Published:Updated:

புத்தம் புது காலை - 100 : கொரோனா காலாவதியானாலும் கற்றவை வீணாகிவிடுமா... தேடல் உணர்த்துவது என்ன?

புத்தம் புது காலை
புத்தம் புது காலை

ஒன்றைத் தொடங்கினால், அதை முடிக்கவும் தானே வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள் என வாரத்தில் கிட்டத்தட்ட 20 வாரங்கள் தொடர்ந்து நூறு பதிவுகள் வரை வந்த இந்த ‘புத்தம் புது காலை’ தொடர் இன்று முடிவுக்கு வருகிறது.

"கிடைக்கும் வரை உங்கள் தேடலைத் தொடருங்கள்!"
- ஸ்டீவ் ஜாப்ஸ்

சாப்பிட உட்கார்ந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக இருக்கிறது என்று மருத்துவமனையிலிருந்து அழைப்பு வர, சாப்பிடுவதை அப்படியே நிறுத்திவிட்டு பிரசவ அறைக்கு வந்திருந்தேன்.

அடுத்தடுத்து ஏற்பட்ட கருப்பை சுருங்குதல் மற்றும் கருப்பை வாய் விரிதலுடன், சிறிது நேர போராட்டத்துக்குப்பின், அழகிய பெண் குழந்தையை அந்தப்பெண் பிரசவிக்க, பிறந்தவுடன் வீறிட்டு அழுதது குழந்தை. குழந்தையைத் துடைத்து, தொப்புள் கொடியை மெதுவாக கத்தரித்து, குழந்தையை அருகில் இருந்த குழந்தை நல மருத்துவரிடம் ஒப்படைத்த பின், தாயை கவனிக்க தொடங்கினேன்.

எத்தனையோ முறை, எத்தனையோ தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்திருந்தாலும் இயற்கையின் ஒரு விஷயம் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. அதுவரை கருப்பைக்குள் சுருங்கிக் கிடந்த குழந்தை, தன் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன், தன் முதல் அழுகையின் மூலமாக காற்றை உள்ளிழுத்து, நுரையீரலை விரித்து, முதல் மூச்சை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்ற அதேநேரத்தில்... குழந்தை வளர, கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, படிப்படியாக ஒன்பது மாதங்கள் வரை, விரிந்து வளர்ந்த கருப்பை, குழந்தை வெளியில் வந்த அடுத்த நொடியே முற்றிலும் சுருங்கி நிற்கிறது.

புத்தம் புது காலை - 100 : கொரோனா காலாவதியானாலும் கற்றவை வீணாகிவிடுமா... தேடல் உணர்த்துவது என்ன?

கருப்பையின் இந்த விரிதலும், ஆழமான சுருங்குதலும் (Contraction and Retraction), குழந்தையின் நுரையீரலின் முதல் விரிதலும், காற்றை உள்ளிழுத்தலும் (Relaxation and Air Inflation) என இந்த இயற்கை அதிசயங்கள் இரண்டு மட்டும் இல்லையென்றால் இந்த உலகமே இல்லையல்லவா?

யோசித்துப் பார்த்தால் இந்த விரிதலும் சுருங்குதலும் போல, இரட்டை குணங்களால் ஆனதுதான் உலகம். இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, வெற்றி - தோல்வி, இரவு - பகல், இருட்டு - வெளிச்சம், பசி - திருப்தி போன்ற எண்ணற்ற இரட்டை நிலைகளால் ஆனதுதான் உலகம். ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல, இரண்டையுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு பக்கம் மட்டுமே போதும் என்று எப்போதும் தவிர்த்துவிட முடியாது.

அதேபோலத்தான் தொடக்கமும் - முடிவும். ஒன்றைத் தொடங்கினால், அதை முடிக்கவும் தானே வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள் என வாரத்தில் கிட்டத்தட்ட 20 வாரங்கள் தொடர்ந்து நூறு பதிவுகள் வரை வந்த இந்த ‘புத்தம்புது காலை’ தொடர் இன்று முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக நான் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து, "இவ்வளவு மருத்துவப் பணிகளுக்கிடையே எதற்காக எழுதுகிறீர்கள்?" என்ற கேள்வியை, தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். உண்மையில் நான் எழுதவில்லை... கற்றுக் கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை!

‘21 Lessons for the 21st Century’ புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி கூறுவது போல, மனிதன் ஏற்படுத்திய தொழில்நுட்பங்கள் மனிதனே எதிர்பாராத அளவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் நாம் புதிது என்று ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட ஒன்று, இன்று உபயோகத்திலேயே இல்லை. இன்றைக்கு நாம் புதிது என்று நினைத்து செய்யும் விஷயங்கள் இன்னும் எத்தனை நாட்கள் புதிதாக இருக்கும் என்பதும் தெரியவில்லை.

