Published:Updated:

கொரோனாவுக்குப் பின் `போஸ்ட் கோவிட் கேர்'... கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் புது முயற்சி!

Post covid care
Post covid care

கோவிட்-19 குணமடைந்த பிறகு, ஏற்படும் உடல்நல மற்றும் மனநல பிரச்னைகளைக் கவனத்தில் கொண்டு, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (KMC) மருத்துவமனையில் `போஸ்ட் கோவிட் கேர் (Post covid care)' குறித்த ஆராய்ச்சிகளும், அதற்கான சிகிச்சை முறைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

`மழை விட்டாலும் தூவானம் விடாத கணக்காய் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுக் குணமடைந்த பிறகும், சில உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது! இதனால் கொரோனா தொற்று குணமடைந்த பின்னும், தேவைப்படுவோர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்' என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்! இதன் காரணமாக, கோவிட்-19 தொற்று குணமடைந்த பின்பு, அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

கோவிட்-19 குணமடைந்த பிறகு, ஏற்படும் உடல்நல மற்றும் மனநல பிரச்னைகளைக் கவனத்தில் கொண்டு, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (KMC) மருத்துவமனையில் `போஸ்ட் கோவிட் கேர் (Post covid care)' குறித்த ஆராய்ச்சிகளும், அதற்கான சிகிச்சை முறைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமடைந்த பிறகு, என்ன விதமான உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம், அவற்றுக்கான சிகிச்சைகள் என்ன என்பது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறையின் தலைவரும் மருத்துவருமான திருநாவுக்கரசுவிடம் பேசினோம்.

மருத்துவர் திருநாவுக்கரசு
மருத்துவர் திருநாவுக்கரசு

``கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிக் குணமான சுமார் 60 வயதுடைய ஒருவர், தனக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்த பிறகும் சுவாச பிரச்னை, சோர்வு உள்ளிட்ட அவதிகள் ஏற்படுவதாகக் கூறி எங்களிடம் வந்தார். நாள்கள் ஆக, ஆக கொரோனாவிலிருந்து குணமடைந்த நிறைய பேர் தங்களுக்கு உடல்நிலை மோசமாவதாகக் கூறி சிகிச்சைக்காக வரத்தொடங்கினர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பொருட்டு தற்போது எங்கள் மருத்துவக் கல்லூரியில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகும், ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்தும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளோம்.

கொரோனா... குணமான பின்னும் தொடரும் சிக்கல்கள்... ஓர் அலசல்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களைக் கண்காணித்து சோதனை செய்ததில் அவர்களுக்கு மூன்று விதமான பிரச்னைகள் ஏற்படுவது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் முதலாவது சுவாசம், நுரையீரல் தொடர்பான பிரச்னை. இரண்டாவது உடல் சோர்வு. மூன்றாவது மனநலம் தொடர்பான பிரச்னைகள்.

ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார். இந்தச் சிகிச்சை அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்றாகும் வரையில் அளிக்கப்படும். நோய்த்தொற்று குணமான பின்பு அவரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமலும், சோர்வு, உடல்வலி என்று எந்தப் பிரச்னைகளும் வராமல் இருந்தால் அவர் முழுவதும் குணமாகிவிட்டார் என்று அர்த்தம்.

corona virus
corona virus

அதுவே, கொரோனா நெகட்டிவ் என்றான பிறகும் அவரின் உடலின் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தாலோ, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலோ அவருக்கு `போஸ்ட் கோவிட் கேர்' அவசியமாகிறது.

ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு கணக்கிடும்போது சாதாரணமாக ஒருவரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு 100-95% இருக்க வேண்டும். இந்த அளவு ஒருவருக்கு 95 சதவிகிதத்துக்கும் கீழே இருந்து அவர் எந்தப் பிரச்னையும் இன்றி ஆரோக்கியமாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆக்ஸிஜன் அதிகமாகத் தேவைப்படும் சிரமமான வேலை ஏதாவது ஒன்றைச் செய்ய நேரிட்டால் அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இந்த நிலையை `ஹேப்பி ஹைப்போக்ஸியா' என்பார்கள்.

`சென்னை மக்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் வந்துவிட்டதா?' செரோ ஸ்டடி சொல்லப்போவது என்ன?

இதனால் கொரோனா குணமடைந்தும் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனியே சிகிச்சை அளித்து வருகிறோம். உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளவர்களை 95%-க்கு கீழ் உள்ளவர்கள், 90 - 85 சதவிகிதம் உள்ளவர்கள், 85%-க்கு கீழே உள்ளவர்கள் என வரிசைப்படுத்தி அவர்களுக்குத் தகுந்தாற்போல மூச்சுப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நுரையீரல் வீக்கமடைந்து, அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும், நுரையீரலில் உள்ள செல்கள் சிதைவடைந்து `ஃபைப்ரோசிஸ் (Pulmonary fibrosis)' நிலையை எட்டியிருக்கும். இந்த நிலையில் நுரையீரல் சுருங்கி அதன் செயல்பாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும். மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்து போஸ்ட் கோவிட் கேரில் இருப்பவர்களுக்கு நுரையீரலின் இயக்கத்தைச் சீராக்கக்கூடிய பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன" என்றார் மருத்துவர் திருநாவுக்கரசு.

`போஸ்ட் கோவிட் கேர்' ஆய்வுகள் குறித்து நம்மிடம் பேசிய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் டீன் வசந்தாமணி, ``கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் குணமடைந்த பின்பும் சிலருக்கு உடல்நல பிரச்னைகள் தொடர்வதைக் கண்டறிய முடிந்தது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் `போஸ்ட் கோவிட் கேர்' ஆய்வைத் தொடங்கினோம். எங்களிடம் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்தவர்களை மூன்று மாத காலமாகக் கண்காணித்து அவர்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றனவா அவற்றுக்கான சிகிச்சைகள் என்ன என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வு சென்று கொண்டிருக்கிறது. தற்போது இந்த ஆய்வின் ஆரம்ப நிலையில்தான் உள்ளோம். இந்த ஆய்வை மேலும் பல கட்டங்களாகச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு