Published:Updated:

கோவிட்-19 நோயாளிகளுக்கான சுவாசக் கருவி... குறைந்த விலையில் தயாரிப்பு சாத்தியமானது எப்படி?

வென்டிலேட்டர்
வென்டிலேட்டர்

`இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு வென்டிலேட்டர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான சில திட்டங்களைப் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பினோம்.’

கொரோனா வைரஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுத்திணறல் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும். தீவிர நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சையளிப்பது மிகவும் அவசியம். ஆனால் இந்தியாவில் வென்டிலேட்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவில் 1.60 லட்சம் வென்டிலேட்டர்கள் கோவிட்-19 தொற்று சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் வேளையில், இந்தியாவில் 20,000-த்துக்கும் குறைவான வென்டிலேட்டர்களே கோவிட்-19 வைரஸ் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வென்டிலேட்டர்களின் பற்றாக்குறையைப் போக்க டி.வி.எஸ் குழுமம் குறைந்த விலையில் சுவாச உதவி உபகரணத்தை உருவாக்கியிருக்கிறது. சுந்தரம் வென்டாகோ (Sundaram Ventago) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணம் டி.வி.எஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Corona
Corona

சுந்தரம் வென்டாகோ

சுந்தரம் வென்டாகோவென்டிலேட்டர் என்பது பல்வேறு அம்சங்கள் அடங்கிய உபகரணம். இந்த உபகரணமானது மூச்சுத்திணறலோடு வரும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் இல்லாதபட்சத்தில் சுவாசத்தைச் சீராக்க உதவும். பொதுவாக மூச்சுத்திணறலோடு வரும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பொருத்துவதற்கு முன்பு ஆக்சிஜன் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த உபகரணத்தைப் பயன்படுத்தினால் ஆக்சிஜன் வழங்கத் தேவையிருக்காது. அதன் மூலம் மருத்துவமனையில் பிற நோயாளிகளின் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனைச் சேமிக்க முடியும்.

இந்த உபகரணத்தைப் பயன்படுத்துவதற்கு அதிக வசதிகள் தேவையில்லை. நோயாளி சாதாரண முகக்கவசத்தை அணிந்தே இந்தக் கருவியைப் பயன்படுத்த இயலும். தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வாகனம், சாதாரண வார்டுகள், கிராமப்புறங்கள் என அனைத்துச் சாதாரண இடங்களில்கூட எளிமையாக இந்தக் கருவியைப் பயன்படுத்த முடியும். இந்த உபகரணத்தைச் சுத்தப்படுத்துவதும் மிகவும் எளிது. இதைப் பயன்படுத்தும் ஊழியர்கள் மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வென்டிலேட்டரைவிட வென்டாகோவை இயக்குவது எளிமையாகவே இருக்கும்.

வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை நிலைப்படுத்துவதற்கு இந்த உபகரணம் பயன்படும்.
தீவிர சிகிச்சை மருத்துவர் ஸ்ரீதர்

உபகரணத்தைத் தயாரிக்கும் முயற்சி, எப்போது விற்பனைக்குக் கிடைக்கும் என்பது போன்ற விவரங்களை அறிந்துகொள்ள பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் ஸ்ரீராம் விஜியிடம் பேசினோம்:

"இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்தே டிவிஎஸ் குழுமத்திலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டிவிஎஸ் தயாரிப்பு தொழிற்சாலைகளில் உள்ள கிச்சனில் உணவு தயாரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வழங்கியது, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதித் திட்டத்துக்கு நிதியளித்தது எனப் பல்வேறு வகையில் சேவையாற்றி வந்தோம்.

இதே போன்று வேறு என்னென்ன சேவைகளுக்கான தேவை இருக்கிறது என்று ஆராய்ந்தபோது, இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு வென்டிலேட்டர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இதுதொடர்பான சில ஆய்வுகளைப் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பினோம்.

Brakes India Deputy Managing director Sriram Viji
Brakes India Deputy Managing director Sriram Viji

டிவிஎஸ் என்பது ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம் என்பதால் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புப் பணிகளில் எங்களுக்கு அனுபவம் இல்லை. அதனால் சில நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஐஐடி நிறுவனம் மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் சமுதாய மருத்துவமனையான சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து வென்டிலேட்டர் போன்ற உபகரணத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டோம்.

