Published:Updated:

சரும நோய்களை எதிர்க்கும் வெட்பாலை... நல்வாழ்வுக்கான நலமாலை|மூலிகை ரகசியம் - 17

மூலிகை ரகசியம்

நரை முடியை மறைக்க செயற்கை சாயங்களே இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பக்கவிளைவுகளை உண்டாக்கும் செயற்கை சாயங்களுக்கு மாற்றாக, வெட்பாலை இலைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கையான சத்தைப் பயன்படுத்தலாம்.

சரும நோய்களை எதிர்க்கும் வெட்பாலை... நல்வாழ்வுக்கான நலமாலை|மூலிகை ரகசியம் - 17

நரை முடியை மறைக்க செயற்கை சாயங்களே இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பக்கவிளைவுகளை உண்டாக்கும் செயற்கை சாயங்களுக்கு மாற்றாக, வெட்பாலை இலைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கையான சத்தைப் பயன்படுத்தலாம்.

Published:Updated:
மூலிகை ரகசியம்

பயணங்களின்போது, ஜன்னல் ஓரம் அமர்ந்து, இயற்கையை ரசித்து வருகிறோம். சாலையோரங்களில் பல மரங்கள், செடி, கொடி தாவரங்களைப் பார்க்கிறோம். இவற்றில், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெண்ணிறப் பட்டைகளுடன் வளர்ந்துள்ள வெட்பாலை மரங்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

சரும நோய்களை விரட்டி அடிக்கும் வெட்பாலையை ஒரு மூலிகை ஹெர்குலஸ் என்று கம்பீரமாக அழைக்கலாம்! பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்`பாலை’ என்ற பெயர் உருவானது.

வெட்பாலை செடி
வெட்பாலை செடி

வெட்பாலையின் இலைகளை கைகளில் வைத்து கசக்கிவிட்டு, சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். பசுமையான இலைகளில் கருநீல நிறம் படியும் நிற மாற்றத்தைப் பார்க்கலாம். செதில் செதிலாகத் தோல் உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாசிஸ்) எனும் சரும நோய்க்கு முதன்மையான மருந்து வெட்பாலை!

நரை முடியை மறைக்க, பக்கவிளைவுகளை உண்டாக்கும் செயற்கை சாயங்களுக்கு மாற்றாக, வெட்பாலை இலைகளில் இருந்து எடுக்கப்படும் இயற்கையான சத்தைப் பயன்படுத்தலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெட்பாலை பொம்மைகள்

வெட்பாலை மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும் மரபொம்மைகள் மிகவும் புகழ்பெற்றவை. நெகிழி பொம்மை களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு. அதற்கு மாற்றாக மருத்துவ குணமிக்க வெட்பாலை பொம்மைகளை மீண்டும் பிரபலப் படுத்துவோமா!

சிறு குழந்தைகளிடம் இயற்கை பொம்மைகளைக் கொடுப்பதன் பலன் என்ன தெரியுமா? ! குழந்தைகள் பொம்மைகளை வாயில் வைத்துக் கடித்தாலும், எந்த விதமான தீங்கும் ஏற்படாது. சொல்லப்போனால் அந்த மூலிகையின் மருத்துவ குணங்கள் அந்தப் பொம்மையின் மூலம் குழந்தைக்குக் கிடைக்கும். `வசம்பு வளையலை’ குழந்தைகளுக்கு அணிவிக்கும் வழக்கத்தை கவனித்து இருக்கிறீர்களா?

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

பால் மரம் வெட்பாலை…

பாலுள்ள மூலிகைகள் நிறையவே நம்மோடு இருக்கின்றன. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வெட்பாலை. இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளியாகும் பாலை, காயங்களுக்குத் தடவ, விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமன்றி சரும வறட்சிக்கும் இதன் பால் சிறந்த மருத்தாகப் பயன்படுகிறது. இதன் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, புண்களைக் கழுவும் நீராகவும் உபயோகிக்கலாம்.

ஆரம்பநிலை பல் வலியைப் போக்க இதன் இலையை கிராமத்து மக்கள் அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். `நான் அப்படியே சாப்பிடுவேன்…’ எனச் சில பன்னாட்டு சத்து பானங்களுக்கு விளம்பரங்கள் இருப்பதைப் போல, நம் மூலிகைகளுக்கு விளம்பரங்கள் இருப்பதில்லை! நீங்கள்தான் இயற்கையான மூலிகைகள் குறித்த பெருமைகளைப் பலருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். கிராம்புடன் வெட்பாலை இலைகளையும் சேர்த்து மென்று சாப்பிட்டாலும் பல்வலி, பல்கூச்சம் மறையும்.

