Election bannerElection banner
Published:Updated:

`பயிற்சி மருத்துவர்களும் கொரோனா பணியில் ஈடுபடலாம்!' - நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு முடிவு

COVID-19 (Representation Image)
COVID-19 (Representation Image) ( AP Photo / Jae C. Hong )

பயிற்சி பெறும் மருத்துவர்கள், இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள் ஆகியோரும் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை நிலைகுலையச் செய்வரும் நிலையில் முன்கள பணியாளர்களின் சேவையும் தேவையும் கடந்த ஆண்டைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தட்டுப்பாட்டைப் போக்க புதிய வழிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பயிற்சி பெறும் மருத்துவர்கள், இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள் ஆகியோரும் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில், லேசான பாதிப்புகள் உள்ளவர்கள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கவும் மூத்த மருத்துவர்கள் மேற்பார்வையில் மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid-19
Covid-19
Pixabay

இதே போல இளம் அறிவியல் நர்சிங் (B.Sc), GNM- General Nursing & Midwife பட்டம் பெற்ற மருத்துவ பணியாளர்களும் மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


மேலும் இந்த முறையில் தகுதியான பணியாளர்கள் மூலம் தரமான சிகிச்சை அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நூறு நாள்களுக்கு மேலாக கொரோனா சிகிச்சை அளிக்கும் பணியாளர்களுக்கு பிரதமரின் சிறந்த தேசிய கொரோனா சேவை விருது அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் கட்டுக்கடங்காமல் நோய் பரவிவரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு ஏற்கெனவே கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஓராண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு மனஅழுத்தமும் ஏற்பட்டுள்ளது.


புதிய மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

டெல்லியில் கடந்த சனிக்கிழமை ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 12 பேர் இறந்ததில் ஒரு மருத்துவரும் அடங்குவார். மேலும் மன அழுத்தம் காரணமாக ஒரு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைத் திறம்பட கட்டுப்படுத்தாமல் கைவிரித்துவிட்டது என்று மத்திய அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலை மற்றும் பிற நாடுகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாது மேம்போக்காக பிரச்னையை அணுகியுள்ள மத்திய அரசு இனியாவது தகுந்த நடவடிக்கைகளை எடுத்து மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு