Published:Updated:

247 கண்கள்; 2 முழு உடல்; ஆண்டுதோறும் ரத்ததானம்... மனிதநேயம் வளர்க்கும் மாடத்தட்டுவிளை கிராமம்!

Eyes
Eyes

மாடத்தட்டுவிளை கிராமத்தினரை முன்மாதிரியாகக் கொண்டு அக்கிராமத்தைச் சுற்றியுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண் தானம் அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் பேருக்கு கண்தானம் தேவைப்படுகிறது. ஆனால் இறந்த பிறகு வெறும் 25,000 பேரின் கண்கள் மட்டுமே தானம் செய்யப்படுகின்றன. அதாவது 50,000 கண்கள் மட்டுமே கிடைக்கின்றன. மீதம் 2 லட்சம் பேருக்கு கண்கள் கிடைப்பதில்லை. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கண் தானத்தைப் பெறும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் மக்களிடம் விழிப்புணர்வும் தயக்கமும் அதிகமாகவே காணப்படுகிறது.

Highest number of eye donors in the Madathattuvilai
Highest number of eye donors in the Madathattuvilai

தனிநபரின் கண்களை தானம் பெறுவதே சவாலாக இருக்கும் நிலையில், ஒரு கிராமம் முழுவதுமே கண் தானத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கிராமத்தில் இறந்தவர்களின் கண்கள் தானமளிக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை என்ற கிராமத்தில் அந்த சேவை சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்தக் கிராமத்தில் இதுவரை 247 பேரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆராய்ச்சிக்காக இருவரின் உடல் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நல்ல செயலை முதலில் முன்னெடுத்தது அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களே! கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஓர் இயக்கமாக இளைஞர்கள் செயல்படத் தொடங்கினார். முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு கிராமத்தில் கண் தானம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தினர். அதன் விளைவாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் எஸ் சுவாமிதாஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் கண்தானம் செய்ய முதன்முதலாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். அன்றைய தினமே இளைஞர்கள் பெரியோர்கள் என 60 பேர் பெயரைப் பதிவு செய்து இந்த நற்செயலுக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

Eye
Eye

ஆரம்பக்காலத்தில் இறந்தவர்களின் கண்களைத் தானம் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. 'கண்களைப் பூத உடலிலிருந்து எடுத்துவிட்டால் இறப்பிற்குப் பின்னர் சொர்க்கத்தில் இறைவனைக் காண முடியாத நிலை ஏற்படும்' என்ற மூடநம்பிக்கை மக்களிடம் காணப்பட்டது. இதுபோன்ற மூட நம்பிக்கையை விட்டொழித்து மக்களை முற்போக்குச் சிந்தனையில் செயல்பட வைக்கக் கண் தானம் மற்றும் உடல் தானம் குறித்து ஆலயத்தில் தொடர் விவாதங்கள் நடத்தப்பட்டு, ஒருமித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு இளைஞர் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினரும் மாற்றுத்திறனாளியுமான டி.செபஸ்தியான் என்பவரின் கண்கள்தான் முதல் தானம் வழங்கப்பட்டன. அதே ஆண்டு மேலும் எட்டுப் பேரின் கண்கள் தானம் பெறப்பட்டன. திருமணம், படிப்பு, வெளியூர் வேலை போன்ற பல காரணங்களால் வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற இளைஞர்களால் ஒருங்கிணைப்புப் பணிகளை ஒரு கட்டத்தில் சரிவரச் செய்ய இயலாமல் போக, ஆலய நிர்வாகம் கண்தானம் பெறுவதற்கான பொறுப்புகளை அதே ஆலயத்தில் உறுப்பினர்களாக இருக்கும் மற்றொரு குழுவினருக்கு வழங்கியது.

Madathattuvilai  Church
Madathattuvilai Church

அந்தக் கிராமத்திலுள்ள திருமணமான நபர்கள், அவ்வூரிலேயே வசித்து தொழில் அல்லது வேலைக்குச் செல்லும் நபர்களைக் கொண்டு இந்தக் குழு செயல்படுகிறது. இதனால் கண் தான ஒருங்கிணைப்புப் பணிகள் மீண்டும் தொய்வின்றி நடைபெறத் தொடங்கியது. 'நல்ல நோக்கத்தில் கண்தானம் பெறும் செயல்களைச் செய்து வந்தாலும் அவ்வப்போது சில தடங்கல்களையும் விமர்சனங்களையும் சந்திக்க நேர்கிறது' என்கின்றனர் இந்தக் குழுவினர்.

"தகவல் கிடைச்சதும் நாங்க இறந்தவரின் வீட்டிற்கு முடிந்த அளவு விரைவாப் போவோம். சின்னதா ஒரு ஜெபம் பண்ணிட்டு பூத உடலைக் குளிப்பாட்டுவது அலங்காரம் செய்வது போன்ற வேலைகளை அந்த வீட்டு மக்களுடன் இணைந்து செய்வோம். அதற்குள் கண் மருத்துவமனைக்குத் தகவல் குடுத்து, அங்கிருந்து வந்து கண்களை தானமா எடுத்துட்டு போய்ருவாங்க. தானம் செய்த நபர் குறித்த விவரங்கள நாங்க ஒரு பதிவேட்டில பதிவு செய்து, அவங்க குடும்ப உறுப்பினர்கள் யார்கிட்டயாவது கையொப்பம் வாங்கிருவோம். சில வீடுகளில் நாங்க நுழையும்போதே 'கழுகு கும்பல் வந்துட்டு, கண்ண புடுங்கி ஆதாயம் தேடுற கும்பல் வந்துட்டு'னு இன்னும் சிலர் சொல்லத்தான் செய்றாங்க. நாங்க அதையெல்லாம் பொருட்படுத்தாம இதை சேவையா நினைச்சு செய்துட்டு வாறோம்" என்கின்றனர் குழுவினரில் சிலர்.

Highest number of eye donors in the Madathattuvilai
Highest number of eye donors in the Madathattuvilai

சில குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கண் தானம் வழங்கியுள்ளனர். கிராமத்திலேயே இளம் வயதில் கண் தானம் வழங்கியவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருசகோதரிகள். ஜெரனஸ், சாந்தி ஷீலா தம்பதியரின் மகள்களான ஜெஃப்லின் இன்பான்சி சிலிசியா மற்றும் ஜோலின் ஸ்டெஃபி. இறக்கும்போது இவர்களின் வயது முறையே 15 மற்றும் 14. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பேரழிவின்போது வேளாங்கண்ணியில் சிக்கிக் கொண்டனர். அதன் பிறகு கை, கால் முடக்கம் ஏற்பட்டு 2014, 2015-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இரு மகள்களை இழந்த சோகத்திலும் கண்தானம் செய்த அத்தம்பதி அக்கிராமத்தின் ஆதர்ச நாயகர்களாகப் போற்றப்படுகின்றனர்.

இது குறித்து ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஜெயகுமார், "மாடத்தட்டுவிளை இளைஞர்கள் செய்த முன்னெடுப்பால் இன்று வரை தானம் வழங்குவதை எங்களால் செய்ய முடிகிறது.

Jayakumar
Jayakumar

ரத்த தான முகாமையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஊர் மக்கள் பிறருக்குத் தானமளித்தே பழகியவர்கள். பிரதிபலன் இல்லாமல் நாங்கள் இந்தச் செயலைச் செய்து வருகிறோம்... தொடர்ந்து செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாடத்தட்டுவிளை கிராமத்தினரை முன்மாதிரியாகக் கொண்டு அக்கிராமத்தைச் சுற்றியுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண் தானம் அளிக்க முன்வந்துள்ளனர். அவர்களுக்கு மாடத்தட்டுவிளை கிராமத்தினர் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

eye donors got awards in the Madathattuvilai
eye donors got awards in the Madathattuvilai
தமிழகத்தில் 11 ஆண்டுகளில் 1,291 பேர் உடலுறுப்பு தானம்!

தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் தானமளித்து முகம் அறியா மனிதர்களின் வாழ்விற்கு அர்த்தமளிக்கும் இந்தக் கிராமத்திற்கு அரசு சார்பில் இதுவரை ஒரு சிறிய அங்கீகாரம்கூட கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. ஆனால் தானமளிக்கும் இந்தக் கிராமத்தினருக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் இந்தப் பணியைச் செய்து வரும் அவ்வூர் மனிதர்கள் மனிதத்தின் மீதான நம்பிக்கையின் விழுமியங்கள்!

அடுத்த கட்டுரைக்கு