சுரத்தைக் குறைக்கும் மருந்துக் கலவைகளில் வெட்பாலை மரப்பட்டை நிச்சயம் இடம்பெறும். வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டையோடு சீரகம் சேர்த்து குடிநீரிட்டு கொடுக்கலாம். இதன் பட்டைக்கு புழுக்களைக் கொல்லும் சக்தியும், பாம்புக்கடியின் நஞ்சை முறிக்கும் செய்கையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இலைகளை உலர வைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம்.

வெட்பாலை எண்ணெய்:

வெட்பாலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பல்வேறு சரும நோய்களுக்கு முக்கியமான மருந்து! மகத்துவம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யின் செய்முறையைப் பார்ப்போமா! அடுப்புக்குச் செல்லாமலே தயாராகும் ஸ்பெஷல் எண்ணெய் இது!

வெட்பாலை இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் தேவையான அளவுக்கு வெட்பாலை இலைகளைப் போட்டு, ஏழு நாள்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைத்து, அவ்வப்போது லேசாக கலக்கி விடுங்கள். ஏழாம் நாள் அந்த எண்ணெய்க் கலவை, கருநீல நிறத்துடன் மருத்துவ குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெயாக உருவெடுத்திருக்கும். நிறமில்லாமல் இருந்த எண்ணெய், எந்த வேதியல் கலவையின் உதவியுமின்றி கருநீல நிறத்துடன் மாறிய அதிசயத்தை நீங்கள் பார்க்கலாம்.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

மிகவும் எளிய முறையில் தயாரிக்கப்படும் இந்த வெட்பாலை எண்ணெயை, காளாஞ்சகப்படை நோயாளர்கள் வெளிமருந்தாகவும், மருத்துவர் ஆலோசனைப்படி உள்மருந்தாகவும் பயன்படுத்த நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதுமட்டுமன்றி தேமல், சொறி, படை போன்ற சரும நோய்களுக்கும் இந்த எண்ணெய்யைத் தடவுவதால் விரைவில் குணம் கிடைக்கும். சில நேரங்களில் அதிகமாக அவதிப்படுத்தும் பொடுகுத் தொல்லைக்கும் வெட்பாலை எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். சரும நோய் போக்கத் தயாரிக்கப்படும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துகள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். வெட்பாலை எண்ணெய், நமது தேகத்தின் பாதுகாவலன்!

சரும நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குற்றவாளி களாகப் பார்க்கும் நிலைமை சமுதாயத்தில் இன்றும் நிலவுகிறது. `சரும நோய் என்பது மிகப்பெரிய பிரச்னை அல்ல… எளிதாக குணப்படுத்துவதற்கு சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் உண்டு…’ எனும் உண்மையை எடுத்துக்கூறி சமுதாயத்தின் பார்வையை மாற்றுங்கள்!

விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, வெட்பாலை அரிசி அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது. `கால்சியம் சேனல் ப்ளாக்கராக’ செயல்பட்டு, ரத்தக் குழாயை விரிவடையச் செய்து உயர்ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இண்டிரூபின் (Indirubin) எனும் வேதிப்பொருளுக்கு பூஞ்சைத் தொற்றுகளை அழிக்கும் செயல்பாடு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலைகளிலிருக்கும் `ரைடியாடையோன்’ (Wrightiadione) எனும் பொருள், புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.

வெட்பாலை அரிசி:

நெல்லரிசியை கேள்விப்பட்டிருப்பீர்கள்… வெட்பாலையிலிருந்து கிடைக்கும் அரிசியைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். வெட்பாலையின் காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர். இனிப்புச்சுவை கொண்ட `வெட்பாலை அரிசிக்கு’ செரிமான தொந்தரவுகளைப் போக்கும் திறனும், வயிற்றுப் போக்கிகை நிறுத்தும் மகிமையும் இருக்கிறது.

இலக்கியங்களில்

`முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து… பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என்று சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் பாலைத் திணைக்கு உரித்தான மரம் வெட்பாலை. பாலைத் திணைக்குரிய ஒழுக்கங்களை வெளிப்படுத்தும் சங்க இலக்கிய பாடல்களில், வெட்பாலை பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. `தில்லை பாலை கல்லிவர் முல்லை’ என்று குறிஞ்சிப் பாட்டில் வெட்பாலைப் பூக்களைப் பற்றி கபிலர் குறிப்பிடுகிறார்.

மூலிகை ரகசியம்
மூலிகை ரகசியம்

தாவரவியல் பெயர்:

Wrightia tinctoria

குடும்பம்:

Apocynaceae

கண்டறிதல்:

மர வகையைச் சார்ந்தது. மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். சைம் வகை மஞ்சரி. இதன் காய்கள் தலைகீழாகத் திருப்பிய ஆங்கில `V’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். `குறடு’ போல இருக்கும் இதன் காய்கள் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது.

தாவரவேதிப் பொருள்கள்:

Flavonoids, Tannins, Phenols, Stigmasterol, Lupeol, Wrightial.

வெட்பாலை… நல்வாழ்விற்கான நலமாலை..!