Published:Updated:

`ரெம்டெசிவிர் பலனற்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்!' -அமெரிக்க மருத்துவர் ப்ரியா சம்பத்குமார்

India Covid Outbreak
India Covid Outbreak ( AP Photo / Channi Anand )

ஒலிம்பிக் கமிட்டி, டெல்டா ஏர்லைன்ஸ் என்று உலக அளவிலிருக்கும் பலவிதமான அமைப்புகளுக்கும் கொரோனா தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவரும் ப்ரியாவிடம், கொரோனா பரவல் தொடர்பன கேள்விகளை முன்வைத்தோம்.

தடுப்பூசி, தடுப்பு மருந்து என்று கொரோனா சார்ந்த விஷயங்களைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தாலும் மக்களுக்கு சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை. அதுமட்டுமல்லாமல், கொரோனா புதுப்புது உருபெற்று வளர்வதுபோலவே, புதுப்புது சந்தேகங்களும் முளைக்கத்தான் செய்கின்றன.

``இந்தியாவில் மட்டுமல்ல... உலக நாடுகள் அனைத்திலுமே இதே பிரச்னைதான். அதற்குக் காரணம்... தவறுதலாகவும் தேவையில்லாமலும் பரப்பப்படும் தகவல்களே'' என்று சொல்கிறார் அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் மருத்துவமனையின் தொற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிப் பிரிவின் (இன்ஃபெக்ஷன் பிரிவென்ஷன் அண்ட் கன்ட்ரோல்) தலைவர் டாக்டர் ப்ரியா சம்பத்குமார். ஆம், ப்ரியா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் பிரபலமாக இருந்துவரும் மேயோ கிளினிக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தமிழர் ஒருவர் பணியாற்றுவது, தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை!

மருத்துவர் ப்ரியா சம்பத்குமார்
மருத்துவர் ப்ரியா சம்பத்குமார்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்த தமிழர் ப்ரியா. அப்பா மத்திய அரசு ஊழியர். அப்பாவின் மறைவுக்குப் பிறகு சென்னையில் செட்டில் ஆனது குடும்பம். வேலூர் சி.எம்.சி-யில் எம்.பி.பி.எஸ் படித்தவர், கல்லூரி சீனியரான வின்சென்ட் ராஜ்குமாரை காதலித்து மணம் புரிந்தார். இருவருக்கும் அமெரிக்காவின் மேயோ கிளினிக்கில் ஃபெல்லோஷிப் கிடைக்கவே, படிப்பு, ஆராய்ச்சி என்று அங்கேயே செட்டில் ஆகியுள்ளனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள்.

ஒலிம்பிக் கமிட்டி, டெல்டா ஏர்லைன்ஸ் என்று உலக அளவிலிருக்கும் பலவிதமான அமைப்புகளுக்கும் கொரோனா தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவரும் ப்ரியாவிடம், கொரோனா பரவல் தொடர்பன கேள்விகளை முன்வைத்தோம்.

``கடந்த ஆண்டு அமெரிக்காவில் கோவிட் தொற்று மிகத் தீவிரமாக மாறிப்போனதற்கு என்ன காரணம்?"

``கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேயோ கிளினிக்கின் கோவிட் ரெஸ்பான்ஸ் டீமில் இருந்தேன். எங்கள் ஊழியர்களும் நோயாளிகளும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு. கோவிட் நிர்வாகம் தொடர்பாக அமெரிக்கா முழுக்கவே நிறைய பிரச்னைகள் இருந்தன. தலைமைப் பொறுப்பிலிருந்தவர்களிடமிருந்து தெளிவான வழிகாட்டல்கள் இல்லை. கோவிட் போன்றதொரு மிகமோசமான பொதுச்சுகாதார அவசரச் சூழலில், தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள்தாம் தெளிவாக வழி நடத்த வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. `இப்படித்தான் செயல்பட வேண்டும்‘ என்ற தெளிவான அறிவுறுத்தல்கள் தரப்படவில்லை. `இப்படிச் செய்தாலும் பரவாயில்லை, அப்படிச் செய்தாலும் பரவாயில்லை’ என்பது போன்ற தகவல் பரிமாற்றங்கள் சரியானவையல்ல. சொல்லப்போனால், இதையும்கூட சொல்லாமல்... `நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். இது, கொரோனா ஃப்ளூ' என்றும், `சீன வைரஸ்' என்றுமே பேசிக்கொண்டிருந்ததுதான் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் அமெரிக்காவில் நடந்தது. அதாவது, சரியான வழியைக் காட்டுவதற்கான தலைமை அமெரிக்காவில் இல்லாததால் அதிக அளவிலான இறப்புகளைச் சந்தித்தோம்.

America Polls
America Polls
Mary Altaffer | AP

அந்த நேரத்தில் ஃபெடரல் கவர்மென்ட் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
நவம்பரில் அரசு மாறியது. அமெரிக்காவுக்கு தடுப்பூசி வந்தது. நாட்டில் பாதி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. தொற்றுகள் குறைந்து வருகின்றன. அமெரிக்காவில் சில இடங்களில் இயல்புநிலை திரும்பியிருக்கிறது. தினமும் பாசிட்டிவ்வான தகவல்களைக் கேள்விப்படுகிறோம். வெளியில் இருக்கும்போது, அதாவது சின்ன கூட்டங்களில் இருக்கும்போதும், வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணியத் தேவையில்லை என்றெல்லாம் இப்போது நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர் அமெரிக்கர்கள்."

``கோவிட் அறிகுறிகள் தென்பட்டாலோ, பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தாலோ ஒருவர் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?"

``கோவிட் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தாலே பதற்றமடையாதீர்கள். காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் ரிசல்ட்டை பற்றிக் கவலைப்படாமல் இது கோவிட்தான் என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே போய் யாருக்கும் தொற்றவிட வேண்டாம். வீட்டிலிருக்கும்போது சில விஷயங்களை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வைத்து டெஸ்ட் செய்துகொள்ளலாம். இதைத் தினமும் மூன்று-நான்கு முறை செய்யலாம். அந்த அளவு 92-க்கு கீழ் போனால் மருத்துவரைப் பாருங்கள்.

Quarantine | தனிமைப்படுத்தப்பட்டவர் - Representational Image
Quarantine | தனிமைப்படுத்தப்பட்டவர் - Representational Image
Emilio Morenatti

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் இல்லாவிட்டால், மூச்சுவிடுவதில் லேசான சிரமத்தை உணர்ந்தாலும் உடனே மருத்துவமனைக்கு விரையுங்கள். கோவிட் தொற்று ஏற்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலிலேயே முழுமையாகக் குணமடைகிறார்கள். மருத்துவமனையில் அட்மிஷன் தேவைப்படாத இந்த 95 சதவிகிதம் பேர் பதறிப்போய் மருத்துவமனைக்குப் போய் அட்மிட் ஆவதால், உண்மையிலேயே தீவிர சிகிச்சை தேவைப்படுகிற மக்களுக்கு படுக்கை வசதியும் சிகிச்சைகளும் கிடைக்காமல் போகிறது. மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிடி ஸ்கேன், ரத்தப் பரிசோதனை எதுவும் தேவையில்லை. உயிர்காக்கும் மருந்தாகச் சொல்லப்படுகிற டெக்ஸாமெத்தாஸோன்கூட தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்குத்தானே தவிர, மிதமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அது பாதகத்தையே ஏற்படுத்தும்."

``தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இந்தியா போலவே, அமெரிக்காவிலும் மக்களிடம் தயக்கம் இருக்கிறதா?"