புத்தம் புது காலை - 100 : கொரோனா காலாவதியானாலும் கற்றவை வீணாகிவிடுமா... தேடல் உணர்த்துவது என்ன?

நேற்றைக்கு பிளேக் நோய்க்கு வைத்தியம் செய்யக் கற்றுக் கொண்டேன். இன்று பிளேக் நோயே இல்லை. ஆனால், கொரோனா இருக்கிறது. இன்று கொரோனாவுக்கு வைத்தியம் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் நாளைக்கு கொரோனா காணாமல் போனபின் நான் கற்றுக்கொண்டது என்ன பயன் தரும் என்பது தெரியவில்லை.

என்னை விடுங்கள்... நமது குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் இன்றைய கல்வியும், தொழில்களும் நாளைய தலைமுறைக்கு பயனளிக்குமா என்பது உண்மையில் விடை தெரியாத மிகப்பெரிய கேள்வி. 1018-ம் ஆண்டில் படிப்பறிவற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று, அந்தக் குழந்தைகளுக்கு பட்டு நெசவு செய்யவும், நெல் பயிரடவும் கற்றுத் தந்தார்கள். அதேசமயம் புத்திசாலிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படைப்புத்திறனுடன் இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள் என்று அவர்களுக்கு கன்ஃபூசியஸையும், காலிகிராஃபியையும் கற்றுத் தந்தனர்‌. ஆனால், காலம் இரண்டு பேரையுமே ஏமாற்றி, இன்று தொழில்நுட்பத்தின் பிரமாண்ட வளர்ச்சியில் வந்து நிற்கிறது. அதேபோல, அடுத்த பத்து வருடங்களில் எந்த துறை சிறந்து நிற்கும் என்று இப்போது யாராவது சொல்ல முடியுமா?

அதனால்தான் கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு மணித்துளியும். தினசரி இந்தப் பதிவுகளை எழுதுவதற்காக புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை தேடும்போது, தினமும் உங்களுடன் நானும் புதிதாக கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.

அதேசமயம் மருத்துவம் என்பதுடன் எழுத்தையும் சேர்ந்தே செய்தது, எனக்குள் இருக்கும் இன்னொரு மனிதனை இனம் காணவும் முடிந்தது என்பதே உண்மை.சரி, இவ்வளவு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்ய வேண்டியது தானே... ஏன் முடிக்க வேண்டும் என்ற அடுத்த கேள்வியும் இப்போதே கேட்கப்பட்டுவிட்டது.

புத்தம் புது காலை - 100 : கொரோனா காலாவதியானாலும் கற்றவை வீணாகிவிடுமா... தேடல் உணர்த்துவது என்ன?

மலைகளுக்கிடையே பயணம் செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு, ஒரு விலை உயர்ந்த இரத்தினக் கல் ஒன்று கிடைத்தது. அதை தனது கைப்பைக்குள் எடுத்து வைத்துக் கொண்ட அந்த பெண் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை, தான் உணவு சாப்பிட்ட இடத்தில் பணத்தைக் கொடுக்க பையைத் திறக்கும்போது கைப்பைக்குள் மின்னிய ரத்தினம் கடைக்காரரின் கண்ணில் பட, "அதை எனக்கு தருவீர்களா?" என்று கேட்கிறார்‌ கடைக்காரர். எந்தவித சலனமும் இல்லாமல் அதை அந்தக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தார் அந்தப் பெண்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு பயணி, "அவ்வளவு அரிய ரத்தினத்தை கொடுக்க எப்படி உங்களுக்கு மனது வந்தது?" என்று கேட்க... "இன்னும் அரிய கற்களைத் தேடி நான் பயணித்துக் கொண்டிருப்பதால்" என்று பதிலளித்தாராம் அந்தப் பெண்.

அறிவெனும் விலைமதிப்பற்ற கற்களைத் தேடி நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். முடியும் போதெல்லாம் அதை எல்லோருக்கும் வழங்கவும் விரும்புகிறேன்.

டாக்டர் சசித்ரா தாமோதரன்
டாக்டர் சசித்ரா தாமோதரன்

இதோ… இன்றுடன், ‘புத்தம்புது காலை’ என்ற ஒரு ஆத்மார்த்தமான தேடல், நூறு பதிவுகளுடன் நிறைவுக்கு வருகிறது. இதுவரை ஒவ்வொரு நாளும் புதியதொரு தலைப்பில், புதியதொரு விஷயத்தை அதிகாலையில் எழுதத் தூண்டிய நண்பர்களுக்கும், அதை அழகான புகைப்படங்களுடன், அழகிய தலைப்புகளுடன் பிரசுரித்த விகடனுக்கும், இதுவரை தொடர்ந்து படித்து, பகிர்ந்து, விமர்சித்து, என்னுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

விரைவில் வேறொரு புதிய பகுதியில் சந்திப்போம்!

#தேடலும்_பகிர்தலும்

அடுத்த கட்டுரைக்கு