Published:Updated:

"இதயச்செயலிழப்பு, வென்டிலேட்டர்னு வதந்திகளைப் பரப்பினாங்க. ஆனா?!"- கொரோனாவிலிருந்து மீண்ட மருத்துவர்

corona
corona

"எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் என் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் அவர்கள் பதற்றத்துடன் இருந்தனர்."

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டு வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் பெருமளவில் தொற்றுக்குள்ளாவதைக் கேள்விப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக சிலரை இழந்துமிருக்கிறோம்.

தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோயியல் சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான சிகிச்சைப் பணிகளில் இருந்த தொற்றுநோய் மருத்துவர் அப்துல் கஃபூரையும் தொற்று விட்டுவைக்கவில்லை. அவர் அதை எதிர்த்துப் போராடி மீண்ட அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"மூன்று வாரங்களுக்கு முன்னால், எனக்குக் காய்ச்சல் வந்தது. அதைத் தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாள்கள் உடல்வலி இருந்தது. அதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தேன். பின்னர் இந்த அறிகுறிகளைவைத்து இது கொரோனாவாக இருக்கலாமோ என்று சந்தேகித்துப் பரிசோதிக்க மருத்துவமனைக்குச் சென்றேன். சில நாள்கள் காய்ச்சல் இருந்ததால் நான் நிறைய நீர்ச்சத்தை இழந்திருந்தேன். ரத்த அழுத்தம் இருப்பதால் அதற்கான மருந்தையும் நான் சில காலமாக எடுத்து வருகிறேன். நீர்ச்சத்து குறைந்ததால் நான் மயங்கி விழுந்துவிட்டேன்.

Corona
Corona
pixabay.com

பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் என்னை அனுமதித்தனர். எனக்கு மிதமான கோவிட் நிமோனியா தாக்கம் இருந்தது. நான் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது கொரோனாவுக்காக அல்ல. ரத்த அழுத்தம் குறைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரம் இருந்தேன். எனக்கு ஆக்சிஜன் செறிவடையும் தன்மை சீராகவே இருந்தது. அதனால் ஸ்டீராய்டு மருந்துகள் தேவைப்படவில்லை. ரத்த உறைதலைத் தடுக்க எனக்கு சில முன்னெச்சரிக்கை மருந்துகள் வழங்கப்பட்டன. நீர்ச்சத்து குறைந்திருந்ததால் ஐவி ஃப்ளூயிட்ஸ் (IV fluids) வழங்கப்பட்டன. நாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு முன்பே மயங்கி விழுவது என்பது தர்மசங்கடமான ஒன்றுதான். கொரோனாவிலிருந்து மீண்டது சவாலான காரியம்தான்.

`சாப்பாடு மட்டும் போதுமா?’ - முதியவர் மரணத்தால் கொரோனா வார்டில் மூண்ட மோதல்

21 நாள்கள் கழித்து தற்போது முழுவதுமாக தொற்றிலிருந்து மீண்டுள்ளேன்.என் மருத்துவப் பணியை மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது, சமூக வலைதளங்களில், நான் வென்டிலேட்டரில் இருப்பதாகவும், எனக்கு இதயக் கோளாறு ஏற்பட்டு விட்டதாகவும் பல வதந்திகள் வந்த வண்ணமிருந்தன. என் படத்தைப் போட்டு இப்படிப்பட்ட தவறான செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. உண்மை என்னவென்றால் எனக்கு ஆக்சிஜன் செறிவடையும் தன்மை சீராக இருந்ததால்,வெளியிலிருந்து ஆக்சிஜன்கூடத் தேவைப்படவில்லை. மக்கள் எந்த ஒரு செய்தியைப் பகிரும்போதும் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து பகிர வேண்டும். மருத்துவமனையில் என் மருத்துவ நண்பர்கள் என்னை நன்கு கவனித்துக்கொண்டனர்.

Swab Test
Swab Test

எனக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. நான் பல கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தேன். கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது முழுப் பாதுகாப்பு கவசத்துடன்தான் இருப்போம். ஆனால் வெளி நோயாளிகளைப் பார்க்கும்போது முகக்கவசம் மற்றும் கையுறைகள் மட்டுமே அணிவோம். பாதிக்கப்பட்டவர்களில் பலர் அறிகுறி இல்லாமல் இருப்பதால், கொரோனா இருப்பது அவர்களுக்கே தெரியாது. கொரோனா எங்கிருந்து வேண்டுமானாலும் நமக்கு வரலாம். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது எனக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம். நான் முகத்திற்கு ஷீல்டு அணிந்திருந்த போதுகூட எனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆக, எதுவும் 100 சதவிகிதம் நமக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை.

`வீட்ல சொல்லவே இல்ல!' - 22 வயதில் கொரோனாவுக்குப் பலியான 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

எனக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் என் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் அவர்கள் பதற்றத்துடன் இருந்தனர். நான் மருத்துவராக இருந்தாலும்கூட கொரோனா வைரஸ் தொற்றுக்கு என்று பிரத்யேக சிகிச்சை முறை இல்லாததால், அனைவரும் கவலையுடனே இருந்தனர்.

corona death
corona death

பெரும்பாலான தொற்றுள்ள நோயாளிகள், அறிகுறிகள் அற்றே உள்ளனர். மேலும் சிலருக்கு மட்டுமே நிமோனியா வருகிறது. வெகு சிலருக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படுகிறது. அதில் வெகு சிலருக்கே வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. அனைவருக்கும் தீவிர தொற்று ஏற்படாது. நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், வயதானவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை எடுப்பவர்கள் தங்கள் உடல் வெப்பத்தையும், ஆக்சிஜன் செறிவடையும் தன்மையையும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவடையும் தன்மையைக் கண்காணிக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டரை (pulse oxymeter) வாங்கி வைத்துக்கொள்ளலாம். அனைவருக்கும் இது தேவையில்லை. பெரும்பாலும் பலருக்குத் தொற்றின் தாக்கம் மிதமாகவே உள்ளது. ஒரு சிலரே இறக்கின்றனர். பெரும்பாலும் தொற்று மிதமாகவே இருப்பதால் பயப்படத் தேவையில்லை.

Mask
Mask

பொதுமக்கள் அரசாங்கம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் ஆகியன அவசியம். கொரோனா குறித்த தேவையற்ற பயம் வேண்டாம்" என்கிறார் கொரோனாவுடன் போராடி வென்ற மருத்துவர் அப்துல் கஃபூர்.

அடுத்த கட்டுரைக்கு