Published:Updated:

மனஅழுத்தம் முதல் செரிமானப் பிரச்னை வரை...தேனின் அன்லிமிட்டட் ஆரோக்கிய பலன்கள்!

Honey ( pixabay )

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் உண்டாகும் புண்கள் நன்றாக ஆறவும், அங்கே புதிய திசுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தியாகவும் தேன் தேவையான அளவு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மனஅழுத்தம் முதல் செரிமானப் பிரச்னை வரை...தேனின் அன்லிமிட்டட் ஆரோக்கிய பலன்கள்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் உண்டாகும் புண்கள் நன்றாக ஆறவும், அங்கே புதிய திசுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தியாகவும் தேன் தேவையான அளவு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

Published:Updated:
Honey ( pixabay )

``நம் மண்ணின் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றின் மகிமையை நாம் உணர்வதில்லை. தேன், அப்படியான ஓர் உணவு'' என்று வலியுறுத்திச் சொல்லும் சித்த மருத்துவர் ஜி.ராஜா சங்கர், தேனின் ஆரோக்கியப் பலன்களை அடுக்க அடுக்க, நம் ஆச்சர்யம் விரிந்துகொண்டே போனது.

``தேன்... உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம். இதைச் சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் முழுமையாக செரிமானமாகிவிடுவதால் உடலில் சேர்ந்து பலத்தைக் கொடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. தேனில் மலைத் தேன், கொம்புத் தேன், மரப்பொந்து தேன், புற்றுத் தேன் மற்றும் மனைத் தேன் என ஐந்து வகை உள்ளன. மலமிளக்கி, கோழையகற்றி, பசித்தீ தூண்டி, அழுகல் அகற்றி மற்றும் உறக்கம் உண்டாக்கியாகச் செயல்படக்கூடியது தேன். சித்த மருத்துவத்தில் தேன் ஒரு மிகச் சிறந்த துணை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. `வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற முக்குற்றங்களையும் தன் நிலையில் வைக்கும் ஒரு அருபெரும் மருந்து தேன்' என `தேரன் பொருள்' பண்பு நூல் கூறுகிறது.

Honey
Honey
pixabay

இதயத்தின் நண்பன்!

தேன் இயற்கையாகவே வெப்பம் நிறைந்தது. அதனால்தான் கப நோய்களுக்கு மருந்து கொடுக்கும்போது அவற்றைத் தேனுடன் கலந்து கொடுக்கின்றனர். இதில் இயற்கையாகவே இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சில வகைப் புற்றுநோய்களுக்கான தற்காப்பு மருந்தாகிறது. தேன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதயத்துக்குச் செல்லவேண்டிய ரத்தத்தின் அளவை அதிகரித்து ரத்தம் உறைதலைத் தடுக்கும். குறிப்பாக, தேனில் உள்ள பாலிபீனால் இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் கரோனரி ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து ரத்தம் உறைதலைத் தடுத்து மாரடைப்பு வராமல் காக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Honey
Honey
pixabay

குழந்தைகளின் இருமலுக்கு அருமருந்து!

குழந்தைகளுக்கு இரவில் தூக்கத்தைக் கெடுக்கும்விதமாக வரக்கூடிய இருமலைப்போக்க தேன் நல்ல மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றில் கூறியுள்ளது. கால் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொடுத்தால், அது இரவில் வரக்கூடிய இருமலைக் கட்டுப்படுத்தும். போனஸாக ஆழ்ந்த தூக்கமும் தரக்கூடியது தேன்; ஆன்டிபயாடிக்ஸ் தரும் பக்க விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறலாம். உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களில் 9 வகையான அமினோ அமிலங்களும் தேனில் உள்ளன. வைட்டமின் சி சத்து இதில் அதிகம் உள்ளது. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் ஆகிய தாதுகள் தேனில் நிறைந்துள்ளன. கழிச்சல் நோய்க்குத் தேன் நல்ல மருந்தாகச் செயல்படும். புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத மருந்தாகத் தேன் செயல்படும்.

Honey
Honey
pixabay

மன அழுத்தம் முதல் செரிமானப் பிரச்னை வரை!

தேனில் உள்ள மிக முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸான பாலி பீனால்கள், மனஅழுத்தம், மனச் சோர்வு, மன பதற்றம் மற்றும் மன உளைச்சலை நீக்கி மனதுக்கு அமைதியைத் தரும். வலிப்பு நோய்க்கும் தேன் மிக நல்லது. வாய்நாற்றத்தைப் போக்குவதுடன் செரிமான மண்டல உறுப்புகளின் சரியான செயல்பாட்டுக்குத் தேன் கை கண்ட மருந்து. குழந்தைகளைப் பாதிக்கும் வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் தேனுக்கு நிகர் தேன் மட்டுமே என்று ஆய்வுகள் கூறுகின்றன. வயிறு வீக்கம் ஏற்பட்டால் அதன்மீது தேன் தேய்த்தால் வலி குறைந்து வீக்கம் கரையும். தலைவலி வந்தால் நெற்றிப்பொட்டிலும், வயிற்று வலியால் பாதிக்கப்படுவோருக்கு தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவுவது வழக்கம். பூஞ்சைகள் மற்றும் நுண் கிருமிகளின் பெருக்கத்தை வெகுவாகக் குறைக்கக்கூடியது தேன். இதிலுள்ள தாமிரச்சத்து, வைட்டமின் சி சத்து மற்றும் பாலிபீனால்கள், வைரஸ் நோய்களை விரட்டி அடிக்கக்கூடியவை.

Honey
Honey
pixabay

சர்க்கரை நோயாளிகளுக்கும் தேன்!

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவில் உண்டாகும் ஏற்ற இறக்கங்களைத் தேன் சீர்செய்யும் என ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. தேனில் உள்ள ஃப்ரக்டோஸ் வகை சர்க்கரை இன்சுலின் செயல்பாட்டைச் சீராக்கும். அது மட்டுமன்றி ஒரு முழு உணவு உண்டதும் துரிதமாக நடக்கும் செரிமானச் செயலையும், உணவின் சத்து உடலால் உறிஞ்சப்படும் செயலையும் தாமதித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரெனக் கூடுவதைத் தடுத்து நிறுத்தும். தேனிலுள்ள அமிலம் தொற்றுநோய்க் கிருமிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இயற்கையாகவே புண்களை ஆற்றும் தன்மை பெற்றது. குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் உண்டாகும் புண்கள் நன்றாக ஆறவும், அங்கே புதிய திசுக்கள் ஆரோக்கியமாக உற்பத்தியாகவும் தேன் தேவையான அளவு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Honey
Honey
pixabay

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும், ரத்த நாடிகளின் விரிந்து கொடுக்கும் தன்மையைப் பாதுகாக்கவும் தேவையான நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியைத் தேன் தூண்டும். சாதாரண மூட்டு வலியில் தொடங்கி மூட்டுத் தேய்மானம் தொட்டு, வாழ்வியல் நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் மற்றும் புற்று நோய்களில் அதிகமாகக் காணப்படும் சி-ரியாக்டிவ் புரோட்டின் (c- reactive protein) அளவைத் தேன் குறைக்கும்.

தீப்புண், வெந்நீர்ப் புண்களில் கொப்பளம் ஏற்படாமல் இருக்கவும், புண்கள் விரைவில் ஆறவும் தேனைப் பயன்படுத்துகிறார்கள். உடலில் கட்டிகள் இருந்தால் அவற்றைப் பழுக்க வைப்பதற்காகத் தேனுடன் சுண்ணாம்பு சேர்த்துக் குழைத்து கட்டிகள் மீது பூசலாம்.

இந்த மருத்துவ குணங்கள் அனைத்தும் நல்ல தேனுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது'' என்று அடிக்கோடிட்டுச் சொன்ன மருத்துவர் ராஜா சங்கர், நல்ல தேனைத் தரம்பார்த்து வாங்குவது குறித்தும் வழிகாட்டினார்.

Honey
Honey
pixabay

எது நல்ல தேன்?

* ''சர்க்கரையைப் பாகு காய்ச்சி தேன் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இதுபோக தேனின் இனிப்புச்சுவைக்காக சில விலை குறைந்த சுவையூட்டிகளையும் சேர்க்கிறார்கள். சோளம் மற்றும் கரும்பிலிருந்து கிடைக்கும் சில என்சைம்கள் மற்றும் செயற்கை சர்க்கரையும் தேனில் சேர்க்கப்படுகின்றன. இதுபோன்ற கலப்படத் தேனில், மேலே சொன்ன எந்த மருத்துவப்பயனும் இருக்காது.

* தேன் நல்ல தேனா, கலப்படம் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய, தேனை நம் பெரு விரலில் தேய்த்துப் பார்க்கும்போது அது கீழே ஒழுகாமல் பெருவிரல் முழுவதும் படர்ந்து விட்டால், அது கலப்படம் செய்யப்படாத தேன் என்று பொருள்.

* ஒரு டம்ளர் நிறைய தண்ணீரில், ஒரு சொட்டுத் தேனை விட்டால், நல்ல தேன் அதன் திடத்தன்மை காரணமாகத் தண்ணீரின் அடியில் படியும். கலப்படத் தேன் தண்ணீருடன் முழுமையாகக் கலந்துவிடும்'' என்றார் ராஜா சங்கர்.

Elder
Elder
pixabay

தேனின் மருத்துவ குணங்களை சித்த மருத்துவம் கொண்டாடும் சூழலில், அலோபதி என்ன சொல்கிறது என்பதை அறிய, சர்க்கரை நோய் மருத்துவர் கருணாநிதியிடம் பேசினோம்.

``இவர்களுக்கெல்லாம் தேன் வேண்டாம் ப்ளீஸ்!"

``அதிக கலோரி நிறைந்த தேனில் கொழுப்புச்சத்து இல்லை; கார்போஹைட்ரேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. சப்பாத்தி, பன் போன்றவற்றுக்கு ஜாமுக்குப் பதிலாகத் தேன் தொட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பெரியவர்கள் டீ, லெமன் டீயில் இனிப்புக்குப் பதில் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் இயற்கையான இனிப்பு எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனாலும், அதை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.

முதியோர் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேனைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து தேன் சாப்பிட்டால் நோயின் பாதிப்பு அதிகரிக்கலாம். அதில் குளூக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம்.

தேனில் அதிகமாக உள்ள ஃப்ரக்டோஸ், குடலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது இது இரைப்பை மற்றும் குடல் பகுதியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வீக்கம், வாய்வுக்கோளாறு, பிடிப்பு போன்ற இரைப்பை சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலியையும் வரவழைக்கலாம்.

அதேபோல, ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு நிச்சயமாகத் தேன் கொடுக்கக் கூடாது. குறிப்பாகப் பதப்படுத்தாத தேனைக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. பதப்படுத்தாத தேனில் தேனீக்களின் கொடுக்குகள், சிறு பூச்சிகள், பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வீக்கம், அரிப்பு, தடிப்பு, இருமல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறுகள் போன்ற அலர்ஜி நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

தேன் எங்கிருந்து பெறப்பட்டது, அது சுத்தமானதா, பதப்படுத்தப்பட்டதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம்'' என்றார் டாக்டர் கருணாநிதி.