கொரோனா வார்டில் தரப்படுகிற மனநல சிகிச்சைகள் என்னென்ன..?
கொரோனா வார்டுகளில் ஆங்கில மருத்துவ சிகிச்சைகள், சித்த மருத்துவ சிகிச்சைகள், இயற்கை மருத்துவ சிகிசைகள் வழங்கப்படுகின்றன என்று நாம் அறிவோம். இவற்றை தவிர, உடல்நலத்துக்குச் சமமாக அங்கு மனநலனுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவை என்னென்ன..? சொல்கிறார் சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மனநல மருத்துவராகப் பணியாற்றும் புனிதவதி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனா பற்றிச் சொல்கிறோம் !
''கோவிட்-19 வைரஸ் உலகத்துக்கே புதியது. ஆனால், இதனிடமிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டிய மெக்கானிஸம் நம் மூளையில் இருக்கிறது. அதனால், கொரோனா வந்தவரின் மூளை இந்தப் புதிய நோயைப் பற்றி என்ன யோசிக்கிறது, இந்த நோயை எப்படி ஏற்றுக்கொள்கிறது, இதற்கு சம்பந்தப்பட்டவரின் மனமும் உடலும் எப்படி எதிர்வினையாற்றப் போகின்றன என்பதை கவனித்து, உளவியல் ஆலோசனை தருகிறோம்.

ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தாலும் சரி, தடுப்பூசி கொடுத்தாலும் சரி, அது செயல்பட குறிப்பிட்ட நேரமோ, காலமோ எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிமை உணர்வைப் போக்குகிறோம்!

நான்கு பேருடன் சேர்ந்திருப்பதுதான் மனிதனுடைய இயல்பு. அப்படியிருந்தால்தான் மனிதன் மகிழ்ச்சியாக இருப்பான். ஆனால், இந்தக் கொரோனா நேரத்தில் உடம்பில் இதுவரை வந்திடாத புது நோய் கூடவே யாருடனும் இருக்க முடியாத தனிமை என்கிற நிலைமை வரும்போது, பாதிக்கப்பட்டவர்கள் நிலை தடுமாறி விடுவார்கள். இந்தத் தடுமாற்றம் கொரோனா நோயாளிகளின் மனங்களில் வராமல் இருக்க, ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற உணர்வுரீதியான அரவணைப்பைத் தருகிறோம்.
கூலாக இருங்கள்!
நம் உடலுக்கு ஒரு பிரச்னை வருகிறது என்றால், கூடவே ஸ்டிரெஸ்ஸும் வருவது இயற்கையான விஷயம். ஸ்டிரெஸ் பயத்தைக் கொடுக்கும். பயம் நோயை அதிகப்படுத்திவிடும். அதனால் நாங்கள் என்ன செய்கிறோம் தெரியுமா? கொரோனா மனநிலை கூலாகும்படி பேசுகிறோம்.

உதாரணத்துக்கு, கிரிக்கெட்டர் தோனியின் 'மிஸ்டர்.கூல்' இயல்பைப் பற்றி சொல்வோம். மனிதர்களுடைய மூளை கூலாக இருக்கும்போதுதான், ‘இந்த நோய் என்னை ஒண்ணும் செஞ்சுடாது’ என்று நம்பும். அந்த நம்பிக்கை, பயத்தைப் போக்கும். பயமில்லையென்றால், கொரோனா வந்தவர்கள் திடீரென கொலாப்ஸ் ஆக மாட்டார்கள்.
உண்மையைச் சொல்கிறோம்!

உண்மைக்குக் காப்பாற்றுகிற தன்மை எப்போதுமே உண்டு. இதற்கு கொரோனாவும் விதிவிலக்கில்லை. ‘கொரோனா உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வரலாம், யாருக்கு வேண்டுமானால் வரலாம். அப்படி வந்தவர்களில் 95% சதவிகிதம் பேர் குணமடைந்து பத்திரமாக வீடு திரும்புகிறார்கள். நீங்களும் அப்படித்தான்’ என்ற பாசிட்டிவ் உண்மையை கொரோனா வந்தவர்களிடம் சொன்னாலே தெம்பாகிவிடுகிறார்கள்.
ரிலாக்ஸேஷன் டெக்னிக் சொல்லித் தருகிறோம்!

சிலர், ‘நாங்க ஸ்ட்ரெஸ்ஃபுல்லா உணர்றோம்' என்று அவர்களுடைய நிலைமையை அவர்களே உணர்ந்து சொல்கிற அளவுக்குத் தெளிவாக இருப்பார்கள். அவர்களுக்கு சில ரிலாக்ஸேஷன் டெக்னிக் சொல்லித் தருவதோடு மூச்சுப்பயிற்சியும் கற்றுத் தருகிறோம்.
சோஷியல் மீடியா பார்க்கச் சொல்கிறோம்!
தனிமையில் இருப்பவர்களுக்கு சோஷியல் மீடியா துணையாகலாம். இது அவர்களுடைய மனதை திசைதிருப்பும். அதனால், கோவிட் வார்டில் இருப்பவர்களை சமூக வலைதளங்களைப் பார்க்கச் சொல்வோம். குறிப்பாக, அவர்களுக்கு எவை மகிழ்ச்சி தருகின்றனவோ, அவற்றை மட்டுமே பார்க்கச் சொல்வோம். மேலும், கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளைக் கட்டாயம் தவிர்க்கச் சொல்வோம்.

அறிவியல்பூர்வமாகச் சொல்ல வேண்டுமென்றால், இதன் பெயர் 'சைக்கோ எஜுகேஷன்'. நம் மனதை பிரச்னையிடமிருந்து மடை மாற்றி அதற்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்யும்போது, நம் மூளையே அந்தப் பிரச்னையை விரைவில் நம்மைவிட்டுப் போகச் செய்துவிடும்.
பதற்றநோய் இருந்தால் மாத்திரை தருகிறோம்!

ஒரு சிலருக்கு நோயைப் பற்றிய பயம், படபடப்பு அதிகமாக இருக்கும். அவர்களுக்குப் பிரச்னை இன்னும் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக மாத்திரை கொடுத்து அமைதிப்படுத்துகிறோம்.