கோவிட் டெஸ்ட் எடுத்தால் இதயத்தில் துவாரம் இருப்பது தெரியுமா? - `ஈஸ்வரன்' லாஜிக் சரியா?

இதுபோன்ற தவறான, மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைத் திரைப்படங்களில் காண்பிப்பது மக்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும்.
பொங்கல் சிறப்பு திரைப்படமாக வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த `ஈஸ்வரன்'. திரைப்படம் எப்படி இருக்கிறது, படம் வெற்றியா இல்லையா என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். ஆனால், அந்தப் படத்தில் காட்டப்படும் ஒரு விஷயம் மக்கள் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது. அதுதான் இந்தக் கட்டுரை.

திரைப்படத்தின் ஒரு காட்சியில் கோவிட்-19 தொற்றுக்கு ஆளான நபருடன் அறியாமல் இருவர் ஒரு விசேஷத்தில் நெருங்கிப் பழகி, செல்ஃபி எடுத்து அதகளம் செய்கின்றனர். இறுதியில் அவருக்கு கோவிட் பாதித்திருப்பது தெரிய வரவே, பயம் தொற்றுகிறது. இதனால் அந்த விசேஷத்தில் கலந்துகொண்ட 10 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை உட்பட குடும்பத்தார் அனைவரும் தங்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தப் படுகின்றனர்.
பரிசோதனை முடிவில் குடும்பத்தார் அனைவருக்கும் நெகட்டிவ் என்றும், ஆனால் வீட்டிலுள்ள பெண் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரும்படியும் போனில் மருத்துவர் பேசுகிறார். கோவிட் பரிசோதனை என்பது மூக்கிலும் தொண்டையிலும் சளி மாதிரியை சேகரித்துச் செய்வது. அதில் எப்படி இதயத்தில் பிரச்னை இருப்பது தெரிய வரும்? இந்தக் காட்சியைப் பார்த்ததும் `கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடுமா?' என்ற கேள்விதான் நினைவுக்கு வந்தது.

இருந்தாலும் அதை ஒரு மருத்துவரிடமே கேட்டு தெளிவுபடுத்தலாம் என்று இதயவியல் மருத்துவர் பி.ஜெயபாண்டியனிடம் கேட்டோம்:
``ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் இதயத்தில் இருக்கும் பிரச்னையைக் கண்டறிவது என்பது 100 சதவிகிதம் முடியாத காரியம்.
ஆனால், ஒரு மருத்துவர் சாதாரணமாக ஒரு நோயாளியை ஸ்டெத்தாஸ்கோப் வைத்துப் பரிசோதிக்கும்போது இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அசாதாரணமான ஒலிகள் கேட்கும். அதை வைத்து இதயத்தில் துவாரம் அல்லது ரத்தக்குழாய் கசிவு, அடைப்பு போன்ற பிரச்னைகள் இருக்கலாம் என்று மருத்துவர் ஊகிப்பார். இருந்தாலும் ஸ்டெத்தாஸ்கோப் பரிசோதனையின்போது இன்ன பிரச்னைதான் இருக்கிறது என்பதை மருத்துவர் அறுதியிட்டுக் கூற முடியாது. ஏதோ பிரச்னை இருக்கிறது என்றுதான் கண்டறிய முடியும்.

இதயத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டுமானால் எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கோவிட்-19 பரிசோதனைக்கு முன்னர் மருத்துவர் இதுபோன்று ஸ்டெத்தாஸ்கோப் மூலம் பரிசோதித்தால் வேண்டுமானால் இதயத்தில் பிரச்னை இருப்பதைத் தெரிவிக்கலாம்.
இதுதவிர, இதயநோய் தீவிரமான நிலையில் படபடப்பு, நடந்தால் மூச்சுத்திணறல், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் அல்லது மருத்துவ சிகிச்சையளித்த வரலாறு ஆகியவற்றை வைத்து இதயத்தில் பிரச்னை இருப்பதைக் கண்டறிய முடியும். நோயாளியிடம் மருத்துவர் பேசி இது போன்ற விஷயங்களைக் கேட்டறிந்திருந்தால் பாதிப்பை அறிய முடியும். வெறும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை வைத்து இதயத்தில் பிரச்னை இருப்பதைக் கண்டறியவே முடியாது" என்றார்.

கோவிட்-19 என்பது காற்றின் மூலமாகவும் ஒருவரிடமிருந்து பரவும் தொற்றுநோய். அதனால்தான் சுகாதாரத்துறை ஊழியர்கள் கவச உடைகள், முகக்கவசம், கையுறை சகிதம் கோவிட் பரிசோதனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்பவருக்கும் செய்துகொள்பவருக்கும் இடையில் தடுப்பு வைக்கப்படுகிறது. கைகளை மட்டும் நுழைத்து மாதிரியைச் சேகரிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து கோவிட்-19 பரிசோதனை செய்ய அறிவுறுத்துவாரா என்ற சந்தேகமும் நமக்கு எழுகிறது.
கேலிக்குறியான தனிமனித இடைவெளி!
திரைப்படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சி தொடர்பாக இடம்பெற்றிருக்கும் வேறு சில விஷயங்களும் சற்று உறுத்தலாகவே இருக்கின்றன. தனிமனித இடைவெளி குறித்து அதிகம் வலியுறுத்தப்படும் இந்த நாள்களில், திரைப்படத்தில் அதற்கு மாறான விஷயம் காட்டப்படுகிறது. அதாவது, நிகழ்ச்சிக்காக நண்பர்கள் ஒன்றுகூடும் இடத்தில் கோவிட்-19 பாசிட்டிவான நபரைக் (அவருக்கு கோவிட் என்பது தெரியாமல்) கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, செல்ஃபி எடுப்பது எனப் பல விஷயங்களை நண்பர்கள் செய்கின்றனர்.

அப்படி நடந்து கொண்டவர்களின் வீட்டில் வயதான அப்பா, குழந்தை, கர்ப்பிணி எல்லோரும் இருக்கின்றனர். நிகழ்ச்சியில் பார்த்த நபருக்கு கோவிட் இருப்பது இவர்களுக்குத் தெரிய வந்ததும் பயம் ஏற்பட்டு பரிசோதனை செய்கின்றனர். ஆனால், வீட்டில் யாருக்கும் கோவிட் ஏற்படவில்லை என்று காண்பிக்கப்படுகிறது. கோவிட் என்ற ஒன்றே இல்லை என்று தவறான பிரசாம் செய்யப்பட்டு வரும் நிலையில் கோவிட் ஏற்பட்ட நபருடன் நெருங்கிப் பழகினாலும் அது தொற்றாது, வயதானவர்களுக்கும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் அது பரவாது என்பதைப் போன்ற தவறான கண்ணோட்டத்தை இது ஏற்படுத்தும்.
இதுபோன்ற தவறான, மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைத் திரைப்படங்களில் காண்பிப்பது மக்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஏனென்றால், திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கான விஷயம் மட்டுமல்ல. சமுதாயத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பதை இயக்குநர்கள் மனதில் ஏற்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.