Published:Updated:

ஆபிஸே காலியான பிறகும் நீங்கள் மட்டும் ரொம்ப நேரம் வேலை பார்க்கறீங்களா? உடம்பு பத்திரம் பாஸ்!

ஓவர்டைம் வேலை
ஓவர்டைம் வேலை

ஓவர்டைம் வேலை உடம்புக்கு ஆகாது பாஸ் - மருத்துவர்களின் அலர்ட்!

எல்லா அலுவலகங்களிலும், `ஆபீஸ் டைமிங் முடிஞ்சிடுச்சே... நீங்க இன்னும் வீட்டுக்கு கெளம்பலையா?' எனக் கேட்பதற்கு ஏதுவாக ஒரு நபர் இருப்பார். 8 எட்டு மணியோ, 11 மணியோ... எத்தனை மணிக்கு விசாரித்தாலும், `இப்போதான் ஒரு வேலையை ஆரம்பிச்சிருக்கேன். முடிச்சிட்டுதான் போகணும்' எனக் கூறுவார் அவர்! இப்படி நேரம் - காலம் குறித்த எந்த வரைமுறையும் இன்றி அலுவலகமே கதியென இருப்பதென்பது, ஒருவகையில் சின்சியாரிட்டி எனக் கூறப்பட்டாலும், உடல்நலன் சார்ந்து யோசித்துப்பார்த்தால் இது ஆபத்தான போக்கு என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஆபீஸ் டைமிங்
ஆபீஸ் டைமிங்

நேர வரைமுறையின்றி பணிபுரிபவர்களுக்கு, அதனால் ஏற்படும் உடல்நல சிக்கல்கள் குறித்து, சமீபத்தில் ஆய்வொன்றை செய்தது கனடாவின் ஒரு மருத்துவ நிறுவனம். அந்த ஆய்வின் முடிவில், வேலை நேரத்துக்குப் பின்னரும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு, அதன் காரணமாகத் தீவிரமான மற்றும் நீடித்த உயர் ரத்த அழுத்த பாதிப்பு வரலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Vikatan

ஏறத்தாழ 3,500 பேர் உட்படுத்தப்பட்ட அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள்...

ஆய்வு
ஆய்வு

* வார நாள்களில் 49 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை பார்ப்பவர்களில், 70 சதவிகிதம் பேருக்கு `நிலையற்ற உயர் ரத்த அழுத்த பிரச்னை' ஏற்படுகிறது.

* வார நாள்களில் 41 முதல் 48 மணி நேரம்வரை வேலை பார்ப்பவர்களில், 54 சதவிகிதம் பேருக்கு `நீடித்த ரத்த அழுத்த' பிரச்னையும், 42 சதவிகிதம் பேருக்கு `நிலையற்ற ரத்த அழுத்த பிரச்னை'யும் ஏற்படுறது.

வேலைப்பளு, பாலினம், பணியின் தன்மை, உடல் எடை, புகைப்பழக்கம் போன்ற காரணங்களால் இவை மாறுபடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அலுவலகத்தில் அதிக நேரம் இருந்து வேலை பார்ப்பது
அலுவலகத்தில் அதிக நேரம் இருந்து வேலை பார்ப்பது

இந்த `நிலையற்ற' மற்றும் `நீடித்த' உயர் ரத்த அழுத்த பிரச்னைகள் இரண்டும், தீவிரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறி, பணியில் நேர ஒழுக்கத்தைப் பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவரான சேவியர். `இதுநாள் வரையிலும் நேர ஒழுக்கத்தைப் பின்பற்றாதவர்கள், இப்போது உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்' என்று கோரிக்கையும் விடுத்துள்ளார் அவர்.

உண்மையில் அலுவலகத்தில் அதிக நேரம் இருந்து வேலைபார்ப்பதென்பது அவ்வளவு ஆபத்தான போக்கா என்ன? பொது மருத்துவர் அர்ஷ்த் அகிலிடம் கேட்டோம்.

மருத்துவர் அர்ஷத் அகில்
மருத்துவர் அர்ஷத் அகில்

``அலுவலகத்திலிருந்து அதிக நேரம் பணிபுரிவது, நிச்சயம் பிரச்னைக்குரிய விஷயம்தான். ஏனெனில், அலுவலக வேலைகள் அனைத்திலுமே, நம்மைச் சுற்றியோர் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவித பரபரப்பும் நம்மைத் தொற்றிக்கொண்டே இருக்கும். இவையாவும், ம னஇறுக்கத்துக்கு வழிவகுக்கும். இது, உற்சாகமாக வேலைபார்ப்பதைத் தடுக்கும்.

