Published:Updated:

லாம்டா: தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வேரியன்ட்; உலக அளவில் தற்போதைய நிலை என்ன?

Mask
Mask ( AP Illustration/Peter Hamlin )

ஆல்பா வகை வேரியன்ட் முதன் முதலில் யுகேவில் கண்டறியப்பட்டதைப் போல, டெல்டா வகை வேரியன்ட் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது போல, லாம்டா வகை வேரியன்ட் முதன் முதலில் பெரு நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கண்டறியப்பட்டது.

கடந்த ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர் உருமாற்றமடைந்து பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. முதல் அலைக்குப் பின் இரண்டாவது அலை நிச்சயம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும் கூட மனதளவில் இயல்பு வாழ்க்கைக்கே மக்கள் திரும்பியிருந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க இந்தியாவில் இரண்டாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்க படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak

இந்நிலையில், புதுவகை கொரோனா வைரஸான லாம்டா வகை வேரியன்ட் உலகம் முழுக்க பரவிவருகிறது. இதுவரை உலகம் முழுக்க கண்டறியப்பட்ட வேரியன்ட்டுகளில் இந்த லாம்டா வகை வேரியன்ட் ஏழாவது வகையென உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த லாம்டா வகை வேரியன்ட் இந்தியாவிலும் பரவிவருவதாகத் தகவல்கள் வெளிவர, இது பற்றி தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூரிடம் பேசினோம்.

``லாம்டா வகை வேரியன்ட் உலகம் முழுக்க பரவிவருவது உண்மைதான். ஆனால், இது புதிதாகப் பரவிவரும் வைரஸ் அல்ல. ஆல்பா வகை வேரியன்ட் முதன்முதலில் யுகேவில் கண்டறியப்பட்டதைப் போல, டெல்டா வகை வேரியன்ட் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது போல, லாம்டா வகை வேரியன்ட் முதன்முதலில் பெரு நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கண்டறியப்பட்டது. ஏறக்குறைய 80 சதவிகிதத்தினர் இந்த வகை வேரியன்ட்டால்தான் பெரு நாட்டில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 25 நாடுகளில் இந்த லாம்டா வகை வேரியன்ட் பரவியிருக்கிறது.

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

ஆனால், இதுவரை இந்தியாவில் லாம்டா வகை வேரியன்ட் கண்டறியப்படவில்லை. சொல்லப்போனால், இஸ்ரேலைத் தவிர மற்ற எந்த ஆசிய நாடுகளிலும் லாம்டா வகை வேரியன்ட் இன்னும் கண்டறியப்படவே இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரு நாட்டில் கண்டறியப்பட்ட இந்த லாம்டா வகை வேரியன்ட் மற்ற வகை வேரியன்ட்டுகளை விட தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தகவல்கள் பரவிவருகின்றன. டெல்டா வகை வேரியன்ட்டை தொடர்ந்து டெல்டா ப்ளஸ் வகை வேரியன்ட்டால் இந்தியாவில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனரே தவிர லாம்டா வகை இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை.

அதனால், எந்தவித தரவுகளுமின்றி லாம்டா வகை வேரியன்ட் இந்தியாவை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் எனக் கூறவே முடியாது. அதனைத் தொடர்ந்து, என்னதான் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவந்தாலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்" என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு