Published:Updated:

தமிழர் வாழ்வியலில் செல்வமாகத் திகழ்ந்த சங்கின் ஆன்மிக சிறப்புகள்... மருத்துவப் பயன்கள்!

சங்கு
சங்கு

மங்கலச் சடங்குகளின்போதும் அமங்கலச் சடங்குகளின்போதும், சங்கின் பயன்பாடு தவிர்க்க இயலாதது.

ங்கு, தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. 'மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' என்று பக்திபாவத்தோடு ஆண்டாளும், 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று பாவேந்தரும் பாடுவது அதன் அன்றாடப் பயன்பாட்டில் இருந்த முக்கியத்துவத்தின் காரணமாகத்தான்.

பல சொற்கள் பொருள்மாறிப் பயன்படுத்தப்படுவதைப் போலவே, சங்கு ஊதுதல் என்பதும் எதிர்மறைப் பொருளில் சிலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை அர்த்தமற்றவை என்பது சங்கின் ஆன்மிக மருத்துவப் பயன்பாடுகள் குறித்து அறிந்துகொண்டால் தெளிவாகிவிடும்.

சங்கும் பாரம்பரியமும்:

சங்கின் படம்
சங்கின் படம்
ஒருவர் ஆன்மிக மார்க்கத்தில் உயர்வு பெற கட்டுப்பாடுகள் ஏன்?
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்று சங்கு என்பது ஐதிகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது.
புராணங்கள்

கடலிலிருந்து கிடைக்கும் சங்குப்பூச்சியின் உடற்கூட்டினையே சங்காகப் பயன்படுத்திவருகிறோம். சங்கில் மணி, துவரி, பாருதம், பூமா, துயிலாசங்கு, வெண்சங்கு, வைபவ சங்கு, திரிசங்கு எனச் சங்கில் பல வகைகள் உண்டு. சங்க காலத்தில் நம் முன்னோர்கள், தங்களின் செல்வங்களை இரண்டாக வகைப்படுத்தினர். அதில் ஒன்று, 'பத்ம நிதி' மற்றொன்று 'சங்க நிதி (வலம்புரிச் சங்கே அதன் அடையாளம்)'. இந்த இரண்டையும் கொண்டோரை 'இருநிதிக்கிழவன்' என்றழைத்தனர். இதன்மூலம் அவர்கள் சங்கைத் தங்களது தலையாய செல்வமாகக் கருதினர் என்பது தெளிவாகிறது. மேலும், கடவுளை பூஜிக்கும் ஒரு பொருளாக சங்கைப் பயன்படுத்திவந்தனர்.

சங்கும் அதன் நாதமும்:

சங்கு
சங்கு

ஒலி எழுப்பும் சங்கு மூலம் கடிகாரம் இல்லாத காலகட்டத்தில் மக்களுக்கு நேரத்தை அறிவிக்க, கோயில்களில் ஊதி ஒலியெழுப்பிவந்தனர். அதேபோன்று, மங்கலச் சடங்குகளின்போதும் அமங்கலச் சடங்குகளின்போதும் சங்கின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. மேலும், சங்கின் ஒலி கெட்டவற்றை நீக்கி நன்மையைக் கூட்டும் என்பதும் நம்பிக்கை.

சங்கின் ஆன்மிகச் சிறப்புகள்:

சங்கின் ஆன்மிகச் சிறப்புகள் மற்றும் பயன்கள் பற்றி திருவாடுதுறை ஆதினத்தைச் சார்ந்த திருமதி.சுஜாதாவிடம் கேட்டோம்.

"நீரிலிருந்து கிடைக்கும் பொருள்கள் எல்லாம் புனிதமானவை என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. பாற்கடலை, அமிர்தத்திற்காக தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்று சங்கு என்பது ஐதிகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை 'இடம்புரிச் சங்கு'. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும். இரண்டாம் வகை, 'வலம்புரி'. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மைபெறுகிறது. மூன்றாவது 'சலஞ்சலம்'. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் கிடைக்கும். இது, அபூர்வ வகை. நான்காவது 'பாஞ்சஜன்யம்'. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும். கிருஷ்ணபகவானின் கையில் இருக்கும் சங்கு இதுதான்.

சங்கு
சங்கு

கோயில்களில், கார்த்திகை சோமவாரத்தின்போது நடைபெறும் சங்காபிஷேகங்கள் சிறப்பு வாய்ந்தவை. சங்கு, லட்சுமிதேவிக்கு இணையாகக் கருதப்படுவதால் ஆடிப்பூரம், சித்ராபௌர்ணமி, புரட்டாசி பௌர்ணமி மற்றும் அஷ்டமி திங்கள் ஆகிய தினங்களில் பூஜை அறையில் சங்கை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், சங்குகளை வீட்டு வாசலில் தோரணமாகக் கட்டினால், கண்திருஷ்டி படாது என்பது ஐதிகம்" என்று கூறினார்.

சங்கின் மருத்துவ குணங்கள்:

சங்கின் மருத்துவப் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம்.

"சங்கு, மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள். சங்கிலிருந்து தயாரிக்கப்படும் 'சங்கு பஸ்பம்' குழந்தைகளுக்கு நுண்ணுயிரிகளால் தொண்டையில் ஏற்படும் டான்சில்ஸ் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

மருத்துவர் சிவராமன்
மருத்துவர் சிவராமன்

இதில் கால்சியம் அதிக அளவு உள்ளதால், இன்று தயாரிக்கப்படும் கால்சியம் மாத்திரைகள் பெரும்பாலும் முத்துச்சிப்பி மற்றும் சங்கிலிருந்து பெறப்படுபவையே. மேலும், எல்லாவற்றிலும் இருப்பதுபோல் சில இடங்களில் போலிச் சங்குகளையும் விற்பனை செய்கின்றனர். இதைத் தவிர்க்க, வளம் நிறைந்த இடங்களில் நேரடியாகச் சென்று வாங்குவதே சிறந்தது. சங்கு சம்பந்தப்பட்ட மருந்துப் பொருள்களை நேரடியாக ஆன்லைனில் வாங்குவதைத் தவிர்த்து, அருகிலிருக்கும் மருத்துவரின் ஆலோசனையின்படி வாங்குவதே சாலச் சிறந்தது" என்றார் மருத்துவர் சிவராமன்.

அடுத்த கட்டுரைக்கு