Published:Updated:

Black Fungus Outbreak: கொரோனாவும் கொள்ளிக்கண்ணும்... கண்டறிவது எப்படி? சிகிச்சை என்ன?

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

“கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஒரு அரிய, ஆனால் ஆபத்தான சுகாதார கேட்டை விளைவிக்கும் பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது கண்களை பாதிக்கிறது; பார்வை நரம்பு மூலமாக மூளையையும் பாதிக்கிறது. மூளை பாதிக்கப்படும்போது உயிருக்கு ஆபத்தாக வாய்ப்பு இருக்கிறது!”

அந்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு இப்போதுதான் சற்று இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறார். திடீரென்று கண்களில் ஏதோ பிரச்னை ஏற்படவே மருத்துவரைப் பார்க்க வந்தார்.

அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு ஒரு கணம் அமைதியாகப் பார்த்தார் மருத்துவர்.

மூக்கடைப்பு, அவ்வப்போது மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது, அவ்வப்போது மூக்கிலிருந்து கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் திரவம் வெளியேறுகிறது, உடல் சருமத்தின் நிறம் சற்று கருப்பாக மாறுகிறது, கன்னத்தைச் சுற்றி வீக்கம் அல்லது உணர்வின்மை இருக்கிறது, பல், தாடை இரண்டுமே வலிக்கின்றன, கண் இமைகள் இரண்டும் வீங்கி இருக்கின்றன, பொருள்கள் இரண்டு இரண்டாக தெரிகின்றன – இத்தனை அறிகுறிகளோடு இருக்கும் அந்த நபரைச் சோதிக்க மருத்துவமனையின் மைக்ரோபயாலஜிஸ்ட்டை இன்டர்காமில் அழைத்தார்.

அறைக்கு வந்து அந்த நபரைப் பார்த்த மைரோக்பயாலஜிஸ்ட், பரிசோதனைக்காக தன்னுடன் அவரை அழைத்துச் சென்றார். அந்த நபரிடம் சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டு லேப் உள்ளே சென்றார். பரிசோதனை முடிவுகள் மறுநாள் வந்தன.

அந்த நோயாளிக்குக் கறுப்புப் பூஞ்சை தொற்றின் விளைவாக கொள்ளிக்கண் ஏற்பட்டிருக்கிறது என்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.

நிஸார் சோனம் பூனம்
நிஸார் சோனம் பூனம்

அது என்ன கறுப்புப்பூஞ்சை? அது என்ன கொள்ளிக்கண்?

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கண் குழி, கண் அழகு மற்றும் கண் பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் இணை ஆலோசகர், மருத்துவர் நிஸார் சோனம் பூனம் விளக்குகிறார்…

“கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஒரு அரிய, ஆனால் ஆபத்தான சுகாதார கேட்டை விளைவிக்கும் பூஞ்சைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. (Mucormycosis) மியூகோமிகோசிஸ் எனப்படும் கறுப்புப் பூஞ்சை கோவிட்-19 நுண்கிருமியின் காரணமாக ஒரு சுகாதாரப் பிரச்னையை உருவாக்கியுள்ளது. அது கண்களை பாதிக்கிறது; பார்வை நரம்பு மூலமாக மூளையையும் பாதிக்கிறது. மூளை பாதிக்கப்படும்போது உயிருக்கு ஆபத்து வரும் வாய்ப்பும் இருக்கிறது” என்று இதன் தீவிரத்தை விளக்குகிறார் மருத்துவர் நிஸார்.

மியூகோமிகோசிஸ் என்றால் என்ன?

Mucormycosis என்பது Mucormycetes எனப்படும் பூஞ்சைகள் தொகுப்பு குழுவால் ஏற்படும் ஒரு தீவிர பூஞ்சைத் தொற்று ஆகும். இந்தத் தொகுப்பு பூஞ்சைகள் சுற்றுச்சூழல் முழுவதும் வாழ்கின்றன, மண், தாவரங்கள், காற்று மற்றும் துறைமுகங்கள் போன்ற இடங்களிலும், ஏன் ஆரோக்கியமான மனிதர்களின் மூக்குக்குள் கூட உள்ளன.

“கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்கள், நீண்ட காலமாக நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகளில் உள்ளவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் போன்றோரை இது பொதுவாக பாதிக்கிறது” என்று இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியமுள்ளவர்களைப் பட்டியலிடுகிறார்.

மியூகோமிகோசிஸ்
மியூகோமிகோசிஸ்

“தற்போது சார்ஸ் – கோவிட்-2 நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சீரழிவை ஏற்படுத்துவதால், மேற்கண்ட நோயாளிகளில் இந்தப் பூஞ்சை தொற்று அதிக எண்ணிக்கையில் இப்போது காணப்படுகிறது. இது முக்கியமாக சைனஸ்கள் அல்லது நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் கண் இமைகள் மற்றும் மூளையைச் சுற்றியுள்ள இடத்திற்குப் பரவுகிறது” என்று கூறும் மருத்துவர் நிஸார், மியூகோமிகோசிஸின் இந்தத் திடீர் தாக்குதல் ஏன் நிகழ்கிறது என்பதையும் அடுத்து விளக்குகிறார்.

“கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், நீண்ட காலமாக முறையான ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது, நீண்டகால ஐ.சி.யூ வார்டுகளில் தங்கியிருத்தல், மற்றும் நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகளுடன் இருத்தல்; இவை தவிர, கொரோனா வைரஸ் நமது உடலில் உள்ள தோலில் மேலடுக்கான எண்டோடெலியல் செல்கள் மீது ஒரு தொடர்பு வைத்துள்ளது. இந்த நுண்ணுயிரி கணையத்தைப் பாதிக்கும். மேலும் இன்சுலின் சுரப்பை மாற்றி இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்” என்று நீரிழிவு நோயாளிகளில் இந்தத் தொற்றின் தீவிரத்தை உணர்த்துகிறார்.

“நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் இந்த மியூகோர் சளித் தொற்று நோயாளிகளில் பெரும்பாலானோர் ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவைக் கொண்டிருக்கிறார்கள். நமது உடலில் கிடைக்கும் இரும்பு மற்றும் சர்க்கரை இந்தப் பூஞ்சைக்கு ஒரு இலவச விருந்து போன்றவை; இரண்டாம் நிலை தொற்று மற்றும் மாசு பரவுவதும் ஒரு சாத்தியமான காரணமாகும். இருப்பினும், அறிகுறியற்ற மற்றும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கும்கூட இந்தப் பூஞ்சை தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேதனையான செய்தி” என்கிறார் மருத்துவர் நிஸார்.

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

இந்த பூஞ்சைத் தொற்றினை ஆரம்ப நிலையில் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?

இந்த பூஞ்சைத் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்:

• மூக்கடைப்பு

• மூக்கிலிருந்து ரத்தம் வருதல், மூக்கிலிருந்து கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் திரவம் வெளியேறுதல்

• சருமத்தின் கறுப்பு நிறமாற்றம்

• கன்னத்தைச் சுற்றி வீக்கம் அல்லது உணர்வின்மை

• ஒரு பக்க முக வலி

• பல் வலி அல்லது தாடை வலி

• கண் இமைகள் அல்லது கண் இமை வீக்கம்

• இரட்டை பார்வை

• கண்கள் சிவப்பாகக் காணப்படுதல்

• பார்வை திடீரென குறைதல்

“எங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்தவர்களில், கோவிட்டுக்குச் சிகிச்சை பெற்று 2-3 வாரங்களுக்குப் பிறகு வந்தவர்களில் இந்தத் தொற்று பாதிப்பைக் கண்டறிந்தோம். மேலும் கோவிட் பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவு தெரிந்த 5-6 நாள்களிலேயே இந்தப் பூஞ்சைத் தொற்றுடன் சில நோயாளிகள் வருவதையும் கவனித்தோம்” என்கிறார் மருத்துவர் நிஸார்.

“பொதுவாக மூக்கிலிருந்து ஒரு திசு சாம்ப்பிளை எடுத்து ஒரு எளிய பயாப்ஸி பரிசோதனை மூலம் இந்த நோயை உறுதிப்படுத்த முடியும். நுண்ணுயிரியலாளர்கள் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH Stain) கறை பரிசோதனை முறையில் இந்த இடைவெளியேதுமில்லாத பூஞ்சையை உடனடியாகக் காணலாம்.

கண்கள் சிவப்பாக காணப்படுதல்
கண்கள் சிவப்பாக காணப்படுதல்

எம்.ஆர்.ஐ ஸ்கேன் (சைனஸ், கண் குழி சுற்றுப்பாதை மற்றும் மூளை போன்ற பகுதிகளை) பரிசோதனை இந்த நோயின் அளவை மதிப்பிடுவதற்கும் அதற்கான சிகிச்சையை தீர்மானிப்பதற்கும் உதவி செய்யும்” என்று நோய் கண்டறியும் முறை குறித்து மருத்துவர் நிஸார் விளக்குகிறார்.

இதற்கு சிகிச்சை என்ன?

“ஆம்போடெரிசின் பி எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்து இந்த நோய்த் தொற்றுக்கான தேர்வுக்கான சிகிச்சையாகும். இந்தப் பூஞ்சை கண்ணிலிருந்து மூளைக்கு பரவும் ஆபத்து அதிகச் அளவில் இருப்பதால், கண் ஈடுபடும்போது ஆம்போடெரிசின் லிபோசோமால் முறையில் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு மருத்துவரின் கடுமையான வழிகாட்டுதலின் கீழ் 4-6 வாரங்களுக்கு மேலாக மருந்து கொடுக்கப்பட வேண்டும்” என்று சிகிச்சையின் முதல் கட்டம் குறித்து விளக்குகிறார் மருத்துவர் நிஸார்.

“மேற்குறித்த சிகிச்சையின் முடிவைப் பொருத்து, இரண்டாவது தேர்வு பூஞ்சை எதிர்ப்பு போசகோனசோல் ஆகும். இதை முதல் வரிசை சிகிச்சையான ஆம்போடெரிசின் பி மீதான முடிவை மதிப்பிட்ட பிறகு தொடங்கலாம்.

பூஞ்சை சுமையை குறைப்பதற்கும், இறந்த அனைத்து திசுக்களையும் அகற்றுவதற்கும் ஒரு அறுவைசிகிச்சை உடனடியாக தேவை. (நாசி எண்டோஸ்கோபிக் சிதைவு மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட மற்றும் நெக்ரோடிக் திசுக்களின் சுற்றுப்பாதையை நீக்குதல்) விரைவாகச் செய்யப்பட வேண்டும்” என்பது மருத்துவர் நிஸாரின் பரிந்துரையாக இருக்கிறது.

“சில நேரங்களில் நோயாளியின் உயிரைக் காப்பதற்காக கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை (விரிவாக்கம்) தேவைப்படலாம்” என்றும் அவர் கூறுகிறார்.

கண் பரிசோதனை
கண் பரிசோதனை

இந்த இரட்டைக்கொள்ளிக்கண் பூஞ்சைத் தொற்றினை தடுப்பது எப்படி?

• இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்

• ஸ்டெராய்டு (ஊக்க மருந்துகள்)களை முறைப்படி உபயோகித்தல்.

• ஆவி பிடிப்பதற்க்கு சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள்.

• கோவிட்டிலிருந்து குணமடைந்த பின்னரும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைக் கண்காணிக்கவும்.

• நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல்

• தோட்டவேலைகள் செய்யும் போது அல்லது மண்ணில் வேலை பார்க்கும் போது பாதுகாப்பு கருவிகளை அணியுங்கள்.

• தூசி நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள்.

எல்லா இடங்களிலும் பூஞ்சை உள்ளது. அதை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை நாம் கட்டியெழுப்ப வேண்டும், அதை விரைவாகக் கண்டறிந்து, பார்வையை மட்டுமல்ல, உயிரையும் காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர்

அ.போ. இருங்கோவேள்

மருத்துவ சமூகவியலாளர்

சங்கர நேத்ராலயா, சென்னை.

அடுத்த கட்டுரைக்கு