Published:Updated:

தினமும் 4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் கலக்கும் துறையூர் தாத்தா! #Video

இளம் வயதிலேயே முதுமையின் சாயலைச் சுமக்கும் இன்றைய தலைமுறைக்கு, வியப்பூட்டும்வகையில் தன் முதுமைக் காலத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் துறையூர் வடிவேல் தாத்தா.

துறையூர் தாத்தா
துறையூர் தாத்தா

முதுமை, வாழ்வில் வரமா, சாபமா என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. முதுமையடைந்தவர்கள் அன்றாட வாழ்வை நகர்த்தத் திண்டாடுவதுகண்டு நடுத்தரவயதில் இருப்பவர்களுக்கு உள்ளூர ஒரு பயம் எழுகிறது. ஆனால், வாழ்க்கையையும் அதில் வரும் முதுமையையும் எதிர்கொள்வதென்பது தனிப்பட்ட பார்வையிலேயே இருக்கிறது.

Vikatan

இளம் வயதிலேயே முதுமையின் சாயலைச் சுமக்கும் இன்றைய தலைமுறைக்கு, வியப்பூட்டும்வகையில் தன் முதுமைக் காலத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் துறையூர் வடிவேல் தாத்தா.

தினமும் காலை ஆறுமணிக்குச் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, வடிவேல் தன் சைக்கிளில் ஜமிந்தார் பள்ளி மைதானத்துக்கு வந்துவிடுகிறார். அதன்பின் மைதானத்தில் ஓட்டம், சிறுசிறு உடற்பயிற்சி என்று இளைஞர்கள் நின்று திரும்பிப்பார்க்கும் அளவுக்குப் புத்துணர்ச்சியோடு பயிற்சிசெய்கிறார் வடிவேல்.

வடிவேல் தாத்தா
வடிவேல் தாத்தா

பார்வைக்கு எழுபது வயது மதிப்பிடத்தக்கவராக இருந்த வடிவேல் தாத்தாவை நெருங்கிப் பேசினோம். "தம்பி, என் பெயர் வடிவேல், வயசு எண்பத்து ஏழு" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். மேலும் அவர் குறித்துக் கேட்டோம்.

"நான் எக்ஸ்-மிலிட்டரி. 1956 ல ஆர்மில சேர்ந்தேன். சரியா நாலரை வருஷம் சர்வீஸ். அப்போ நான் இருந்த பட்டாலியன் காங்கோ நாட்டுக்குப் போச்சு. உடனே நான் என் மேஜர்கிட்ட பேசி, சில சொந்தக் காரணங்களுக்காக ஆர்மிய விட்டு வந்துட்டேன். அப்புறம் கோயம்புத்தூர்ல உடற்கல்வி ஆசிரியர் பயிற்சில சேர்ந்து படிச்சு முடிச்சேன். இங்கதான் செங்குந்தர் ஸ்கூல்ல பி.யி.டி (P.E.T) டீச்சரா வேலை பார்த்து ரிட்டையர்டு ஆனேன். அதனால் எப்போதும் உடற்பயிற்சியும், விளையாட்டும்தான் என் வாழ்க்கை.

எனக்கு இப்பவரை உடம்புல ஒரு பிரச்னை இல்லை, சாப்பாட்டுலயும் ஒரு தடை இல்லை, சின்ன வயசுல எப்படிச் சாப்பிட்டனோ அதேபோல இப்பவும் சாப்பிடறேன். இதுக்கெல்லாம் காரணம் உடல்நலமும் மன நலமும்தான்.
வடிவேல் தாத்தா

தினமும் நாள் தவறாம காலையில ஆறு மணிகெல்லாம் மைதானத்துக்கு வந்துருவேன். சைக்கிள் ஓட்டிக்கிட்டுதான் வருவேன். வீட்ல இருந்த வந்து போக மொத்தம் 2 கி.மீ. இங்க ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். தவறாமல் தினமும் குறைந்தபட்சம் 4 கி.மீ ஓடிருவேன்.

தினமும் 4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் கலக்கும் துறையூர் தாத்தா! | #Motivational #Thuraiyur வீடியோ : மௌரீஷ், சி.வெற்றிவேல்.

Posted by Vikatan EMagazine on Tuesday, August 13, 2019

இதெல்லாம் முடிஞ்சபிறகு என் நண்பர்கள் கூட ஜாலியா அரட்ட அடிச்சிட்டு, ஊர் விஷயம் உலக விஷயம்லாம் பேசுவோம். எங்க நண்பர்கள் வட்டம் ரொம்ப பெருசு. என் வயசு நண்பர்கள் யாரும் இப்ப இல்ல, இப்ப இருக்க எல்லாரும் என்னைவிட வயசுல சின்னவங்கதான். ஆனாலும் நல்லா ஜாலியா பேசிக்கிட்டு இருப்போம். அதெல்லாம் முடிச்சிட்டு பொறுமையாகத்தான் வீட்டுக்குப் போவேன்.

வடிவேல் தாத்தா
வடிவேல் தாத்தா

இப்போ இருக்கிற இளைய தலைமுறைய பார்த்த ரொம்பக் கவலையா இருக்கு. மொபைலே வாழ்க்கைங்கிறமாதிரி வாழ்றாங்க. உடலுக்குக் கடினமான எந்த ஒரு வேலையும் தர்றதில்லை. முப்பது வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம். இதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணமாயிடுச்சி.

தினமும் கொஞ்ச தூரம் ஓடினா போதும். நம்ம நுரையீரல் சரியா வேலைசெஞ்சிடும். ரத்த ஓட்டம், சர்க்கரை எல்லாம் கட்டுக்குள்ள வந்திடும். பெத்தவங்க குழந்தைகளுக்கு உடற்பயிற்சியோட அவசியத்தைப் புரியவைக்கணும். குடும்பமா காலைல இந்த மாதிரி மைதானங்களுக்கு வரணும். உடலுக்கும் நல்லது, மனசுக்கும் சந்தோஷம்.

வடிவேல் தாத்தா
வடிவேல் தாத்தா

எனக்கு இப்பவரை உடம்புல ஒரு பிரச்னை இல்லை, சாப்பாட்டுலயும் ஒரு தடை இல்லை, சின்ன வயசுல எப்படிச் சாப்பிட்டனோ அதேபோல இப்பவும் சாப்பிடறேன். இதுக்கெல்லாம் காரணம் உடல்நலமும் மன நலமும்தான். உடல்நலத்தை உடற்பயிற்சியும் மனநலத்தை என் நண்பர்கள் வட்டமும் ஆரோக்கியமா வச்சிருக்கு, அதனாலதான் சொல்றேன் தினமும் நல்லா எக்ஸர்சைஸ் பண்ணுங்க, நண்பர்களோட மனசுவிட்டு அரட்ட அடிங்க. நோய்நொடி கிட்டயே வராது. இது தான்பா நா குடுக்குற ஹெல்த் டிப்ஸ்” என்று சொல்லி எழுந்தவர் “கடைசி ஒரு ரவுண்டு பாக்கி இருக்கு” என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தார்.