Published:Updated:

`கொரோனாவை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும்!' - சர்வதேச ஆய்விதழில் வெளியான முதல் ஆய்வு

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

சித்த மருத்துவத்தின் மூலம் கோவிட் சிகிச்சை அளிப்பது குறித்து சர்வதேச ஆய்விதழில் வெளியாகியுள்ள முதல் ஆய்வுக்கட்டுரை என்ற வகையில், இந்த ஆய்வு சிறப்புமிக்கது.

கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களை சித்த மருத்துவத்தின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்று அரசு சித்த மருத்துவர்கள் சித்ரா மற்றும் மல்லிகா 2020-ம் ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது, ஆயுர்வேதம் மற்றும் ஒருங்கிணைந்த மருந்துகளுக்கான ஆய்விதழில் (Journal of Ayurveda and Integrative Medicine) வெளியாகியுள்ளன.

கொரோனா நோய்த்தொற்றுக்குரிய அறிகுறிகளுக்கு ஏற்ப சித்த மருத்துவத்தில் எந்த மருந்துகளைப் பயன்படுத்துவது, அதன்மூலம் நோயாளிகளை குணப்படுத்துவது சாத்தியமா என்ற அடிப்படையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்திய மருத்துவத்துறை இயக்குநரின் ஒப்புதலோடு கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்ஸ்டிடியூஷனல் எதிக்கல் கமிட்டியின் ஒப்புதல் பெற்று, முறைப்படி பதிவு செய்து, இந்த ஆய்வை சித்த மருத்துவர்கள் சித்ரா, மல்லிகா உட்பட நான்கு பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரை மேற்கொண்டனர்.

COVID-19 patient
COVID-19 patient
AP Photo / Jeff Roberson

கோவிட் முதல் அலையின்போது, முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், நடந்த இந்த ஆய்வில், சிறிய அளவிலும் மிதமான அளவிலும் கோவிட் அறிகுறிகளைக் கொண்டிருந்த நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நோயாளிகளின் ஒப்புதலோடு தொடங்கப்பட்ட இந்த ஆய்வின்போது, ஒரு பிரிவில் 100 நோயாளிகளுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவில், மற்றுமொரு 100 பேருக்கு ஆங்கில மருந்துகளோடு சித்த மருந்துகளும் வழங்கப்பட்டன. அதில், ஆங்கில மருந்துகளோடு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொண்ட நோயாளிகள் விரைவாக குணமடைந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆயுர்வேதம் மற்றும் ஒருங்கிணைந்த மருந்துகளுக்கான ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையின்படி, சித்த மருத்துவ சிகிச்சையைத் தொடங்கிய பிறகு, நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறையாமல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆங்கில மருத்துவத்தில், 69 ஆண்கள் மற்றும் 31 பெண்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆங்கில மருந்துகளோடு சித்த மருத்துவதையும் இணைத்து அளிக்கப்பட்ட சிகிச்சையில், 71 ஆண்கள் மற்றும் 29 பெண்கள் பங்கு பெற்றனர். கோவிட் பரவல் தீவிரப் பிரச்னையாக உருவெடுத்து நிற்கும் இந்தக் காலகட்டத்தில், அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சித்த மருத்துவம் எந்தளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை ஆய்வுப்பூர்வமாக உணர்த்துவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்கிறார், இந்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்துள்ள சித்த மருத்துவர்களில் ஒருவரான சித்ரா.

கோவிட் சித்த மருத்துவம்
கோவிட் சித்த மருத்துவம்

அவரிடம் பேசியபோது, ``கோவிட் பரவலின் தொடக்கக் காலகட்டத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டோம். அந்த நேரத்தில் முழுமையான தரவுகளின்றி சித்த மருத்துவத்திலேயே முற்றிலும் சிகிச்சையளிக்க முடியாது. ஆகவே, ஆங்கில மருத்துவத்தோடு சித்த மருத்துவத்தையும் இணைத்து சிகிச்சையளித்தோம். இந்த ஆய்வில் ஆர்.டி.பி.சி.ஆர், சி.டி ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் சிகிச்சை தொடங்குவதற்கு முன்னரும் பின்னரும் செய்யப்பட்டது.

அதன் முடிவுகளின்படி, சித்தா மற்றும் ஆங்கில மருத்துவத்தை இணைத்து வழங்கப்பட்ட கூட்டு சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்களுக்கு, சிகிச்சை தொடங்கி 11 முதல் 14 நாட்களுக்குப் பிறகு ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் சி.டி.ஸ்கேன் மூலம் பரிசோதித்துப் பார்த்தபோது, 78.33 விழுக்காடு கோவிட் நெகடிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்தன. இந்த சிகிச்சையில் குணமடையாத நோயாளிகளை மேற்கொண்டு பரிசோதித்துப் பார்த்ததில், அவர்களுக்கு ஆஸ்தும, சைனஸ் போன்ற இணை நோய்கள் இருந்தது தெரியவந்தது. அந்த இணை நோய்களைக் கண்டறிந்து அதற்கும் சிகிச்சையளித்தபோது, அவர்களுக்கு நுரையீரல் தொற்று வேகமாகக் குறைந்திருந்தது.

கொரோனா ரிசல்ட் வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள்
கொரோனா ரிசல்ட் வாங்கக் காத்திருக்கும் பொதுமக்கள்

அதேநேரம், ஆங்கில மருத்துவம் மட்டும் எடுத்துக்கொண்ட நோயாளிகளிடையே அதே கால இடைவெளியில் மேற்கூறிய பரிசோதனைகளைச் செய்து பார்த்தபோது 33.3 விழுக்காடு பேருக்கு கோவிட் நெகடிவ் என்று முடிவுகள் வந்தன. இதில் கூட்டு சிகிச்சையை (சித்தா மற்றும் ஆங்கில மருத்துவம்) எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனையில் NLR(Neutrophil Lymphocyte Ratio) பெருமளவில் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த கூட்டு சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்களில் ஒருவர்கூட தீவிர நோய்ப் பாதிப்பு நிலைக்கோ அல்லது உயிரிழக்கக்கூடிய நிலைக்கோ செல்லவில்லை. கொரோனாவை குணப்படுத்துவதில் சித்த மருத்துவம் எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் தரவுகளோடு நம்மால் புரிந்துகொள்ளமுடியும்" என்று கூறினார்.

சித்த மருத்துவத்தை மேற்கொள்ளும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் அந்த மருந்துகள் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆகையால், கூட்டு சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்களில் 25 நபர்களுக்கு, சிகிச்சை தொடங்கிய 14 நாட்கள் கழித்து கல்லீரல் மற்றும் சீறுநீரக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனை முடிவுகளும் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இயல்பான நிலையிலேயே செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சித்த மருத்துவத்தின் மூலம் கோவிட் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு இத்தகைய பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / மாதிரி படம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / மாதிரி படம்

கோவிட் முதல் அலை தாக்கிய கடந்த ஆண்டைக் காட்டிலும், இரண்டாவது அலை தாக்கிய இந்த ஆண்டில், சித்த மருத்துவ கோவிட் சிகிச்சை நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மக்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குப் பாதிக்கப்பட்ட உடனேயே ஆங்கில மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டால், நோய்த் தொற்றிலிருந்து விரைவாகக் குணமடைய முடியும் என்று இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.

மேலும் இந்த ஆராய்ச்சியின் மூலம், கோவிட் சிகிச்சையில் கபசுர குடிநீர் மட்டுமே போதுமானதாக இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. கபசுர குடிநீரோடு சேர்த்து, வசந்தகுசுமாகர மாத்திரை, திப்பிலி ரசாயனம், ஆடாதொடை மணப்பாகு ஆகிய சித்த மருந்துகள் நோயாளிகளின் வயது மற்றும் நோயின் தன்மையைப் பொறுத்து வழங்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளிலும் கிடைக்கின்றன. அதேநேரம், இந்த சிகிச்சைகளை முறையாக சித்த மருத்துவம் படித்து பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களிடமே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று சித்த மருத்துவர் சித்ரா வலியுறுத்துகிறார்.

மேலும், முன்னெச்சரிக்கையாக மக்கள் தற்போது கபசுர குடிநீரை எடுத்துக்கொள்வது போல் திப்பிலி ரசாயனம், வசந்தகுசுமாகர மாத்திரை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டபோது, ``கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு 14 நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்குமாறு கூறியுள்ளோம். இதையே முன்னெச்சரிக்கையாக வரும் முன் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனில், கபசுர குடிநீர் மற்றும் வசந்தகுசுமாகர மாத்திரையை ஒரு வாரத்தில் 3 நாட்கள் எடுத்துக்கொண்டு 3 நாட்கள் இடைவெளி விடலாம். அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் எடுத்துக்கொள்ளலாம். இதை கர்ப்பினிப் பெண்கள் உட்பட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எடை மற்றும் வயதைப் பொறுத்து மற்றும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற பாதிப்புகளைப் பொறுத்து, சித்த மருத்துவரின் ஆலோசனைப்படியான அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்று கூறினார்.

corona virus
corona virus
Pixabay

கொரோனா நோய் அறிகுறிகள், ஏ சிம்டமேடிக், மைல்ட், மாடரேட், சிவியர் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அதில், மைல்ட் மற்றும் மாடரேட் அறிகுறிகளைக் கொண்ட நோயாள்கள் மட்டுமே இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். சித்த மருத்துவத்தின் மூலம் கோவிட் சிகிச்சை அளிப்பது குறித்து சர்வதேச ஆய்விதழில் வெளியாகியுள்ள முதல் ஆய்வுக்கட்டுரை என்ற வகையில், இந்த ஆய்வு சிறப்புமிக்கது. மேற்கொண்டு இதுபோன்ற ஆய்வுகளை இன்னும் விரிவாகச் செய்து, சித்த மருத்துவம் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்தளவுக்குப் பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு