பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா வைரஸ்... உலகம் அச்சம் கொள்ள காரணம் என்ன?

பிரிட்டனில் தற்போது பரவுவது அதிக கொடிய வகை கொரோனா வைரஸ் என்பதற்கான ஆதாரங்களோ ஆய்வு முடிவுகளோ இல்லை. இருந்தாலும் அதைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்றால், மிகவும் குறைவான நோய் அரும்பல் காலத்தில் (Incubation Period) அதிகமானோருக்குப் பரவும் தன்மை கொண்டது.
`மறுபடியும் முதல்ல இருந்தா...' என்ற வடிவேலுவின் டயலாக் போன்றுதான் கொரோனாவின் செயல்பாடுகள் இருக்கின்றனவோ என்ற அச்சம் எழத் தொடங்கியிருக்கிறது. 2020 என்ற வருஷத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு விஷயம் கோவிட்-19-தான். கிட்டத்தட்ட ஓராண்டாக அது குறித்த அச்சத்திலும் பாதிப்பிலும் உழன்றுகொண்டிருந்த நமக்கு தடுப்பூசிகள் வரப்போகின்றன என்ற நம்பிக்கை பிறந்தது.
2021-ல் எப்படியும் உலகம் இயல்புக்குத் திரும்பிவிடும் என்ற நமது நம்பிக்கையின் கயிற்றை மெல்ல அவிழ்க்கிறது பிரிட்டன். தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் (New Strain) பரவி வருகிறது. இந்த வைரஸ் 70 சதவிகிதம் வேகமாகப் பரவுகிறது என்ற தகவலும் கவலையளிக்கிறது.
பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுகிறது. நவம்பர் மாத இடையிலிருந்து நடத்தப்பட்ட ஆய்வில் தென் ஆப்பிரிக்காவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 90 சதவிகிதம் இந்தப் புதிய வைரஸ்தான்.

இதன் காரணமாக, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள், பொது முடக்கம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன. இன்னும் சில நாடுகள் இவற்றை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. இது பற்றிப் பேசியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ``தாக்குவதற்கான முறையை வைரஸ் மாற்றும்போது, நம்முடைய பாதுகாப்பு வழிமுறைகளை நாமும் மாற்றியாக வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஆலோசனையில் இந்தியா!
இந்நிலையில், பிரிட்டனில் தாக்கம் செலுத்திவரும் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சர்வதேச சுகாதார அமைப்புகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. அந்த ஆலோசனைக்குப் பிறகு, பிரிட்டனிலிருந்து சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய வகை வைரஸ் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும், இதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.
``பிரிட்டனில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் செப்டம்பர் மாதத்திலேயே லண்டன், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் அதைத் தொடர்ந்து கவனித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
வைரஸ் ஏன் மாற்றமடைகிறது?
முட்கள் கொண்ட பந்து போன்ற தோற்றத்தில் கொரோனா வைரஸ் காணப்படும். முட்கள் போன்று காணப்படுவது ஒரு வகை புரதம். வைரஸ் பல்கிப் பெருகுவதற்கு அந்தப் புரதம்தான் பயன்படுகிறது. அந்தப் புரதத்தில் ஏற்படும் மாற்றத்தினால்தான் வைரஸின் தன்மையும் மாறுகிறது.
தமிழகத்தைவிட ஆந்திரத்தில் உயிரிழப்புகள் அதிகமாகக் காணப்படவும் வைரஸின் தன்மைதான் காரணம். இரண்டு மாநிலத்திலும் வெவ்வேறு தன்மை கொண்ட வைரஸ்கள் பரவியிருக்கின்றன.

