லேசான கோவிட் தொற்றுகூட மூளையில் சுருக்கத்தை ஏற்படுத்தி வாசனை உணரும் தன்மை, அறிவாற்றல் தொடர்பான செயல்பாடு உள்ளிட்டவற்றை பாதிக்கலாம் என்ற அதிர்ச்சி ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. கோவிட் தொற்று மூளையின் செயல்பாடுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வில் பங்கேற்றவர்களிடம், லேசான கோவிட் பாதிப்பு ஏற்பட்டு சராசரியாக 4-5 மாதங்களுக்குப் பிறகு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கு முன்பாகவும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன என்றாலும் அவை தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மத்தியில்தான் பெரும்பாலும் நடத்தப்பட்டன. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசனை அறியும் உணர்வோடு தொடர்புடைய மூளை நரம்புகள், நுண்ரத்தக்குழாய்கள், செல்கள் உள்ளிட்டவை காணப்படும் க்ரே மேட்டர் எனப்படும் மூளையின் ஒரு பகுதியின் அடர்த்தி குறைவது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொற்றால் பாதிக்கப்படாதவர்களோடு ஒப்பிடும்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 0.2% முதல் 2% சதவிகிதம் பேருக்கு மூளையில் இந்த மாற்றம் நிகழ்கிறது.
மேலும் சார்ஸ் கோவி 2 -ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவாற்றல் செயல்பாடு அதிகளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடினமான விஷயங்களைக் கையாளும்போது அவர்களின் மனநிலை தொடர்பான திறன்களும் மோசமடைகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு `நேச்சர்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசியுள்ள ஆராய்ச்சியின் தலைவர் க்வெல்நாலே டுவோட், ``எங்கள் ஆய்வில் பங்கேற்றவர்களில் 96% பேர் லேசான கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே க்ரே மேட்டர் பகுதியின் அடர்த்தி குறைவது, மூளையில் திசுக்கள் அதிகளவில் சேதமடைந்திருப்பது உள்ளிட்ட குறைபாடுகள் தென்பட்டன.

இந்த ஆராய்ச்சியின் மூலம், மத்திய நரம்பு மண்டலத்தையும் கோவிட்-19 எப்படித் தாக்குகிறது என்ற தெளிவு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் அனைத்தும் நீண்ட நாள்களுக்கோ, நிரந்தரமாகவோ இருக்குமா அல்லது பழைய நிலைக்கு மூளையின் செயல்பாடு திரும்பிவிடுமா என்பது குறித்தெல்லாம் அறிந்துகொள்வதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று தெரிவித்துள்ளார்.