இந்தியாவில் பிரசவகால இறப்பு விகிதம் 2017-19 காலகட்டத்தில் 103 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பிரசவகால இறப்பு விகிதம் குறைந்து வருவதால், 70 என்ற இலக்கை இந்தியா 2030-ம் ஆண்டுக்கு முன்பாகவே அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 2015 - 17 காலகட்டத்தில் 122 ஆக இருந்த இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. பிரசவகால இறப்பு என்பது முக்கியமான சுகாதார குறியீடாகும். 1,00,000 பிரசவங்களில் எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதைக் கணக்கிடுவதே பிரசவ கால இறப்பு விகிதம். இந்தியாவில் இது 1990-ல் 556 ஆகவும், 2004-06 காலகட்டத்தில் 254 ஆகவும் இருந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போது நாட்டில் ஒட்டுமொத்தமாக பிரசவகால உயிரிழப்புகள் 103 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மாநிலங்கள் வாரியாகப் பார்த்தால் மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் பிரசவகால இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது. அதிர்ச்சியளிக்கும் விதமாக மேற்கு வங்கத்தில் இந்த இறப்புவிகிதம் 98-லிருந்து 109 ஆக அதிகரித்துள்ளது.
பிரசவகால இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் வழக்கம்போல் கேரளாவே உள்ளது. அங்கு பிரசவகால இறப்பு விகிதமானது 43-ல் இருந்து 30 ஆகக் குறைந்து முன்னேற்றம் கண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு பிரசவகால உயிரிழப்பு விகிதம் 38. இந்த வரிசையில் மூன்றாவதாக இருந்த தமிழகத்தைப் பின்னுக்குத் தள்ளி 56 என்ற விகிதத்தின்படி தெலங்கானா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
நான்காவது இடத்தில் இருக்கும் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இந்த விகிதம் 58 ஆக உள்ளன. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகத்தைத் தவிர பிற மாநிலங்களில் இந்த விகிதம் குறைவாகக் காணப்படுகிறது. கர்நாடகாவில் ஒரு லட்சம் பிரசவங்களில் 83 தாய்மார்கள் உயிரிழக்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த விஷயத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த விகிதம் குறைந்ததற்கு சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் உள்ளிட்டவை காரணங்களாகக் கருதப்படுகின்றன.

வளர்ந்த நாடுகள் பல பிரசவகால இறப்பு விகிதத்தை வெற்றிகரமாக ஒற்றை இலக்க அளவில் கொண்டு வந்துள்ளன. இத்தாலி, போலந்து, பெலாரஸ் ஆகிய நாடுகளில் இறப்பு விகிதம் 2 ஆகக் குறைந்துள்ளன. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் இந்த விகிதம் 7 ஆகவும், கனடாவில் 10, அமெரிக்காவில் 19 என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளத்தில் 186, பங்களாதேஷ் 173, பாகிஸ்தானில் 140 என பிரசவகால இறப்பு விகிதம் உயர்ந்து காணப்படுகிறது. எனினும் சீனா மற்றும் இலங்கையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.