பொதுவாகவே வைரஸ்கள் அந்தந்த இடத்துக்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும். நம் உடலுக்குச் செல்லும்போது நோய் எதிர்ப்புத் திறன் (Immunity pattern) அதைத் தடுத்தால், தன் தன்மையை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டு பரவும். கிட்டத்தட்ட பச்சோந்தியைப் போன்று இடத்துக்குத் தகுந்தாற்போல் தன்மையை மாற்றிக்கொண்டு தொற்றும். அதனால்தான் ஒவ்வொருவரின் உடலுக்குள் வைரஸ் செல்லும்போதும் அதற்கேற்றாற்போல் மாற்றமடைந்து, புதிய புதிய தன்மை (Strain) உருவாகிக்கொண்டே இருக்கிறது.
அச்சம் எதனால்?
பிரிட்டனில் தற்போது பரவுவது அதிக கொடிய வகை கொரோனா வைரஸ் என்பதற்கான ஆதாரங்களோ ஆய்வு முடிவுகளோ இல்லை. இருந்தாலும் அதைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்றால், மிகவும் குறைவான நோய் அரும்பல் காலத்தில் (Incubation Period) அதிகமானோருக்குப் பரவும் தன்மை கொண்டது.
பொதுவாக வைரஸ் அடுத்தவருக்குப் பரவுவதற்கு குறிப்பிட்ட அளவு வைரஸ்களின் எண்ணிக்கை (Viral Load) தேவைப்படும். ஆனால், புதிய மாற்றமடைந்த தன்மையைக் கொண்ட இந்த வைரஸ் பத்துப் பதினைந்து இருந்தால்கூட அடுத்தவருக்கு எளிதில் பரவிவிடும்.

ஒரு நோயாளியிடமிருந்து எத்தனை பேருக்கு நோய் பரவுகிறது என்பதை ஆர்நாட் (R0) என்று குறிப்பிடுகின்றனர். புதிய வைரஸின் தன்மையினால் ஆர்நாட் விகிதம் அதிகரிக்கிறது. ஒரு நபரிடமிருந்து அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு இது பரவும்.
ஏற்கெனவே, கோவிட்-19 பெருந்தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். மாற்றமடைந்த இந்த வைரஸினால் இன்னும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பெருந்தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்தில் 50 பேருக்கு வென்டிலேட்டர் தேவைப்பட்ட இடத்தில் 10 வென்டிலேட்டர்கள் என்ற நிலைதான் இருந்தது.
அதனால் யாருக்குச் சிகிச்சையளிப்பது என்று முன்னிலை கொடுத்து, ரேஷன் அடிப்படையில் சிகிச்சையளிக்க நேர்ந்தது. அதே போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் மருத்துவமனைகள் நிரம்பி, ஓவர் லோடு ஆகிவிடும். அதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படும் என்ற பயத்தினால்தான் பயணக்கட்டுப்பாடுகள், விமான சேவை ரத்து போன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து எடுத்துள்ளது.

தடுப்பூசி பயனளிக்காதா?
தடுப்பூசி தயாரிக்கும்போதே வைரஸின் ஐந்தாறு தன்மைகளுக்கு ஏற்றாற்போல்தான் தயாரித்து விநியோகிப்பார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் தடுப்பூசி உற்பத்தி செய்யும்போது அதை அப்டேட் செய்து அப்போது எந்தத் தன்மையான வைரஸ் பாதிப்பு இருக்கிறதோ அதற்கேற்றாற் போல் தயாரிப்பார்கள். இன்ஃப்ளூயென்சா வைரஸ் பாதிப்புக்கு இதே போன்றுதான் ஆண்டுதோறும் அப்டேட்டடு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடியை முதலீடு செய்து தடுப்பு மருந்து கண்டறிவது நிச்சயம் குறுகிய கால பயன்பாட்டுக்காகக் கிடையாது. வருடம்தோறும் வைரஸின் தன்மை மாறும், வருடம்தோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

அதே நேரம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோயே வராது என்பதும் இல்லை. அடுத்த முறை வைரஸின் தன்மை மாறும்போது அது நிச்சயம் மீண்டும் தாக்கலாம். ஒருமுறை கோவிட்-19-க்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதற்கான நோய் எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) உருவாகிவிட்டது என்றால், அடுத்த முறை வைரஸ் தாக்கும்போது அதன் தாக்கம் தீவிரமாக இருக்காது. லேசான பாதிப்பாகவே இருக்கும் என்பதால் தீவிர பாதிப்பு, உயிரிழப்பு போன்றவை குறையும். அதனால்தான் தடுப்பூசி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவுக்கும் பரவுமா?
பிரிட்டனில் பரவி வரும் மாற்றமடைந்த வைரஸ் இந்தியாவுக்குள்ளும் நுழையலாம். அப்படிப் பரவினால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இரண்டாம் அலை மேலும் தீவிரமடையும். அதனால் மத்திய அரசு பிரிட்டனுக்குப் பயணம் செய்வோரையும் அங்கிருந்து இந்தியாவுக்கு வருவோரையும் தடை செய்வது நல்லது" என்றார்.