Published:Updated:

அமித் ஷாவுக்கு நடந்த லைப்போமா அறுவை சிகிச்சை... அச்சம், அலட்சியம் வேண்டாம்!

இது மரபணு சார்ந்தது என்பதால் தாத்தா, அப்பா, மகன் எனத் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக வரலாம். உடல் முழுக்க இது பரவும். அதிக உடல் பருமன், அதிகக் கொழுப்பு, சர்க்கரைநோய், கல்லீரல் நோய்கள் உள்ளிட்டவையால் லைப்போமா ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா. மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.

Amit Shah
Amit Shah

`அமித் ஷாவின் உடல்நிலைக்கு என்னவாயிற்று?’ என்று அவரது கட்சித் தொண்டர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. பிறகு, அவரது கழுத்துப் பகுதியில் இருந்த லைப்போமா என்கிற திசுக்கட்டியை அகற்றவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை அறிந்ததும் தொண்டர்கள் அமைதியாகினர்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அமித் ஷா, தற்போது ஓய்வெடுத்து வருகிறார். `பொதுவாக லைப்போமா கட்டிகளால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்கின்றனர் மருத்துவர்கள். அதே சமயத்தில், `எல்லாக் கட்டிகளையும் லைப்போமா என்று நினைத்து அலட்சியமாக விடக் கூடாது’ என்றும் எச்சரிக்கின்றனர்.

Doctor
Doctor

லைப்போமா கட்டிகள் ஏன் உருவாகின்றன. அவற்றுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?

விளக்குகிறார் லேபராஸ்கோப்பி மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் க.அமிழ்தன்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `லைப்போமா' (Lipoma) என்பது கொழுப்புக் கட்டி. அது உடலில் கைகால் உட்பட எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரலாம். கைகால்களில் வருவது மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். சருமத்துக்கு அடியில் உள்ள கொழுப்புத் திசுக்களின் திரட்சியால் இது உருவாகும். `சப்கிடேனியஸ்’ (Subcutaneous) லேயரில் வரும் லைப்போமாதான் பொதுவானது.

Health
Health

இது மரபணு சார்ந்தது என்பதால் தாத்தா, அப்பா, மகன் எனத் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக வரலாம். உடல் முழுக்க இது பரவும். அதிக உடல் பருமன், அதிகக் கொழுப்பு, சர்க்கரைநோய், கல்லீரல் நோய்கள் உள்ளிட்டவையால் லைப்போமா ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பெரும்பாலும் லைப்போமா கட்டிகளால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அதேபோல இவ்வகைக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நான்கு சென்டி மீட்டருக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும்.

surgery
surgery

லைப்போமாவில் பல வகைகள் உள்ளன. தசையில்கூட லைப்போமா ஏற்படும். தசையில் வரக்கூடிய லைப்போமாவானது வளர வளர வலிக்க ஆரம்பிக்கும். தசையின் வேலைகள் பாதிக்கப்படும். இவ்வகையான கட்டிகள் சிறிய அளவில் இருக்கும்போதே நீக்கிவிட வேண்டும். அதேபோல சிறு குடலிலும் லைப்போமா ஏற்பட்டு, அழுத்தத்தை உருவாக்கும். பொதுவாக நாம் உண்ணும் உணவு செரிமானமாகி சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்குச் செல்லும். அதன் பிறகே மலம் வெளியேறும். சிறு குடலில் லைப்போமா ஏற்படும்போது வீக்கம் உருவாகி, வலியை உண்டாக்கும். வாந்தியும் ஏற்படும்.

முதுகுத்தண்டில் ஏற்படும் லைப்போமாவால் தசைகள் செயலிழந்து, நடக்க முடியாத நிலை ஏற்படலாம். இந்த வகையான லைப்போமாக்களை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றிவிடுவதே சிறந்தது.

Dr Amilthan - CONSULTANT GENERAL AND LAPROSCOPIC SURGERY
Dr Amilthan - CONSULTANT GENERAL AND LAPROSCOPIC SURGERY

பொதுவாக உடம்பில் வரும் எல்லாக் கட்டிகளும் கொழுப்புக் கட்டிகள் இல்லை. எந்தக் கட்டி நான்கு சென்டி மீட்டருக்கு மேல் வளர்கிறதோ அதை திசுப் பரிசோதனை (Biopsy test) செய்து, வழக்கமான கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதைக் கண்டறிய வேண்டும். அப்போது அது லைப்போமாவாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. ஒருவேளை அப்படி இல்லாமல் `சார்கோமா’ (Sarcoma) எனப்படும் புற்றுநோயாக இருந்தால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் க.அமிழ்தன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு