Published:Updated:

ஓப்பன் ஹார்ட் சிரிப்பு, டக் ஆஃப் வார் சிரிப்பு... சிரிப்பு யோகாவின் வகைகளும் பலன்களும்!

சிரிப்பு யோகா
சிரிப்பு யோகா

"சொந்தக்காரர்கள் அருகில் இல்லாத தனிமை, இங்கிருந்து மறுபடியும் வீட்டுக்குச் செல்வோமா என்ற பயம் ஆகியவற்றால், மருத்துவர்களுடைய முகங்களைக்கூட நிமிர்ந்து பார்க்க மறுக்கிற பல கொரோனா தொற்றாளர்களைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்."

சிரிப்பு யோகா, யோகா கலையின் கீழ்வருகிற சிகிச்சை முறைகளில் ஒன்று. மனிதர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகும்போது, அதிலிருந்து மீள உதவுவது இந்த யோகா. கொரோனா நோயாளிகளுக்கு சிரிப்பு யோகா கற்றுத்தருகிற இயற்கை மருத்துவர் யோ.தீபா, இந்த யோகாவின் வகைகள், பலன்கள் பற்றிச் சொன்னார்.

இயற்கை மருத்துவர் யோ.தீபா
இயற்கை மருத்துவர் யோ.தீபா

''கொரோனா நோயாளிகள் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துச் சிரிப்பது, நலம் விசாரிப்பது, நீங்கள் எந்த ஏரியாவில் இருந்து வருகிறீர்கள் என்று விசாரிப்பது போன்ற வழக்கமான எந்தச் செயல்பாடும் இல்லாமல் இருக்கிறார்கள். சொந்தக்காரர்கள் அருகில் இல்லாத தனிமை, இங்கிருந்து மறுபடியும் வீட்டுக்குச் செல்வோமா என்ற பயம் ஆகியவற்றால், மருத்துவர்களுடைய முகங்களைக்கூட நிமிர்ந்து பார்க்க மறுக்கிற பல கொரோனா தொற்றாளர்களைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் மன அழுத்தம்தான். இவர்களுக்கு மூச்சுப் பயிற்சி, யோகாசனங்களுடன் சிரிப்பு யோகாவும் இதற்கான தீர்வு என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைப்பதல்ல இது. மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டு, அந்த மூச்சை வெளிவிடும்போது சத்தமாகச் சிரிப்பதுதான் சிரிப்பு யோகா.

சிரிப்பு யோகாவின் வகைகள்...

ஓப்பன் ஹார்ட் லாபிங் - இரண்டு கைகளையும் நன்கு விரித்து வைத்துக்கொண்டு, வாய்விட்டு சத்தமாகச் சிரிக்க வேண்டும்.

டக் ஆஃப் வார் சிரிப்பு - 'ஹா... ஹா... ஹஹ் ஹஹ் ஹா...' என்று சொல்லியபடி சத்தமாகச் சிரிக்க வேண்டும். நமஸ்தே லாபிங் - எதிரே இருப்பவர்களை நிமிர்ந்து பார்த்து நெஞ்சுக்கு நேராக கைகளைக் குவித்து வைத்துக்கொண்டு வாய்விட்டு சத்தமாகச் சிரிக்க வேண்டும்.

ஹேண்ட் ஷேக்கிங் லாபிங் - பக்கத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பது போல கைகளை நீட்டி, கண்களை நேருக்கு நேராகப் பார்த்துச் சிரிக்க வேண்டும்.

கிளாப் அண்ட் லாபிங் - 'வெரிகுட் வெரிகுட்...' என்று கைகளைத் தட்டியபடி சொல்ல வேண்டும். பிறகு 'ஹே...' என்று கத்திவிட்டு, 'ஹோ ஹோ... ஹா ஹா ஹா' என்று சொல்லியபடி சிரிக்க வேண்டும்.

கொரோனா வார்டில் சிகிச்சை பெறுகிற வயதானவர்களை இப்படிச் சிரிக்க வைக்க நிறைய கஷ்டப்பட்டோம். சிரிப்பு யோகா செய்ய ஆரம்பித்தவர்கள், 'எங்கள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நாங்கள் சிரித்ததே இல்லை' என்றார்கள்.

சிரிப்பு யோகா
சிரிப்பு யோகா
தொடரும் கொரோனா வார்டு தற்கொலைகள்! காரணம் என்ன? - மனநல மருத்துவர்கள் விளக்கம்

சிரிப்பு யோகாவின் பலன்கள்...

* மூச்சை நன்கு உள்ளிழுத்து, அதை வெளிவிடும்போது வாயைத்திறந்து சிரிக்க வேண்டும். இதனால், நுரையீரலில் இருக்கிற கார்பன் டை ஆக்ஸைடு முழுதும் வெளியேறி, ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ளும் திறன் அதிகமாகும். மூச்சு விடுதலும் சீராகும்.

* உடலில் இருக்கிற அத்தனை உறுப்புகளின் அக்குபஞ்சர் புள்ளிகளும் நம்முடைய உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் இருக்கின்றன. கைதட்டிக்கொண்டே சிரிக்கும்போது, உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதோடு அக்குபஞ்சர் புள்ளிகளும் தூண்டப்பட்டு உடல் புத்துணர்ச்சி அடையும்.

* மன அழுத்தத்துடன் இருக்கும்போது நம்முடைய உடலில் கார்டிசால் என்ற ஹார்மோன் சுரக்கும். இது ஸ்ட்ரெஸ் ஹார்மோன். இது சுரந்தால் உடலில் சோர்வு ஏற்படும். மனம் கனமாக இருக்கும். நெகட்டிவ் எண்ணங்கள் அதிகமாகத் தோன்றும். இந்த நேரத்தில் நம்முடைய நோய் எதிர்ப்புசக்தியானது தானாகவே குறைய ஆரம்பிக்கும். வாய்விட்டுச் சிரிக்கும்போது எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது மகிழ்ச்சிக்கான ஹார்மோன். இது தூண்டப்படும்போது மகிழ்ச்சியாக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

* ஒரு தடவை சத்தமாகச் சிரித்தால், 45 நிமிடங்கள் வரை நம்முடைய தசைகள் ரிலாக்ஸாக இருக்கும். குழந்தைகள் ஹேப்பியாகவும் ஹெல்தியாகவும் இருப்பதற்கு அவர்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சிரிப்பதுதான் காரணம்.

சிரிப்பு யோகா செய்வதால் ரத்தக்குழாய்கள் விரிவடையும். அதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, செல்களுக்கு ஆக்ஸிஜன் அதிகமாகச் சென்று சேரும். இதனால், இதயப் பிரச்னைகள் வராது.
``பிரணாயாமத்தால் இசிஜி-யில் ஏற்பட்ட முன்னேற்றம்!" - இயற்கை மருத்துவர் தீபாவின் கொரோனா வார்டு அனுபவம்

* மன அழுத்தத்துடன் இருக்கும்போது, மூட் ஸ்விங்ஸ் ஏற்படுவது சகஜம். அதாவது, திடீரென்று மகிழ்ச்சியாக இருப்பது, காரணமே தெரியாமல் சோகமாக இருப்பது என்று இருப்பார்கள். இந்த மனநிலையை சிரிப்பு யோகா மாற்றும்.

* உடலின் செல்களைப் பாதுகாக்கும்.

* சிரிப்பு யோகா செய்யச் செய்ய கோபம், பொறாமை போன்ற எதிர்மறை இயல்புகள் படிப்படியாக நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும்.

* மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்பதால் உடல்வலி தீரும்.

அடுத்த கட்டுரைக்கு