Published:Updated:

`40 வயது மட்டுமல்ல, 20 வயதைத் தாண்டிவிட்டாலே மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவசியம்!’ - மருத்துவர் அறிவுரை

மாஸ்டர் ஹெல்த் செக்-அப்... யார் யாருக்கு என்னென்ன பரிசோதனைகள்? - மருத்துவரின் வழிகாட்டல்!

மாஸ்டர் ஹெல்த் செக்-அப்
மாஸ்டர் ஹெல்த் செக்-அப்

எந்தவொரு நோயையுமே வரும் முன் காக்க வேண்டும் என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். `குறைந்தபட்சம் முதல் நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்துவிடுங்கள்' என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் ஆலோசனை. அதெப்படி முதல் நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிவது என நமக்குத் தோன்றலாம்!

ஹெல்த் செக்-அப் லிஸ்ட்
ஹெல்த் செக்-அப் லிஸ்ட்

``அதற்குத்தான், வருடம் ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ளுங்கள் எனக் கூறுகிறோம்" என்கிறார், சென்னை தனியார் மருத்துவமனையின் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் பிரிவின் மூத்த பொதுநல மருத்துவருமான அர்ஷத் அகில்.

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்றால் என்ன... யாரெல்லாம் அதை மேற்கொள்ள வேண்டும்... என்னென்ன பரிசோதனைகள் எல்லாம் அதில் இடம்பெறும் என்பது குறித்துப் பேசுகிறார் அவர்.

மருத்துவர் அர்ஷத் அகில்
மருத்துவர் அர்ஷத் அகில்

``எந்தவொரு நோயையுமே, முதல் நிலையில் கண்டறியுங்கள் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம். நோய் பாதிப்புகளை முதல் நிலையிலேயே கண்டறிவதற்கு, அதன் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும். ஆனால், தனிநபர் ஒருவர் எல்லா நோயின் அறிகுறிகளையும் அறிந்து வைத்திருப்பது எப்படி சாத்தியம்? அதனால்தான், வருடத்துக்கு ஒருமுறை மாஸ்டர் செக்-அப் செய்து, உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறோம். ஒருவேளை ஏதேனும் பாதிப்பு இருப்பின், அவற்றைக் கண்டறிந்துவிடலாம். எதுவும் பாதிப்பு இல்லை எனில், அந்த மகிழ்வும் நிறைவுமே ஆரோக்கியத்தை இன்னும் அதிகரிக்குமே!

Vikatan

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்பது, அடிப்படை வாழ்வியல் பிரச்னைகளுக்கான பரிசோதனை முறைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான பரிசோதனை. இதில் இடம்பெறும் பரிசோதனைகளுக்கான பட்டியல், ஒவ்வொரு மருத்துவமனைக்கும், மருத்துவருக்கும் ஏற்ப மாறுபடலாம். பெரும்பாலான இடங்களிலுள்ள அடிப்படையான பட்டியலை நான் இங்கு முன்வைக்கிறேன்.

Model Health Check up list
Model Health Check up list

* ஹீமோகிராம் (ரத்தப் பரிசோதனை)

* ரத்தச் சர்க்கரையின் அளவு

* சிறுநீரகப் பரிசோதனைகள் (யூரிக் அமிலப் பரிசோதனை, நீரிழிவு சிறுநீரகப் பரிசோதனை உள்ளிட்டவை)

* லிபிட் புரொஃபைல் (கொலஸ்ட்ரால் அளவுக்கான பரிசோதனை)

* கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனை

* முழுமையான சிறுநீர் பரிசோதனை

* மல பரிசோதனை (தேவைப்பட்டால் மட்டுமே இது மேற்கொள்ளப்படும்)

* நெஞ்சுப் பகுதிக்கான எக்ஸ்-ரே

* ஈ.சி.ஜி.

* அடிவயிற்றுக்கான அல்ட்ரா சவுண்டு பரிசோனை

* பாப்ஸ்மியர் எனப்படும் பரிசோதனை (கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனை முறை)

* மருத்துவர் மேற்கொள்ளும் முழுமையான பரிசோதனை

இத்தனை மாதங்களுக்கு/வருடங்களுக்கு ஒருமுறை என அனைவரும் ரெகுலர் ஹெல்த் செக்-அப்பை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்!

