Published:Updated:

10 பியர், 18 மணி நேர போதையில் கீழே விழுந்தால்...?!

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பிரச்னை
சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பிரச்னை

10 பியர்களை ஒரேநேரத்தில் குடித்துவிட்டு போதையில் 18 மணிநேரம் தூங்கியிருக்கிறார் ஹுயூ. போதை தெளிந்து எழுந்தபோது அடிவயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டிருக்கிறது.

மது அருந்துவதால் கல்லீரல் முதல் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுவது நாமறிந்ததே. சீனாவில் ஒருவர் மது அருந்திய போதையால் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் விட்டதால் சிறுநீர்ப்பை கிழிந்து, சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த 40 வயது நபர் ஹுயூ, சமீபத்தில் ஓர் இரவில் 10 பியர்களை ஒரேநேரத்தில் குடித்துவிட்டு போதையில் தூங்கியிருக்கிறார். அதீத போதையால் அவரால் நடுவில் எழுந்திருக்கவே முடியவில்லை. சுமார் 18 மணிநேரம் தொடர்ந்து தூங்கியிருக்கிறார். போதை தெளிந்து எழுந்தபோது அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டிருக்கிறது.

மது அருந்துதல்
மது அருந்துதல்
Representational image

உடனே மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருடைய சிறுநீர்ப் பை மூன்று இடங்களில் கிழிந்திருந்ததைக் கண்டறிந்துள்ளனர். அவர் 18 மணிநேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்ததால் சிறுநீர்ப் பையின் பாரம் அதிகரித்ததால் சேதமடைந்தது தெரியவந்துள்ளது. அவசரமாக அறுவை சிகிச்சை செய்து தீவிரம் அதிகரிக்காமல் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

சிறுநீரை நீண்டநேரம் அடக்கிவைப்பது என்பது நம்மில் பலருக்குப் பல நேரங்களில் நடக்கும் நிகழ்வே. குறிப்பாகப் பெண்கள் நீண்டநேரம் சிறுநீரை அடக்குகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால் பொதுக் கழிவறைகள், அலுவலகத்திலுள்ள கழிவறைகளைப் பயன்படுத்தத் தயங்கி, நிறைய பேர் சிறுநீரை அடக்கும் நிலை இருக்கிறது. சிறுநீரை நீண்டநேரம் அடக்குவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்று அறிந்துகொள்ள சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் கே.முருகானந்தத்திடம் பேசினோம்.

bladder damage
bladder damage

"மது அருந்துவதால் சிறுநீர்ப்பை சேதமடையும் பிரச்னை நம் நாட்டிலும் அதிகம் நடக்கிறது. பொதுவாகவே மது, குறிப்பாக பியர் வகைகள் சிறுநீர் பெருக்கியாகச் செயல்படும். அதனால் உடலிருந்து சிறுநீர் அதிகமாகப் பிரியும். மது அருந்திய போதையினாலும் தூக்கத்தினாலும் பலர் குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிக்கத் தவறுகின்றனர்.

போதை, தூக்கம் தெளிந்து எழும்போது சிறுநீர்ப்பை முழுவதும் நிரம்பியிருக்கும். அந்தநேரத்தில் தவறி கீழே விழுந்தாலோ, எதன் மீதாவது மோதினாலோ நீர் நிரம்பிய பலூன் உடைவதுபோல சிறுநீர்ப்பை உடைந்து சேதமடைந்துவிடும். சிலருக்குத் தானாகவேகூட சேதமடையும் வாய்ப்புள்ளது.

உயிரையே பறிக்கும்!

இது தவிர, நரம்பியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக்கீழ் உணர்வில்லாமல் இருப்பவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படாது. அதன் காரணமாக சிறுநீர்ப்பை சேதமடையலாம். சிறுநீர்ப்பாதையில் கல், அடைப்பு ஏற்பட்டாலும் சிறுநீர் வெளியேறாமல் சிறுநீர்ப் பையிலேயே தேங்கிவிடும். அவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சிறுநீர்ப்பை சேதமடைந்து சிறுநீர் வயிற்றுக்குள் செல்லத் தொடங்கினால், உள்ளே சீழ்ப்பிடித்து, உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தும். ஆண்களுக்கு அதிகமாக இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

சாதாரணமாக 4 முதல் 5 மணி நேர இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும்.
மருத்துவர் கே.முருகானந்தம்

அறுவை சிகிச்சையே தீர்வு!

சிறுநீர்ப்பை சேதமடைந்துவிட்டால் லேப்ரோஸ்கோப்பி மூலமோ திறந்த அறுவைசிகிச்சை மூலமோ அந்தக் காயங்கள் சீரமைக்கப்படும். அதன் பிறகு ஓரிரு வாரங்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதற்கென உடலில் வேறு பாதை அமைக்கப்பட்டு, உடலின் வெளியே வெளியேறும் சிறுநீரை சேகரிக்க பை பொருத்தப்படும். அறுவை சிகிச்சை செய்த புண் ஆறிய பிறகே சாதாரணமாக சிறுநீர் கழிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பெண்களுக்கே அதிகம் பாதிப்பு!

பொதுவாகப் பெண்கள் மத்தியில்தான் சிறுநீரை அதிகம் அடக்கும் பழக்கம் இருக்கிறது. சாதாரணமாக ஒரு நபரின் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு 400 மில்லி முதல் 600 மில்லி வரையே இருக்கும். பெண்கள் சிறுநீரை அடக்கி அடக்கிப் பழக்கப்படுத்துவதால் சிறுநீர்ப்பை மெல்ல மெல்ல பெரிதாகத் தொடங்கும். பெரும்பாலான பெண்களுக்கு 800 மில்லி முதல் ஒரு லிட்டர்வரை கொள்ளளவு கொண்டதாக அது மாறிவிடும். 2 லிட்டர் கொள்ளவு வரை தளர்ந்த சிறுநீர்ப் பைகளைக்கூட சிகிச்சைக்கு வருவோரிடம் பார்த்திருக்கிறோம்.

Urologist Dr.Muruganandham
Urologist Dr.Muruganandham

பெண்களின் சிறுநீர்ப்பை பெரிதாவதால் மேல் வயிறுவரை அது இடத்தை ஆக்கிரமிக்கும். அதன் காரணமாக சிறுநீர் முழுவதுமாக சிறுநீர்ப்பையிலிருந்து வெளியேறாது. அதனால் உள்ளேயே தொற்று ஏற்படத் தொடங்கும். சில பெண்களுக்கு சிறுநீர்ப்பை சேதமடையவும் கூடும்.

கொரோனா தொற்று ஏற்படுமா?

சிறுநீர் வழியாக கொரோனா வைரஸ் பரவும் என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் எதுவும் இல்லை. பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின்னர் அதன் மூடியை மூடிவிட்டு ஃப்ளஷ் செய்வது, கழிவறை பயன்பாட்டுக்குப் பின்னர் கைகழுவும் பழக்கம் ஆகியவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடித்தால், தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

bladder infection
bladder infection
உ.பி அரசு காப்பக சர்ச்சை: 57 சிறுமிகளுக்கு கொரோனா; 7 சிறுமிகள் கர்ப்பம்!

ஆண், பெண் இருவரும் பகல் நேரங்களில் 4 முதல் 6 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். இரவு நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு முறை கழிக்கலாம். சாதாரணமாக 4 முதல் 5 மணி நேர இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும்" என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு