Published:Updated:

சிறுமியின் இதயத்திலிருந்து 150 கிராம் கட்டி அகற்றம்... சாதனை படைத்த மதுரை ராஜாஜி மருத்துவமனை!

 ராஜாஜி மருத்துவமனை
ராஜாஜி மருத்துவமனை

இந்தக் கட்டி லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடியது!

திருநெல்வேலி மாவட்டம் சுத்திகுளத்தைச் சேர்ந்த குணசேகரனின் மகள் சீதாலட்சுமி. ஆறாம் வகுப்பு படித்து வரும் சீதாலட்சுமி, சிறுவயதிலிருந்தே மூச்சுத்திணறல், நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சீதாலட்சுமி
அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சீதாலட்சுமி

இதய நெஞ்சக அறுவைசிகிச்சைத் துறையில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். சீதாலட்சுமியின் இதயத்தில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தக் கட்டியின் தன்மையை அறிய அறுவைசிகிச்சை மூலம் அக்கட்டியிலிருந்து திசு பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் இந்தக் கட்டி லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடியது என்பது தெரியவந்தது. அந்தக் கட்டியானது ரத்த ஓட்டத்தை தடைசெய்யும் வகையில் அமைந்திருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இரண்டு கட்டமாக அறுவைசிகிச்சை செய்து 150 கிராம் எடை கொண்ட அந்தக் கட்டியை அகற்றினார்கள் மருத்துவர்கள்.

இதுகுறித்து மருத்துவமனையின் டீன் சங்குமணி கூறுகையில், ''இதயத்தில் செய்த இந்த அறுவைசிகிச்சை காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. இதே கட்டியைத் தனியார் மருத்துவமனைகளில் அகற்றி இருந்தால் ரூபாய் ஐந்து லட்சம்வரை செலவாகியிருக்கும். இங்கு அனுமதிக்கப்பட்ட சீதாலட்சுமிக்கு சிறுவயதிலிருந்தே இதயத்தில் கட்டி இருந்தது.

டீன் சங்குமணி
டீன் சங்குமணி
 `திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு!' - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடக்கம்

அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால் அரசு மருத்துவமனையை அணுகினர். இங்கு திசு பரிசோதனை செய்து கட்டியைக் கண்டறிந்து வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து முடித்துள்ளோம்'' என்றார்.

இதுகுறித்து சீதா லட்சுமியின் தந்தை குணசேகரன், ''என் மகள் சீதாலட்சுமிக்கு சிறுவயதிலிருந்தே மூச்சுத்திணறல் இருந்து வந்தது. சளி அதிகமாக உள்ளதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்றனர். கடந்த சில மாதங்களாக அவள் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தாள். எனவே, நாங்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தோம். இங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் என் மகளுக்கு இதயத்தில் கட்டி உள்ளதைக் கண்டுபிடித்து அறுவைசிகிச்சை செய்தனர்.

குணசேகரன்
குணசேகரன்

பொருளாதாரத்தில் பின்தங்கிய எங்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் அறுவைசிகிச்சையை செய்து முடித்தனர். சிகிச்சைக்காக நாங்கள் பணம் செலவழிக்கவில்லை. அறுவைசிகிச்சை முடிந்து என் மகள் தற்போது நலமுடன் இருக்கிறாள்'' என்றார் சந்தோஷத்துடன். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு இது மற்றொரு சாதனை.

பின் செல்ல