இவை அனைத்தும் பரிசோதனைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெற வேண்டும். பரிசோதனையின் முடிவுகளில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அதைத் தொடர்ந்து மேற்கொண்டு தேவைப்படும் பரிசோதனைகள்/சிகிச்சைகளை, சம்பந்தப்பட்ட மருத்துவர் அறிவுறுத்துவார்.

* 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், வருடத்துக்கு ஒருமுறை நிச்சயம் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள வேண்டும்.

* 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது அடிப்படை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்வது நல்லது.

திருமணத்துக்கு முன் இருவரும் மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகள் சில உள்ளன. விருப்பமுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் மட்டும் மேற்கொள்ளலாம்.
மருத்துவர் அர்ஷத் அகில்

* சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், ஆஸ்துமா போன்ற வாழ்வியல் நோய்கள் இருப்பவர்கள், வயது வித்தியாசமின்றி மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அவர்களின் மருத்துவரின் அறிவுரையின்பேரில் மாஸ்டர் ஹெல்த் செக்-அப்போடு சேர்த்து, தங்களது நோய் பாதிப்புக்கான பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும்.

* மாஸ்டர் ஹெல்த் செக்-அப்களிலேயே பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பிரத்யேக பரிசோதனைகள் கொண்ட பட்டியல்கள் உள்ளன.

ஹெல்த்
ஹெல்த்

* திருமணத்துக்கு முன் ஆண், பெண் இருவரும் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் ஹெச்.ஐ.வி-க்கான பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, ஹெபடைட்டிஸ் பரிசோதனை, பாலியல் தொற்றுப் பிரச்னைகளைக் கண்டறியும் வி.டி.ஆர்.எல் பரிசோதனை போன்றவையெல்லாம் இருக்கும். எனினும், இவை கட்டாயமில்லை என்பதால், விருப்பமுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் இவற்றை மேற்கொள்ளலாம்.

* இத்தனை மாதங்களுக்கு/வருடங்களுக்கு ஒருமுறை என அனைவரும் ரெகுலர் ஹெல்த் செக்-அப்பை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்ப மருத்துவரிடமே இந்தப் பரிசோதனைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இன்றைய சூழலில், மாவட்ட அரசு மருத்துவமனைகள் பலவற்றிலும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் இலவசமாகவே மேற்கொள்ளப்படுகிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பலரும் செய்யும் தவறு என்னவெனில், ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் மேற்கொண்டு, அதன் முடிவில் `எந்தப் பிரச்னையும் உங்களுக்கில்லை' என மருத்துவர் சொல்லிவிட்டால், மேற்கொண்டு பல வருடங்களுக்கு பரிசோதனையே செய்யாமல் இருப்பார்கள். இன்னும் சிலர், வாழ்நாளில் இதுவரை ஹெல்த் செக்-அப்பே செய்யாமல் இருப்பார்கள்.

ஹெல்த் செக்-அப் லிஸ்ட்
ஹெல்த் செக்-அப் லிஸ்ட்

வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, `நான் நன்றாகத்தான் இருக்கிறேன்' என்பார்கள். என்னிடம் ஹெல்த் செக்-அப் மேற்கொண்ட ஒருவர் இப்படிச் சொன்னபோது, அவருக்கு செக்-அப்பின் அவசியத்தை நான் எடுத்துரைத்தேன். மேற்கொண்டு அவர் செக்-அப் செய்தபோதுதான், அவருக்கு சிறுநீரகப் புற்றுநோய் முதல் நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாகப் பரிசோதனைகள் மேற்கொண்டு, முதல் நிலையிலேயே அவரை எளிமையாகக் குணமாக்கினோம்.

`நாம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோமா' என்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்துகொள்ளவேண்டியது அவரவரின் கடமை, கட்டாயம்!"

``இதை வாசிக்கும் நீங்கள், ரெகுலராக ஹெல்த் செக்-அப் செய்பவரென்றால் மகிழ்ச்சி. இல்லையெனில், தாமதிக்காமல் உடனடியாக உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்."

என்ற பரிந்துரையுடன் முடித்தார், அர்ஷத் அகில்.