Published:Updated:

கால் இடறுவது முதல் முகத்தில் தாக்குதல் வரை... செல்ஃபோன் காயங்கள் உஷார்!

செல்ஃபோன் காயங்கள்
செல்ஃபோன் காயங்கள்

`` செல்ஃபோன் பார்த்துக்கொண்டே, மெசேஜ் செய்துகொண்டே நாற்காலி இல்லாத இடத்தில் போய் அமர்வது, ஃபோனில் பேசியபடி சாலையைக் கடப்பது அன்றாடக் காட்சிகளாகிவிட்டன"

கடந்த சில வருடங்களாக, குறிப்பிட்ட ஒரு காரணத்தால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்கின்றனர் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள். அவர்கள் சொல்லும் `அந்த' காரணம், நம் எல்லோரின் அன்றாட வாழ்விலும் இரண்டறக் கலந்திருக்கும் செல்போன் என்றால், நம்ப முடிகிறதா. இதை ஆதாரபூர்வமாகச் சொன்னவர்கள், அமெரிக்காவின் ரட்கெர்ஸ் நியூ ஜெர்ஸி மெடிக்கல் ஸ்கூல் (Rutgers New Jersey Medical School) என்ற பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்.

செல்ஃபோன்
செல்ஃபோன்

தங்களது ஆய்வு குறித்து ஆய்வாளரும் பிளாஸ்டிக் சர்ஜரித்துறை மருத்துவருமான போரிஸ் பாஷ்கோவர் கூறும்போது, ``மொபைல் உபயோகிக்கும்போது பலரும் சுற்றியிருக்கும் சூழலையே மறந்துவிடுகின்றனர். கவனம் முழுவதையும் மொபைல் ஸ்கிரீனிலேயே குவிப்பதால் கைகள் தவறி, கால்கள் இடறி விபத்துக்குள்ளாகி அடிபட்டு விடுகின்றனர். மெசேஜ் செய்துகொண்டே நாற்காலி இல்லாத இடத்தில் போய் அமர்வது, போனில் பேசியபடி சாலையைக் கடப்பது என இவையெல்லாம் இப்போது அன்றாடக் காட்சிகளாகிவிட்டன; அதனால் ஏற்படும் காயங்களும் வாடிக்கையாகிவிட்டன' என்று தெரிவித்திருக்கிறார்.

`குழந்தையின் உயிரைப் பறித்த செல்போன் அழைப்பு!' -உணவு ஊட்டியபோது நேர்ந்த துயரம்

இவர்களின் ஆய்வுக்காக அமெரிக்காவிலுள்ள 100 மருத்துவமனைகளில் அவசரக் கால பிரிவின் நோயாளிகள் பட்டியல், அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டதன் பின்னணி போன்ற தரவுகளெல்லாம் பெறப்பட்டிருக்கின்றன. 1988 முதல் 2017 வரையிலான காலகட்டத்துக்கு உட்பட்ட நோயாளிகளின் தரவுகளில், 2,500-க்கும் மேற்பட்டவை மொபைல் போனால் ஏற்பட்ட விபத்துகள் என்பது ஆய்வின் முடிவில் அறியப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் தவப்பழனியிடம் இந்த ஆய்வு குறித்தும் இங்குள்ள நிலை குறித்தும் கேட்டோம்.

அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் தவப்பழனி
அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் தவப்பழனி

"சமீபத்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். ஷாப்பிங் மால் ஒன்றில், மொபைல் பார்த்துக்கொண்டே நடந்துசென்று அங்கிருந்த கண்ணாடியில் மோதி கண்களில் காயம்பட்ட ஒருவருக்கு நான் சிகிச்சை அளித்தேன். இதேபோல, அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் பெண் ஒருவர், தன் ஒரு கையில் குழந்தையின் விரல்களையும் மற்றொரு கையில் மொபைலையும் வைத்தபடி படியிறங்கியிருக்கிறார். அவர் கண்கள் படிக்கட்டையும் கவனிக்கவில்லை, குழந்தையையும் கவனிக்கவில்லை. முழுக்க முழுக்க மொபைலிலேயே பொதிந்திருக்கிறார்.

கவனமின்மையால் கால் இடறிவிட குழந்தையும் தாயும் இரண்டு மூன்று படிக்கட்டுகளுக்கு அப்படியே உருண்டுள்ளனர். அங்கு இரண்டு, மூன்று படிக்கட்டுகள்தான் மீதமிருந்தன என்பதால், இருவருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை. ஒருவேளை நிறைய படிக்கட்டுகள் இருந்திருந்தால் அவர்களின் நிலை என்னவாகியிருக்கும் என யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இவையெல்லாம் வெகுசில உதாரணங்கள்தான். இப்படி செல்போனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்'' என்றவர், அதுபோன்ற சூழல்களைப் பட்டியலிட்டார்.

செல்ஃபோன்
செல்ஃபோன்

* ''மல்லாந்து படுத்தபடி முகத்துக்கு மேல் மொபைலை வைத்துப் பார்க்கும்போது, கையின் பிடி நழுவி முகத்தின் மீது மொபைல் விழுந்து மூக்கு எலும்புப் பிரச்னை ஏற்பட்டவர்கள் அதிகம்.

* செல்போன் பார்த்துக்கொண்டே நடக்கும்போது கால் இடறிக் கீழே விழுந்து காயம்பட்டுக்கொள்கிறார்கள்.

* குறிப்பிட்ட ஒரு பொசிஷனில் பல மணி நேரம் அசையாமல் இருந்தபடி செல்போன், டேப் பார்ப்பவர்களுக்குச் சதைப்பிடிப்பு ஏற்படுகிறது.

குடும்பம்: மொபைல் அடிமைத்தனம்
பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்!

* தண்ணீர் பிடித்துக்கொண்டே பேசுவது, ஏதேனும் எடையைத் தூக்கிக்கொண்டே பேசுவது, சூடான பொருள்களைக் கைகளில் வைத்தபடி பேசுவது என மொபைலில் பேசிக்கொண்டே ஒரு செயலைச் செய்யும்போது கவனமின்மையால் அந்தப் பொருள் நழுவி கை, கால்களில் விழுந்து பலர் காயம்பட்டுக்கொள்கிறார்கள்.

* மொபைலில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.

`விபத்து ஏற்பட்ட பிறகு அஜாக்கிரதையாக இருக்கவே கூடாது. அது பின்னாள்களில் சிக்கல்களை ஏற்படுத்தும். அடிபட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.'
மருத்துவர் தவப்பழனி

சிக்கல் என்னவெனில், இத்தகைய சூழல்களில், `ரத்தக்காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும்' எனப் பலரும் நினைக்கின்றனர். ரத்தக்கட்டு, சதைப்பிடிப்பு போன்றவற்றுக்கு சுயமருத்துவத்தையே தேடிக்கொள்கின்றனர். சுய மருத்துவம் எல்லா நேரமும் சரியாக இருக்காது என்பதை மக்கள் உணர வேண்டும். குறிப்பாகத் தலை, கண், காது, மூக்கு போன்ற சென்சிட்டிவான பகுதிகளில் அடிபட்டவர்கள், விபத்து ஏற்பட்ட பிறகு அஜாக்கிரதையாக இருக்கவே கூடாது. அது பின்னாள்களில் சிக்கல்களை ஏற்படுத்தும். அடிபட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்" என்ற டாக்டர் தவப்பழனி,

''இன்றைய தேதியில் செல்போன் பயன்பாடென்பது, வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. அதன் வெளிப்பாடுதான், இப்படியான விபத்துகள். முன்பெல்லாம் பேசுவதற்கு மட்டும்தான் மொபைல் உபயோகிப்போம். ஆனால், இப்போதோ போட்டோ, வீடியோ, சாட்டிங், பிரவுஸிங், பணப் பரிவர்த்தனை என அனைத்தும் மொபைலில்தான். என்றாலும், மொபைலைப் பயன்படுத்தும்போது வேறு வேலைகள் செய்யாமல் இருப்பது, வேறு வேலைகளைச் செய்துகொண்டே மொபைலைக் கையாளாமல் இருப்பது எனக் குறைந்தபட்சம் இந்த விஷயங்களையாவது கடைப்பிடிக்க வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.

`ரத்தக்காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும்' என நினைக்கக் கூடாது.
மருத்துவர் தவப்பழனி

பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத் ராகவன் இதுகுறித்துப் பேசும்போது, ''செல்போன் உபயோகத்தைப் பொறுத்தவரையில், ஒரே பொசிஷனில் அமர்ந்து மொபைல் உபயோகிப்பதுதான் பலரும் செய்யும் தவறு. இப்படி ஒரே பொசிஷனில் அமர்ந்திருப்பதால் கழுத்தில் சுளுக்கு, இடுப்பு, கழுத்து போன்ற மூட்டுப் பகுதிகளில் வலி, தசை வலுவிழப்பு, தலைவலி போன்ற சிக்கல்களெல்லாம் ஏற்படும்" என்று சொல்வதுடன், இது குறித்த சில வழிகாட்டல்களையும் தருகிறார்.

பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன்.
பிசியோதெரபிஸ்ட் ஸ்ரீநாத் ராகவன்.
மொபைல் கண்களுக்கு நேராக இருக்க வேண்டும்.

* ''படுத்துக்கொண்டிருக்கும்போதோ, நடக்கும்போதோ மொபைல் உபயோகிக்கக் கூடாது. அமர்ந்திருக்கும்போது மட்டும்தான் மொபைல் உபயோகப்படுத்த வேண்டும்.

* மொபைல் உபயோகிக்கும்போது கழுத்து வளைந்திருக்கக் கூடாது. முதுகு நேராக இருக்க வேண்டும்.

செல்ஃபோன்
செல்ஃபோன்
`கேட்ஜெட்களை இப்படித்தான் கையாளணும்!' ஒரு ஹெல்த் கைடு

* தொடர்ச்சியாகப் பல மணி நேரத்துக்கு மொபைலைப் பார்க்கக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், `டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின்' எனப்படும் கண் பிரச்னை ஏற்படும்.

* டிஸ்பிளே பெரிதாக இருக்கும் மொபைலை வெகுநேரம் கைகளில் வைத்திருப்பதால் கைவிரல்களில் வலி ஏற்படலாம்.

* தசை சார்ந்த எந்தப் பிரச்னைக்கும் முதல் நிலையிலேயே பிசியோதெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது" என்கிறார் அவர்.

மொபைலை சரியாகக் கையாள்வோம்!
அடுத்த கட்டுரைக்கு