அடிப்படையான திட்டத்துடன் சென்னை மருத்துவக் கல்லூரி, காவேரி மருத்துவமனை மற்றும் மேத்தா மருத்துவமனையை அணுகினோம். அந்த மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை மருத்துவர், மயக்கவியல் மருத்துவர், நுரையீரல் மருத்துவர் ஆகியோரிடம் உபகரணம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து, தயாரிக்கப்படவுள்ள புதிய உபகரணத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும், அதனை உபயோகப்படுத்தும்போது என்னென்ன விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும், உபகரணத்தின் கன்ட்ரோல் எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்களைச் சேகரித்தோம்.

Sundaram Ventago
Sundaram Ventago
"எபிடெமிக்கில் தமிழகம்!" - கொரோனா உண்மை நிலவரம் என்ன?

மருத்துவ நிபுணர்களிடமிருந்து பெற்ற விவரங்களைக்கொண்டு மீண்டும் அந்த உபகரணத்தை மேம்படுத்தினோம். மருத்துவ உபகரணங்களைப் பொறுத்தவரை பிரதானமாகப் பார்க்கப்ட வேண்டியது நோயாளிகளின் பாதுகாப்புதான். நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக சில சர்வதேச தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். ஐஐடி நிறுவனத்தில் சுகாதாரத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு துறை வல்லுநர்கள், சர்வதேச தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விஷயங்களை இணைத்துள்ளனர். அதன் அடிப்படையில் சுந்தரம் வென்டாகோ உருவாக்கப்பட்டது" என்றார்.

வென்டாகோவின் விலையைக் குறித்து கேட்டபோது, "பொதுவாக வென்டிலேட்டர்களின் விலை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரையிருக்கும். ஆனால் இந்த உபகரணத்தை ரூ.40,000-த்துக்கு வழங்கத் திட்டமிட்டு வருகிறோம். தற்போது மூன்று மருத்துவமனைகளில் இந்த உபகரணம் சோதனை முயற்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில வாரங்களில் இந்த உபகரணம் விற்பனைக்குக் கிடைக்கும்" என்றார்.

Ventago Team
Ventago Team

இந்த உபகரணத்தின் பயன்பாடு பற்றி காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் ஸ்ரீதரிடம் பேசினோம்:

"மருத்துவமனையில் இருக்கும் வென்டிலேட்டர்களைவிட கூடுதல் நோயாளிகளுக்கு வென்டிலேட்டரின் ஆதரவு தேவைப்பட்டால், அந்த நேரத்தில் நோயாளிகளின் நுரையீரலுக்குள் ஆக்சிஜனைச் செலுத்துவதற்கு ஒரு கருவி வேண்டும். சுந்தரம் வென்டாகோ சுவாச உதவி கருவி இந்த இடைவெளியை நிரப்பும். சிகிச்சையின் ஆரம்ப நிலையில் குறைவான காலத்துக்கு (Short Term Use) இந்த உபகரணத்தைப் பயன்படுத்த முடியும். நோயாளியின் முன்னேற்றத்தைக் கணக்கில்கொண்டு வென்டிலேட்டருக்கு மாற்ற வேண்டுமா என்று மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள்.

Dr.Sridhar
Dr.Sridhar

இதே உபகரணத்தை நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா வைரஸ் நோயாளிகள் மட்டுமல்ல, வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் முதற்கட்டமாக அவர்களை நிலைப்படுத்துவதற்கு இந்த உபகரணத்தைப் பயன்படுத்த முடியும்" என்றார்.

காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் மருத்துவர் எஸ்.அரவிந்தன் பேசுகையில், "இந்தியாவில் பயன்படுத்தப்படும் 80 சதவிகித உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையே. இந்தியாவில் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்கூட பிற நாடுகளிலிருந்து உதிரிப் பாகங்களை வாங்கி, இணைத்து (Assemble) விற்பனை செய்கின்றன. தற்போது சென்னையில் இந்த உபகரணம் தயாரிக்கப்பட்டிருப்பதால், அதன் விலை வெகுவாகக் குறையும். வரும்காலத்தில் சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவிகளைக்கூட நாமே தயாரிக்க முடியும் என்ற நிலை வெகு தூரத்தில் இல்லை" என்றார்.

Dr. S. Aravindan
Dr. S. Aravindan

கோவிட்-19 காலத்துக்குப் பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வசதிகள் குறைவாக இருக்கும் மருத்துவமனைகள், கிராமப்புறப் பகுதிகள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில் இந்த உபகரணத்தை மேம்படுத்துவது தொடர்பான நீண்ட காலத் திட்டமும் இருக்கிறதாம்.

கொரோனா: என்னதான் ஆச்சு சென்னைக்கு?
அடுத்த கட்டுரைக்கு