பணி நேரத்துக்குப் பிறகு, அலுவலகத்தில் இருக்க வேண்டாம்.
மருத்துவர் அர்ஷத் அகில்

அதிக நேரம் அலுவலகத்திலேயே இருப்பவர்கள், நிச்சயம் தனக்கென நேரம் செலவழிக்கத் தவறிவிடுவர். குடும்பத்துடனும் குறைவாகவே நேரம் செலவழிப்பர். இவையெல்லாம், ரிலாக்ஸேஷனே இல்லாத வாழ்க்கைக்கு அவர்களைக் கொண்டு செல்லக்கூடும். தனித்து விடப்பட்டது போன்ற எண்ணத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தலாம் என்பதால், கவனம் தேவை.

டெட்லைன் டென்ஷன்
டெட்லைன் டென்ஷன்

எந்தவொரு பணிக்குமே, ஒரு நெகட்டிவ் பக்கம் இருப்பது வழக்கம். உதாரணத்துக்கு, உட்கார்ந்துகொண்டே பணி செய்தால் சில பிரச்னைகள் ஏற்படும். அதற்காக நின்றுகொண்டே பணிபுரியலாமா என்றால், அதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இவை 'ஆக்குபேஷனல் ஹஸார்ட்ஸ்', அதாவது பணி நிமித்தம் ஏற்படும் பிரச்னைகள் எனப்படும். இத்தகைய பணி நிமித்த பிரச்னைகள், அலுவலகமே கதியெனக் கிடப்பவர்களுக்கு, தீவிரமாக இருக்கும். தவிர இளம் வயதிலேயே மூட்டு தொடர்பான பிரச்னைகள், சர்க்கரைநோய், இதயநோய் போன்ற வாழ்வியல் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். ஆகவே, பணி நேரத்துக்குப் பிறகு அலுவலகத்தில் இருக்க வேண்டாம்.

தீர்வு:

சரியான அலுவலக வேலை நேரம் என்பது, எட்டு மணி நேரம். அதற்கு மேல் அலுவலகத்திலிருந்து பணி செய்ய வேண்டாம்! `வேலை இன்னும் முடியவில்லையே' என்பவர்கள், வீட்டுக்குச் சென்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதற்குள் அந்தப் பணியை முடித்துவிட்டு, பின் குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்.

வேலை
வேலை
ஆக்குபேஷனல் ஹஸார்ட்ஸ்
பணி நிமித்த பிரச்னைகள், அலுவலகமே கதியெனக் கிடப்பவர்களுக்கு, தீவிரமாக இருக்கும்.

அந்த நேர வரையறைக்குள் முடிக்க முடியாத உங்களின் வேலைகளை, அலுவலகத்திலேயே திட்டமிட்டுவிட்டு முடிக்கப் பாருங்கள். முடியவில்லை எனில், அவற்றை மறுநாளுக்கு ஒத்திவைத்துவிடுங்கள். மாலையில் கிடைக்கும் நேரத்தில் புதிய இடங்களுக்குச் செல்லுங்கள். கிடைக்கும் அந்த நேரத்தில், மனதுக்கு தெம்பூட்டும் விஷயங்களைச் செய்யுங்கள்.

நேரம் முடிந்த பின்னரும் அலுவலகத்தில் இருப்பதற்குச் சொல்லப்படுகிற இரண்டு வகையான காரணங்கள்...

* `எல்லோரும் சென்ற பிறகுதான் நான் வேகமாகப் பணி செய்கிறேன். அதனால்தான் எனக்கு தாமதாகிறது.

* தினம் தினம் நிறைய வேலைகள் வருகின்றன. எவ்வளவு வேகமாக முயன்றாலும், தாமதாகிவிடுகிறது.
பணியிடம்
பணியிடம்

முதல் காரணத்தைச் சொல்பவர்கள், பணியிடத்தில், பணிச்சூழலில் உங்களுக்குப் போதுமான அளவு சுதந்திரம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அதைச் சரிசெய்துகொள்ள முயலுங்கள். இரண்டாம் காரணத்தைச் சொல்பவர்கள், நேர மேலாண்மையைக் கற்றுக்கொண்டு பிரச்னையை சரிசெய்ய முயலுங்கள்" என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு