Published:Updated:

“உணவுக் கட்டுப்பாட்டுக்கு உடன்படாத ஆள் நான்!” ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

மனோ தங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனோ தங்கராஜ்

ஹெல்த் இஸ் வெல்த்

''உடற்பயிற்சி என்பது நம் ஆரோக்கியத்துக்கான முதலீடு; அது ஆஸ்பத்திரி செலவைக் குறைக்கும்” என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சரான மனோ தங்கராஜ். மக்கள் பணிகளில் பிசியாக இயங்கிக்கொண்டே இருந்தாலும் தவறாமல் உடற்பயிற்சி மூலம் ஆரோக்கி யத்தையும் பேணி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜின் வீட்டுக்குச் சென்றோம். மொட்டை மாடியில் டிராக் சூட், பனியன் சகிதமாகச் சிலம்பத்தைச் சுழற்றிக் கொண்டிருந்தார் அமைச்சர். உடற்பயிற்சி முடிந்தவுடன் நம்முடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அவர்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

“கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, தற்காப்பு கலைகள்ன்னு சொல்லக்கூடிய அடிமுறை பிரபலம். அதைக் களரின்னுகூட சொல்வாங்க. வாள், கத்தி, வெட்டுக்கத்தி, கம்பு, குறுந்தடி, நெடுதடின்னு பல கலைகள் உண்டு. நம்மூரில் சிரமம் என்பார்கள். வேறு இடங்களில் சிலம்பம் என்பார்கள். அது படிப்பதற்கே சிரமம் என்பதால, அதைச் சிரமக்கலைன்னு சொன்னாங்க.

சிரமக்கம்பு கலையை ஆசான்களுடன் இருந்து படிச்சேன். சிரமக்கலையை படிக்கிறதவிட விளையாடுவது ரொம்ப சிரமம். நிறைய வர்ம அடிப்படைகள் அதில வரும். பயிற்சி செய்யும்போது நாம தடுக்க தவறிட்டோம்னா வர்ம பாயிண்டு களில் அடிபட வாய்ப்பு அதிகம்.

அதுபோல, காட்டா குஸ்தின்னு ஒரு கலை உண்டு. அது இப்ப உள்ள ரெஸ்லின் (Wrestling) மாதிரியே இருக்கும். குஸ்தி பயில்வான்கள்தான் அதுக்கு ஆசான்களா இருப்பாங்க. பூட்டு பிரிவுன்னு ஆட்களை லாக் பண்ணும் அடிமுறைகள், எறிகள் என்ற பாரம்பர்ய கலைகளும் உண்டு. எறிதல்ங்கிற கலையைத்தான் இப்ப ஜூடோ துறோஸ்ன்னு கொண்டு வந்திருக்காங்க. இப்பிடி எக்கச்சக்கமான உட்பிரிவுகளைக் கொண்டதுதான் நம் மண்ணின் கலை. அடுத்ததா செவுடு, ஒழிவு முறைகள் எனப் பல கலைகள் இருக்கு. வாள் சண்டை எல்லாம் அற்புதமான கலைகள். கம்பு வச்சு பல அடிமுறைகள் இருக்கு. இதெல்லாம் தற்காப்புக் கலைகளாக, போர்ப்பயிற்சி களாகவும் பயன்பட்டிருக்கின்றன” எனக் கூறும் மனோ தங்கராஜ் இந்தக் கலைகளை இளைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கும் வகுப்புகளையும் எடுத்திருக்கிறாராம்.அடுத்து, தினமும் அவர் செய்யும் உடற்பயிற்சி முறைகள் பற்றிக் கேட்டோம்.

“காலையில ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி பண்ணு வேன். கிரவுண்ட் எக்ஸசைஸ், குங்ஃபூ பயிற்சி, யோகா எல்லாம் பண்ணுவேன். இயற்கை விழிப்புணர்வுக்காக மினி மாரத்தான் பல ஓடியிருக்கிறேன். 21 கிலோ மீட்டர் தூரத்தை 2.15 மணி நேரத்தில ஓடிருவேன். முழு மாரத்தானும் ஓடியிருக்கேன்.

என்னைப் பொறுத்தவரை, சின்ன வயசுல இருந்தே உடல் உழைப்பு உள்ள ஆள். சின்ன வயசுல மண் வெட்டுறது, தோட்ட வேலை, வாழை, தென்னை, காய்கறிகள் பராமரிப் பேன். கொஞ்சம் காலத்துக்கு முன்னவர வீட்டுல மாடு, கோழி வளர்த்தேன். விவசாயம் நல்லா தெரியும். அதுபோக, அடிமுறைக் கலைகள் சார்ந்து இருந்ததுனால உடல் உழைப்பு எனக்கு அதிகம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த அளவுல, மூணு விஷயம் முக்கியம். உடல் உழைப்பு, ஓய்வு, உணவு இந்த மூணும் சரியா இருந்ததுனா உடல் ஆரோக்கியமா இருக்கும். இந்த மூணுமே முக்கியமான அம்சம், அதில ஏதாவது ஒண்ணு அடிபட்டுச்சுனா பிரச்னை ஆவும். ஓய்வு, உணவெல்லாம் பொதுவாழ்வுல இருக்கிற வங்களுக்கு பிரச்னைதான். இதையெல்லாம் நிறைப்படுத்த மாற்று வழிகளைக் கண்டுபிடித்து செய்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை, உணவுக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. எல்லா உணவுமே சரிசமமா எடுப்பேன். சிலர், தினசரி எவ்வளவு கலோரி எடுத்துக்கிட்டேன் என்பது போல கணக்குப் பார்த்து சாப்பிடுவாங்க. என்னைப் பொறுத்தவரை, அது தவறானது. அது மனதளவில் சில பாதிப்பை ஏற்படுத்தும். நான் இதில் முற்றிலும் உடன்படாத ஆள். ஆட்டுக்கறி உடம்பில நிறைய கொழுப்பு இருக்கும். ஆனா, ஆடு எந்தக் கொழுப்பும் சாப்பிடல. வெறும் புல்லுதான் சாப்பிடும். பூனை, புலி ஆகியவை இறைச்சி சாப்பிடும். அதன் உடலில் கொழுப்பு குறைவாகவே இருக்கும். இது இறைவனின் படைப்பின் பரம ரகசியம்.

“உணவுக் கட்டுப்பாட்டுக்கு உடன்படாத ஆள் நான்!” ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

எந்த உணவா இருந்தாலும் அதை ஓவரா சாப்பிடக் கூடாது. தேவைக்கு சாப்பிடுவதில தவறு கிடையாது. மனித உடலுக்கு புரோட்டின், கார்போஹைட் ரேட், கொழுப்பு எல்லாமே தேவை. இதைப் பற்றி பல விவாதங்கள் போய்க்கிட்டு இருக்கு, பல கருத்துகள் இருக்கு. நான் நிறைய நான்வெஜ் சாப் பிட்டிருக்கேன். வெஜிடேரியன் ரொம்ப கம்மியாத்தான் சாப் பிட்டு இருக்கிறேன். அதனால இதுதான் சாப்பிடணும். இப்படித்தான் சாப்பிடணும்னு சொல்லுறதில எனக்கு உடன்பாடு இல்லை.

அதுக்காக நான் ரொம்ப உணவுப் பிரியர் எல்லாம் இல்ல. இதுதான் சாப்பிடுவேன், இவ்வளவுதான் சாப்பிடுவேன்னு அளவு வச்சு சாப்பிடுற வழக்கம் சின்ன வயசுல இருந்தே இல்ல. பசிச்சா தேவையான அளவு சாப்பிடுவேன். சப்பாத்தி, புரோட்டான்னு எது கிடைச் சாலும் சாப்பிடுவேன். கன்னியா குமரி மாவட்டத்தோட உணவான கிழங்கு, மீன், சோறு இதை விரும்பி சாப்பிடுவேன். காய்கறிகளைப் போட்டு சமைக்கும் சாம்பார், ரசம் ஆகியவையும் எடுத்துக் கொள்வேன். சாப்பாட்டுல கீரை வகைகளையும், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவற்றையும் அதிகமா பயன்படுத்துவேன்.

இரவு உணவு லேட் ஆகிறதும், தூக்கமும் அரசியலில இருப்பவங் களுக்கு பெரிய சவாலா இருக்கு. தூக்கம் இல்லைன்னு பலர் சொல் வாங்க. ஆனா, எங்களுக்கு தூங்க நேரம் இல்ல. சாப்பாடு லேட் ஆச்சுன்னா சாப்பிடுவதற்காகப் பழங்களும், நிலக்கடலை, பொரி கடலையும் கார்ல எப்பவும் வச்சிருப்பேன்.

நான் தேனீர் அதிகம் குடிக்கிற பழக்கம் உள்ளவன். பசும்பால் குடிச்சுட்டு வெளிய போய் பாக்கெட்பால் குடிக்கிறது கடினமா இருக்கு. பால்ல நிறைய கலப்படங்கள் இருக்கிறதுனால கன்னியாகுமரியில ‘கட்டன் சாயா’ன்னு சொல்லக்கூடிய தேயிலைய கொதிக்க வச்சு தண்ணீயை அடிக்கடி குடிப்பேன். கட்டஞ்சாயாவில இஞ்சி, புதினா போன்றவற்றைப் போட்டு குடித்தால், அமர்க்களமாக இருக்கும்’’ எனக் கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ் மருத்துவமனை பக்கமே ஒதுங்கியது இல்லையாம்.

“இறைவன் அருளால எனக்கு இதுவரை மருத்துவ உதவிகள் தேவைப்படல. நல்ல வொர்க் அவுட் பண்ணி டயடா இருந்தா, விட்டமின் சப்ளிமென்ட்ஸ் எடுப்பேன். வேற பெரிய மருந்துகள் எடுத்தது இல்லை. சில நேரங்களில நாம பணி அதிகமா செய்யும்போது தூக்கம் குறைந்தால், வாதக்கூறுகள் உடம்பில அதிகரிக்கும். அப்பிடிப்பட்ட சமயங்களில அதைச் சமன் செய்றதுக்கு குறுகியகால மருந்துகளான நெய், லேகியங்கள் மருத்துவர் ஆலோசனைப் படி தற்காலிகமா எடுத்துக்குவேன். தேவை ஏற்பட்டால் திரிபலா சூரணம் போன்றவை எடுத்துப்பேன். சமயம் கிடைக்கும்போது வீட்டிலேயே எண்ணெய்க் குளியல் போடுவேன். வைத்தியர்கிட்ட இருக்கிற காயத்திருமேனி எண்ணெய், வசவு எண்ணெய், வாதக்கோடாரி எண்ணெய் போன்றவற்றை உடலில் போட்டு கொஞ்சம் நேரம் இருந்துட்டு குளிப்பேன்” என்று பேசி முடித்தவர், அன்றைய தின அலுவல்களைக் கவனிக்க சுறுசுறுப்பாகக் கிளம்பினார்.