Published:Updated:

`பீதி வேண்டாம்; வதந்தி குறித்து 1077-ல் புகார் கொடுங்கள்!’ - நாகை ஆட்சியரின் #Corona அலர்ட்

கொரோனா
கொரோனா

`வைரஸ் தொற்று குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வதந்தி பரப்புவோர் குறித்து பொதுமக்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.’

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் பி நாயர் ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் பி நாயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகளை விவரித்தார்.

கொரோனா
கொரோனா

அவர் கூறுகையில்,``தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கை கழுவுவதன் அவசியம் குறித்து சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பணியானது 24 மணி நேரமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளியூரிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தேவையானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்டத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு உபகரணங்களான முகமூடிகள் (மாஸ்க்குகள்) தடையின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட ஏதுவாக சுய உதவிக்குழுக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2,000 மாஸ்க்குகள் தயாரிக்கும் பணியானது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கைகளை சுத்தப்படுத்துவதற்கான மருத்துவப் பொருள்கள் அரசு மருத்துவமனையிலேயே தயாரிக்கப்பட்டு தேவைப்படும் இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா
கொரோனா

பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து யாரும் பீதியடையக் கூடாது. பொதுவாக மற்றவர்களுடன் கைகுலுக்குதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முகமூடிகள், மருத்துவப் பொருள்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மற்றும் வைரஸ் தொற்று குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வதந்தி பரப்புவோர் குறித்து பொதுமக்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு