Published:Updated:

நாற்பது வயதைத் தாண்டினால் தாம்பத்ய வாழ்க்கையில் தொய்வு ஏற்படுமா? #LifeStartsAt40 #நலம்நாற்பது

நாற்பது வயதானால் தாம்பத்யத்திற்கான தூண்டுதல் குறைந்துவிடும் என்று நம்புகிறார்கள். அது உண்மையல்ல. நாற்பது வயதுவரை குழந்தை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவிட்டோம். இனி தாம்பத்ய வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ஐம்பதிலும் ஆசை வரும்... ஆசையுடன் பாசம் வரும்... இதில் அந்தரங்கம் கிடையாதம்மா... நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா!' ரிஷிமூலம் படத்தில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரியில் நாற்பது வயது தாண்டிய கணவன் மனைவிக்கிடையிலான தாம்பத்ய ஆசை குறித்து அழகாகக் கூறியிருப்பார். தாம்பத்ய வாழ்க்கையின் சுவைக்கு வயது தடை கிடையாது. ஆனால் அதற்கான சூழல், உடல் நலம், மன நலத்தை நன்முறையில் பேணிப்பாதுகாப்பது அவசியம். இவற்றில் கவனம் செலுத்தாத காரணத்தால் நாற்பது வயதைத் தாண்டியவர்களில் தாம்பத்ய வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இதுகுறித்த சந்தேகங்களை, ஆலோசனைகளை பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரனின் முன்வைத்தோம்.

தம்பதிகள்
தம்பதிகள்
https://pexels.com

நாற்பது வயதைக் கடந்தாலே தாம்பத்ய வாழ்க்கைமீது ஆர்வம் குறைந்துவிடும் என்று கூறுகிறார்களே உண்மையா? உண்மையென்றால் ஆர்வம் குறையாமலிருக்க என்ன செய்வது?

"நாற்பது வயதானால் தாம்பத்யத்திற்கான தூண்டுதல் குறைந்துவிடும் என்று நம்புகிறார்கள். அது உண்மையல்ல. நாற்பது வயதுவரை குழந்தை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவிட்டோம். இனி தாம்பத்ய வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். மருத்துவரீதியாகப் பார்த்தால், தாம்பத்ய வாழ்க்கைமீதான ஈடுபாடு, ஹார்மோன்களின் சுரப்பைப் பொறுத்து மாறுபடும். வயது ஏறும்போது உடலில் உள்ள தசைகள், நரம்புகள் தளர்வடைவதுபோல், கண் பார்வை குறைவதுபோல் தாம்பத்யத்துக்கான தூண்டுதலும், திறனும் குறையக்கூடும். ஆண்களுக்கு தாம்பத்ய உணர்வுகளைத் தூண்டக்கூடிய டெஸ்டாஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் 40 வயதுக்குமேல் குறையத் தொடங்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸ் காலகட்டத்தில் தாம்பத்ய உணர்வைத்தூண்டக்கூடிய ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். எனவே தாம்பத்ய உறவின் மீதான நாட்டம் குறையத்தொடங்கும். ஆனால் நம்முடைய நடைமுறை வாழ்க்கையை சற்று மாற்றிக்கொண்டால் இந்த ஹார்மோன் குறைபாட்டைச் சரிசெய்யலாம்."

நாற்பது வயதைத் தாண்டியவர்கள், தாம்பத்ய வாழ்க்கையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?

"தாம்பத்ய வாழ்க்கை என்பது மனம் சார்ந்தது மட்டுமல்ல, உடல்நலமும் சார்ந்த ஒன்று. நாற்பது வயதைத் தாண்டும்போதுதான் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, நரம்புத்தளர்ச்சி, மூட்டு வலி, தீராத வயிற்றுவலி என உடல்நலப் பிரச்னைகள் வரக்கூடும். அப்படி பிரச்னைகள் வந்தால் தாம்பத்யத்தின் மீதான நாட்டம் குறைந்துவிடும். அந்த வயதில் மனைவி ஆரோக்கியமா இருந்தாலும் கணவனுக்கு உடல்நலத்தில் பிரச்னை இருந்தால் தாம்பத்ய உறவின்மீது ஆர்வமே இருக்காது. எனவே உடல்நலத்தைப் பேணுவது மிகவும் முக்கியம்.

தம்பதிகள்
தம்பதிகள்
https://pexels.com

இதற்கு முதலில் தினசரி சரியான தூக்கம் தேவை. முன்பு 8 மணி நேரத்தூக்கம் கட்டாயம் வேண்டுமென்றார்கள். தற்போதைய சமூக வலைத்தள உலகில், உடல்நலத்தைக்காக்கக் குறைந்தது 5-6 மணி நேரத் தூக்கமாவது வேண்டும். இரண்டாவது, தினமும் அதிகாலையில் 30 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது ரத்தக்குழாய்கள் நன்கு விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹார்மோன் சுரப்பையும் அதிகரிப்பதால் தாம்பத்ய வாழ்க்கை நன்றாக இருக்கும். மூன்றாவதாக, உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வயதாக ஆக அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, ஆட்டுக்கறியைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில், கடல் உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். மீன்கள் உடல் ஆரோக்யத்துக்கு ஏற்றவை. ஆனால் கொழுப்பு அதிகமுள்ள இறால், நண்டு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. உலர் பழங்கள், வால்நட், பாதாம் நிறைய சாப்பிடலாம். குறிப்பாக தாம்பத்ய உறவுக்கு முன்னர் பாதாம் சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் நலம் நல்லபடியாக இருந்தால்தான் மனம் நன்றாக இருக்கும். அப்போதுதான் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமையும்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவியிடையே ஏற்படும் பிரச்னைகளைக் களைவது எப்படி?

"பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமிடைப்பட்ட தாம்பத்ய ஆர்வம் வெவ்வேறான அளவுகளில் இருக்கும். பல ஆண்கள் என்னிடம் குறைபட்டுக்கொள்வது என்னவென்றால், எனக்கு வாரத்தில் மூன்று, நான்கு நாள்கள் தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் மனைவி ஒத்துழைப்பதில்லை. ஏதேதோ காரணங்களைக்கூறி தட்டிக்கழிக்கிறார் என்பார்கள். இப்படி மாதக்கணக்காகக்கூடத் தட்டிக்கழிக்கும் பெண்கள் உண்டு. இதில் ஆண்கள் தரப்பில்தான் சரியான புரிதல் இருக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரை தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதற்குத் தனிப்பட்ட காரணம் எதுவுமே தேவையில்லை. நினைத்தமாத்திரத்தில் அதில் ஈடுபட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு தாம்பத்ய உணர்வு தூண்டப்பட்டால்தான் ஈடுபடுவார்கள். அதற்குக் கணவனுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு அவசியம். அந்த பிணைப்பை உண்டாக்குவது கணவனின் செயல்பாட்டில்தான் இருக்கிறது. மனைவியிடம் அன்பு செலுத்தாமல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், வெறுமனே தாம்பத்ய உறவுக்காக மட்டுமே அணுகினால் ஒப்புக்கொள்ளமாட்டார். தினசரி வாழ்க்கையில் மனைவியின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவரது வேலைகளில் தானும் பங்கெடுத்து அவரது சுமையைக் குறைப்பதோடு, தன்மீது கணவன் அன்பு செலுத்துகிறான் என்ற உணர்வை மனைவிக்கு ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர் கார்த்திக் குணசேகரன்
மருத்துவர் கார்த்திக் குணசேகரன்
சதீஷ்குமார்

தாம்பத்யம் நன்முறையில் இருக்க, கணவன் மனைவியிடையே உரையாடல் அவசியம். இன்றைய காலகட்டத்தில் ஒரே வீட்டினுள்ளேயே கணவன் மொபைலிலோ, மனைவி டிவியிலோ மூழ்கி தனித்தனி உலகில் வாழ்வதே வழக்கமாக உள்ளது. இப்படியான சூழல் மாறி, இருவரும் ஒருவரோடொருவர் அன்போடு உரையாடுவது தினமும் நிகழ வேண்டும். தாம்பத்யத்தில் மனைவி ஈடுபாடில்லாமல் இருந்தால் அதற்கான காரணத்தையும் அவரிடமே கேட்டு சரிசெய்துகொள்ளலாம். வரம்பில்லாத இணையதளப் பயன்பாடுகளும் கணவன் மனைவியிடையே வேறுபாட்டை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்கப் பங்குவகிக்கின்றன. இணையத்தில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால் ஏற்படும் தவறான புரிதல்களால் தாம்பத்ய வாழ்க்கை சிக்கலாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக, சமூக வலைத்தளங்களை அளவுக்கதிகமாக இருவரும் பயன்படுத்தும்போது அவர்களுக்குள் உரையாடல்கள் குறைவதோடு, ஒருவர்மீது ஒருவர் சந்தேகப்படும் நிலையும் ஏற்படுகிறது. எனவே இணையத்தின் வளர்ச்சி எந்தவிதத்திலும் கணவன் மனைவிக்கிடையிலான பிணைப்பைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்."

ரொமான்ஸுக்கு வயது தடையில்லை... #LifeStartsAt40 #நலம்நாற்பது #VikatanPhotoCards

அன்பென்பதை வழங்கும் அட்சய பாத்திரமாக நம் மனம் இருக்கிறது. மனைவியின்மீதான காதல் குறையாதிருக்க எப்போதும் இந்த அட்சய பாத்திரம் திறந்தே இருக்கட்டும். இருவருமே பணிக்குச்செல்லும் சமூகச்சூழலுக்கு வந்துள்ள இன்றைய காலகட்டத்தில் மனைவிக்கு இந்த வேலை, கணவனுக்கு இந்த வேலை என்ற பிரிவினையில்லாமல் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும்போது இருவருக்கிடைப்பட்ட அன்பு குறையாதிருக்கும். இந்த அன்பு தான் தாம்பத்ய வாழ்க்கையின் அச்சாணியாக இருக்கும். அதேபோல இருவருமே உடல்நலத்தில் அக்கறை செலுத்துவதும் அவசியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? மனதும் உடலும் நன்முறையில் பேணப்பட்டால் தாம்பத்யத்தில் ஏது குறை...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு