுபற்றி சமூக ஆர்வலர் மாரிமுத்துவிடம் பேசியபோது, ``காரைக்கால் மாதாகோயில் வீதியில் காவல் கண்காணிப்பாளர் வீரவல்லவன், டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகம், அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் அகல்யா மற்றும் போலீஸார் பணியிலிருந்தனர். அப்போது அவ்வழியே மாஸ்க் இல்லாமல் வந்தவர்களை எச்சரித்தார்கள். ஓரமாக நிறுத்தி உணர வைத்தார்கள். தண்டிக்கவில்லை. வயது முதிர்ந்தோருக்கு போலீஸாரே மாஸ்க் அணிவித்து அனுப்பினர். சோர்வாக நடந்து வந்த முதியோருக்கு குளிர்பானம் தந்து ஆசுவாசப்படுத்தி அனுப்பிக்கொண்டிருந்தனர்.

இவர்களின் அறிவுரையை எரிச்சலின்றி சத்தியக் கட்டுப்பாடாக பொதுமக்கள் ஏற்றதன் பலனால், தற்போது பசுமை மண்டலமாக காரை மாவட்டம் நீடிக்கிறது. சிறந்த நிர்வாகம், நோய்க்கு எதிராக கூட்டுப்போர் என்ற வெற்றிகளுக்குப் பின் பலரது தன்னலமற்ற உழைப்பும் இருக்கிறது. பாராட்டுகள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு