கோவிட்-19 நோய் பற்றி நாளுக்குநாள் பல்வேறு வகையான குழப்பங்களும் சந்தேகங்களும் அதிகரிக்கின்றன. அத்தகைய சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில் நியூபெர்க் ஆய்வகத்தின் சார்பில் ஆன்லைன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிபுணர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
கொரோனாவின் உருமாற்றங்கள் குறித்து நியூரோ வைராலஜி துறை முன்னாள் பேராசிரியரும், கொரோனா மரபணு வரிசையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கர்நாடக அரசின் ஒருங்கிணைப்பு அதிகாரியுமான வி.ரவி, ``இரண்டு வருடங்களில் கொரோனா குறித்து நாம் கற்றுக் கொண்டது என்னவென்றால் நமக்கு இன்னும் முழுவதாக கொரோனா பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை என்பதைத்தான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒவ்வொரு நாளும் கொரோனா நமக்கு புதுப்புது ஆச்சர்யங்களைத் தருகிறது. சார்ஸ் கோவிட்-2 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் ஒரு RNA வைரஸ். `மியூட்டேஷன்' எனப்படும் உருமாற்றம் RNA வைரஸ்களுக்கான தன்மையில் ஒன்று. வைரஸ் தன்னைத்தானே பெருக்கம் செய்யும் சமயத்தில் அமினோ ஆசிட் வரிசையில் மாற்றங்கள் நிகழ்வதால் உருமாற்றம் நடக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த உருமாற்றம் தொடர்ந்து நடைபெறுவதும் இயற்கையான செயலே. டார்வினின் `இயற்கைத் தேர்வு' (Natural selection) கூற்றுப்படி நடக்கும் செயல். கொரோனாவின் முதல் உருமாற்றம் 2020 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிகழ்ந்தது. இந்த வேரியன்ட்தான் அக்டோபர் மாதத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே தடுப்பூசிகளுக்கான ஆய்வு தொடங்கிவிட்டது. அதற்கு அடுத்து வந்தது B.1.1.7 lineage. முதலில் வேரியன்ட்களை இப்படி எண்களை வைத்து அழைத்து வந்த உலக சுகாதார நிறுவனம், அது கடினமாக இருந்ததால் கிரேக்க எழுத்துகளின் பெயர்களை உபயோகிக்கத் தீர்மானித்தது.

இங்கிலாந்தில் ஆல்ஃபா வேரியன்ட், தென்னாப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா வேரியன்ட்டும் கண்டுபிடிக்கப்பட்டன. 2021-ல் இந்தியாவில் டெல்டா வேரியன்ட் கண்டறியப்பட்டது. இது மற்ற வேரியன்ட்டுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. நவம்பர் மாதத்தில் ஒமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிரேக்க எழுத்துகளில் 15-வது எழுத்து. இடையிலும் சில வேரியன்ட்டுகள் இருந்தன. ஆனால், அவை அதிக நபர்களிடம் பரவவும் இல்லை, அவற்றால் பெரிய பாதிப்பும் இல்லை. ஒமிக்ரான் இப்போதே நம் நாட்டின் பல பகுதிகளில் பரவிவிட்டது.
இந்த மூன்றாம் அலை பிப்ரவரி மாத நடுவில் உச்சத்தைத் தொட்டு பின்பு குறையும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று அதிகம் ஏற்படுகிறது. இதிலிருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிகின்றன. ஒன்று ஒமிக்ரான் தொற்றை, தடுப்பூசிகளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இன்னொன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் கொரோனா கட்டுப்பாடுகளைச் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனாவுக்கான சுய பரிசோதனை கிட் குறித்து கூறுகையில், ``சுயபரிசோதனை கிட் ரேபிட் ஆன்டிஜென் முறைப்படி இயங்குவது. சில சமயங்களில் இந்தப் பரிசோதனையில் தொற்று இருப்பவர்களுக்குக்கூட இல்லை எனக் காட்டவும் வாய்ப்பு உள்ளது. அறிகுறியுடன் தொற்று இருக்கையில் சரியாகக் கண்டுபிடித்து விடுகிறது. ஆனால், அறிகுறியற்ற தொற்று ஏற்பட்டால் தவறு நிகழவும் வாய்ப்பு உள்ளது" என்றார்.

தொற்றுநோய் மருத்துவர் வி.ராமசுப்ரமணியன் ஒமிக்ரான் பரவல் குறித்துப் பேசுகையில், ``மற்ற வேரியன்ட்டைக் காட்டிலும் இளைஞர்களிடம் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாகத் தென்படுகிறது. அதுவும் அதிக காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால், இரண்டு நாள்களில் காய்ச்சல் நன்றாகக் குறைந்துவிடுகிறது. மிகுந்த தொண்டைவலியும் இருப்பதாகச் சொல்கிறார்கள். முதியவர்களும் நான்கைந்து நாள்களில் ஓரளவு நலம்பெற்று விடுகிறார்கள். அதற்காக மெத்தனமாக இருக்கக் கூடாது. தற்போது ஒமிக்ரான் முதன்மையாக நிறைய பேரிடம் தென்பட்டாலும் 20% சதவிகிதம் பேரிடம் டெல்டா போன்ற மற்ற வேரியன்ட் பாதிப்புகளும் தென்படுகின்றன.
ரெம்டெசிவிர் மருந்து முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் ஆக்ஸிஜன் அளவு குறைய வாய்ப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு நன்றாகவே பயன்பட்டது. தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் அதைப் பயன்படுத்தும்போது ஆக்ஸிஜன் அளவு குறையாமல் தடுக்க முடியும்.

ஆனால், ஆரம்ப நிலையிலேயே இவற்றை உபயோகிக்க வேண்டும். இப்போது கிட்டத்தட்ட நிறைய பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ரெம்டெசிவிர் பயன்பாடு குறைவாகவே இருக்கும்.
கொரோனாவை நாம் எதிர்கொள்வதற்கு நிச்சயமாக நமக்குத் தடுப்பூசி தேவை. அது வருமுன் காக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்றதுதான். இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு நிறைய மக்களிடம் பயமும் தயக்கமும் இருக்கிறது. பென்சிலினை நாம் உபயோகிக்கிறோம். அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு சிலருக்கு மரணம் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதன் பல்வேறு நன்மைகள் கருதியே உபயோகிக்கிறோம். அதுபோலதான் கோவிட் தடுப்பூசியும். அவற்றை செலுத்திக்கொள்வதால் நன்மைகள் அதிகம்" என்றார்.
வைராலஜி துறை முன்னாள் பேராசிரியரும் ஐ.சி.எம்.ஆரின் வைராலஜி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் ஜேக்கப் ஜான் கூறுகையில், ``கடந்த இரண்டு அலைகளிலும் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

ஆனால் தொற்று ஏற்பட்ட சில குழந்தைகளிடம் அதிக நாள்கள் தொற்று அறிகுறி, மனம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை இருந்தன. குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பே குறைவு. நாம் உரிய ஆய்வுக்குப் பின்னர் பாதுகாப்பான தடுப்பூசியையே அவர்களுக்குச் செலுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திவிட்டாலும் நம் நாட்டில் இப்போதுதான் ஆய்வு நடக்கிறது. கோவாக்சினை 2 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தலாமா என ஆராய்கிறார்கள். குழந்தைகளுக்கு நிச்சயமாகத் தடுப்பூசி தேவை.
உரிய ஆய்வுக்குப் பின்னர் பாதுகாப்பான தடுப்பூசியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். அதையும் கொஞ்சம் விரைவாகச் செயல்படுத்தினால் நல்லது" என்றார்.