Published:Updated:

`மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது!' -கேரளாவில் 1,053 பேருக்குத் தடைவிதித்த அரசு#corona

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

கொரோனா வைரஸ் பாதித்த மாணவியின் ஆரோக்கிய நிலை கவலைப்படும்படியாக இல்லை.

சீனாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள 30 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரிட்டன் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதைக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல் மற்றும் சிகிச்சைகளுக்காகக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், `0471 2304160 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்' எனக் கேரள அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Freepik

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கொரோனா வைரஸ் பாதித்த மாணவியின் ஆரோக்கிய நிலை கவலைப்படும்படியாக இல்லை. திருச்சூர் அரசு பொது மருத்துவமனையின் தனி வார்டில் இருந்து, அரசு மருத்துவக் கல்லூரி தனி வார்டில் மாற்றப்பட இருக்கிறார். தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவக் குழுவில் கூடுதல் மருத்துவர்கள் சேர்க்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் பாதித்த பகுதியிலிருந்து 1,053 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களைத் திருமணம் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். இதில் 15 பேரை மருத்துவமனைக் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்.

`விமானத்தில் ஒரே ஒரு சென்னை மாணவி; நடுக்கடலில் தவிக்கும் கப்பல்!'- உலக மக்களை உறையவைக்கும் கொரோனா

வைரஸ் தொற்று ஏற்பட்ட பகுதியிலிருந்து வந்தவர்கள் உடனடியாக சுகாதாரத்துறையை அணுக வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். இதுபோன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். அவர்களுக்கு உடனடியாக மருத்துவம் வழங்கி, அவர்களின் சாம்பிள்களை புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

கொரோனா பாதிப்பால் ஓர் உயிரிழப்புக்கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதய நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் ஏற்கெனவே நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. ஆரம்பத்திலேயே அதைக் கண்டறிந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும். கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதே நேரம் பொய்த் தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான மனிதர்கள் மற்றும் மிருகங்களின் அருகில் சென்றால் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. நோய் பாதித்தவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வைரஸ் பரவுவதாகவும் கேரள மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கொரனோ வைரஸ் நோய்க்குத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. சீனாவிலிருந்து வருபவர்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்" என்றார்.

பின் செல்ல