``அமெரிக்காவிலும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. `என் மாமாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் வந்தது’ என்பது போல சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள்தான் காரணம். கோவிட்டுக்கான எந்தத் தடுப்பூசியுமே 100 சதவிகிதம் பலனளிக்கக் கூடியது அல்ல. 70 முதல் 95 சதவிகிதம் பலனளிக்கக்கூடியவை, தொற்று வராமல் தடுக்கக்கூடியவை. ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் தீவிர சிகிச்சை அளிக்கும் அளவுக்குப் போகாமலும், உயிரிழப்பு ஏற்படாமலும் காக்கும். எனவே, `தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்று வரலாம். ஆனால், அது உயிரைப் பறிக்காது' என்ற செய்தியை எல்லோருக்கும் சொல்ல வேண்டும். அமெரிக்காவைப் பொறுத்தவரை 4 மாதங்களில் 150 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இது, அமெரிக்க மக்கள்தொகையில் 50 சதவிகிதம். இந்தியாவில் 2 மாதங்களில் 120 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இது, இந்திய மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தைவிடவும் குறைவு. இந்தியாவுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைத்தால் நிறைய பேருக்கு போட முடியும்.

Vials of COVAXIN
Vials of COVAXIN
AP Photo/Anupam Nath

தடுப்பூசிகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் எப்போதுமே உலக அளவில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். உலகிலேயே பணக்கார நாடு அமெரிக்கா. அங்கே ஒரே நாளில் 3 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டன. எல்லோரும் அமெரிக்காவை பாராட்டினார்கள். இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்கின்றன. 1997-ல் நடந்த பல்ஸ் போலியோ டிரைவில் ஒரே நாளில் 140 மில்லியன் போலியோ தடுப்பு மருந்துகள் இந்தியாவில் வழங்கப்பட்டன. அடுத்தடுத்த வருடமும் அப்படியே நடந்தது. எனவே, மக்களுக்குத் தடுப்பு மருந்தைக் கொண்டு சேர்ப்பதில் இந்தியாவுக்கு இணையே இல்லை. அதுபோன்றதொரு நடவடிக்கைதான் இப்போது தேவை. போலியோ தடுப்பு மருந்துக்குச் செய்ததுபோல வீடு தேடிச் சென்று கொடுப்பதுதான் சரியானது. இதை இந்தியாவால் நிச்சயம் செய்ய முடியும்."

``100 சதவிகித தடுப்பூசி சாத்தியமா?"

``எந்த நாட்டிலும் அது நிச்சயம் சாத்தியமில்லை. அலர்ஜி உள்ளிட்ட வேறு ஏதோ காரணங்களுக்காகத் தடுப்பூசியைத் தவிர்ப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். எனவே, 100 சதவிகித தடுப்பூசி என்பது சாத்தியமற்றது. அது தேவையற்றதும்கூட. 80 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி போட்டாலே வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திவிட முடியும். இறப்பு விகிதத்தையும் பெருமளவில் குறைத்துவிடலாம்."

Remdesivir
Remdesivir
Zsolt Czegledi/MTI via AP

``ரெம்டெசிவிர் மருந்தைப் பற்றி முதலில் அமெரிக்காதான் உலக அளவில் பரப்பியது. குறிப்பாக, கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் இதைப் பற்றி பெருமையாகப் பேசினார். உண்மையிலேயே இந்த மருந்து அற்புதமானதா... கொரோனாவுக்கு எதிராக அது செய்யும் வேலைதான் என்ன?"

``இது ஒருவகையான ஆன்டிவைரல் மருந்து. நம் உடலுக்குள் கொரோனா வைரஸ் வந்த பிறகு, இந்த மருந்தைக் கொடுத்தால், அந்த வைரஸ் பல்கிப் பெருகுவதைக் கட்டுப்படுத்தும். ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது, அதைக் குணப்படுத்துவதற்கு இந்த மருந்து உபயோகப் படுத்தப்பட்டது.
கோவிட் வந்த புதிதில் ஓர் ஆய்வகத்தில் இந்த மருந்தை டெஸ்ட் செய்ததில் நல்ல ரிசல்ட்டைக் காட்டியது. கொரோனா வைரஸை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாத சூழல் நிலவிய அந்த நாள்களில், `ரெம்டெசிவிர், கொரோனா வைரஸை கொல்லக்கூடியது' என்பது பலருக்கும் வியப்பான செய்தியாக இருந்தது. உடனே பெரிய அளவில் இதை நோயாளிகளிடம் பரிசோதித்தார்கள். கொரோனா பரவல் குறித்த பெரும் கவலை சூழ்ந்திருந்ததால், `இப்படியொரு மருந்து மட்டும் இருந்தால் உலகத்தையே காப்பாற்றிவிடலாம்' என்று எல்லோரும் நம்பினோம். இதையடுத்து பரிசோதனை அடிப்படையில் 6 மாத காலத்துக்கு இதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

அந்தப் பரிசோதனைகள் தந்த புள்ளிவிவரங்களை ஆராய்வதற்குள்ளாகவே, `ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து' என்பது போன்ற செய்தி உலக அளவில் பரவிவிட்டது. இந்த மருந்தைத் தயாரிக்கும் கம்பெனிகளும் இந்த விஷயத்தை நன்றாக புரொமோட் செய்யத் தொடங்கின. அதாவது, பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே, `குட் நியூஸ்’ என்று பரப்பப்பட்டது. ஆனால், பரிசோதனை முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தன. இந்த மருந்து கொடுக்கப்படும்போது நோயாளியின் உடலில் வைரஸ் அளவு கொஞ்சம் குறைகிறது. ஆனால், அதனால் நோயாளிக்குப் பெரிய பலன் இல்லை. இறப்பு விகிதத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. இது உயிர் காக்கும் மருந்தல்ல என்கிற முடிவுக்கு மருத்துவ உலகம் வந்தது. ஆனால், மருத்துவர்கள் சொல்வதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ரெம்டெசிவிர் என்பதை மேஜிக் மருந்தாகவே நினைக்கிறார்கள்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு

இந்த விஷயத்தில் மக்களின் உளவியலும் ஒரு காரணம். விலை உயர்ந்த பொருள் நிச்சயம் உசத்தியானது என்ற எண்ணம் மக்களுக்கு உண்டு. ரெம்டெசிவிர் விஷயத்திலும் நிறைய காசு கொடுத்து, நீண்ட வரிசையில் நின்று வாங்குகிறார்கள். உண்மையில் உயிர்காக்கும் மருந்துகள் ஐந்து ரூபாய்க்கேகூட கிடைக்கும். ஆனால், நம்ப மாட்டார்கள் என்பதுதான் பிரச்னையே. நம் உறவினர் யாராவது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, `உனக்கு அஞ்சு ரூபா மருந்து வேணுமா, லட்ச ரூபா மருந்து வேணுமா’ என யாராவது கேட்டால், நிச்சயம் லட்ச ரூபாய் மருந்தைதான் தேர்வுசெய்வோம். அன்பானவர்களுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம்... உண்மையில் மலிவான மருந்துகள்தான் உயிர்காக்கும் என நிரூபிக்கப்பட்டவை. விலை அதிகமான ரெம்டெசிவிர் எந்தப் பலனும் இல்லாதது என்ற செய்தி மக்களுக்கு அழுத்தமாகப் போய்ச் சேர வேண்டும்."

``கொரோனா வைரஸ், தன் பங்குக்கு வேரியன்ட் ஆகி, பல்கிப் பெருகி, பெரும்தொற்றை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
வைரஸ் வேரியன்ட் என்றால் என்ன... அது எப்படி உருவாகிறது?"

``கொரோனா என்பது ஆர்.என்.ஏ வகை வைரஸ். அது நம் உடலுக்குள் வந்த பிறகு பல்கிப்பெருகி, நிறைய பிரதிகளை உருவாக்கிதான் நோயை ஏற்படுத்துகிறது. ஒரு வகுப்பில், ஒரு மாணவர் பேனா, பேப்பர் உபயோகித்து கையால் நோட்ஸ் எழுதிக்கொண்டிருக்கிறார். இதைப் பிரதிகள் எடுத்து (ஜெராக்ஸ்) மற்ற மாணவர்களுக்கும் கொடுத்தால், கையால் எழுதியது போன்ற அதே பிரதி கிடைக்கும். இதே நோட்ஸை 60 மாணவர்களிடம் கொடுத்து கையாலேயே எழுதச் சொன்னால், நிச்சயம் ஒன்றிரண்டு பேர் தவறு செய்வார்கள். அதை இன்னும் 60 மாணவர்களிடம் கொடுத்து எழுதச் சொல்லும்போது இன்னும் சில தவறுகளைச் செய்வார்கள். 100 சதவிகிதம் பெர்ஃபெக்ட்டாக இருக்காது.

Novel Coronavirus SARS-CoV-2
Novel Coronavirus SARS-CoV-2
Photo: AP
`பயனில்லாத மருந்துக்கா இவ்வளவு பஞ்சாயத்துகளும்?' - தொடரும் ரெம்டெசிவிர் குழப்பம்!

இதுபோல நூற்றுக்கணக்கான வகுப்புகளில் இருந்து போகும் நோட்ஸில் நிச்சயம் நிறைய வேறுபாடுகள் இருக்குமல்லவா? வைரஸின் வேரியன்ட் என்பதும் இப்படியானதுதான். ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பல்கிப்பெருகும்போது அதில் நிகழ்கிற தவறுதான் வேரியன்ட் எனப்படுகிறது. நிறைய நபர்களிடம் தொற்று காணப்படும்போது, இப்படிப்பட்ட வேரியன்ட் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
மீண்டும் நோட்ஸ் உதாரணத்துக்கே வருவோம். அந்த நோட்ஸ் 5 பேருக்குப் போகும்போது தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. 5 லட்சம் பேரிடம் போகும்போது தவறுகளுக்கான வாய்ப்புகளும் அதிகம். இந்தியாவில் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் வைரஸில் தவறுகள் நிகழவும் புதிய வேரியன்ட்டுகள் உருவாகவும் வாய்ப்புகள் மிக அதிகம். மனிதர்கள் செய்கிற தவறுகளும் நம்மையே பாதிக்கின்றன. வைரஸ் செய்யும் தவறுகளும் வைரஸை பாதிக்காமல் நம்மையே பாதிக்கின்றன."

``தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாதா?"

``கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது என்பதற்கான தெளிவான காரணங்கள் இல்லை. ஆனாலும் அவர்கள் 28 நாள்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என்கிறது இந்தியன் கைடுலைன் ஒன்று. அது முற்றிலும் தவறானது."

``தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன?"

``பொது சுகாதார நடவடிக்கைகளை மிகச் சரியாக மேற்கொள்ள வேண்டும். லாக்டௌன் என்ற பெயரிலா அல்லது வேறு வார்த்தையிலா தெரியவில்லை, எப்படியாவது மக்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்ய வேண்டும். வெளியிடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் வெளியே வரும்போது மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். "

vegetable market in Jammu, India
vegetable market in Jammu, India
AP Photo / Channi Anand
CoWIN தளத்தில் தடுப்பூசி செலுத்துவதற்குப் பதிவு செய்வது எப்படி? விரிவான வழிகாட்டல்!

இது மட்டும்தான் தொற்றைக் கட்டுப்படுத்த ஒரே வழி. அடுத்த ஆயுதம் தடுப்பூசிகள். இந்தியாவில் தடுப்பூசிகள் சப்ளை மிகக்குறைவாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவ முன் வர வேண்டும். இந்தியாவில் நாம் தொற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது ஒட்டுமொத்த உலகத்துக்குமான ரிஸ்க். அதனாலாவது உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவியே ஆக வேண்டும்.
எங்களைப் போன்று வெளிநாடுகளில் இருப்போர், அவரவர் அரசாங்கத்திடம் இந்த விஷயத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு மூலப்பொருள்களை மட்டும் கொடுப்பது போதாது. இந்தியாவுக்கு தயாரிப்புக்கான வசதிகள் இருந்தாலும் அதற்கான அவகாசம் இல்லை. எனவே, இந்தியாவுக்கு உடனடியாக ரெடிமேடு வாக்சின்கள் வழங்கப்பட வேண்டும்.

இதுபோக கொரோனா தொடர்பான இன்னும் பல கேள்விகளுக்கு விரிவாக விடையளித்திருக்கிறார் மருத்துவர் ப்ரியா. அவை வரும் செவ்வாய் அன்று வெளியாகும் அவள் விகடனில் இடம்பெறுகின்றன. தவறாமல் படியுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு